இந்தேனேஷியாவில் சுனாமி : 281 பேர் பலி

ஆயிரக்கணக்கானோர் காயம்

0 2,165

இந்தேனேஷியாவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்பொன்றினால் ஏற்பட்ட சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில் இருபுறங்களையும் தாக்கியதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், உணவகங்கள் என்பன அள்ளுண்டு சென்றன. இந்த அனர்த்தத்தினால் குறைந்து 281 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 57 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை, 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. அருகாமையில் அமைந்துள்ள கரகட்டாஉ எரிமலையிலிருந்து கடந்த பல வருடங்களுக்கு முன்னர் உருவான அனக் கரகட்டாஉ என்ற எரிமலைத் தீவில் ஏற்பட்ட வெடிப்பினால் கடலின் கீழே ஏற்பட்ட மண்சரிவே சுனாமிக்கு காரணம் என இந்தேனேஷியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவிப் பௌதீகவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி காரணமாகவும் கடல் அலைகள் உருவாகி இருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனர்த்தம் காரணமாக உஜுங் குலொன் தேசியப் பூங்கா, மிகப் பிரபலம் வாய்ந்த கடற்கரைப் பிரதேசங்கள் அமையப்பெற்ற ஜாவாவிலுள்ள பண்டென் மாகாணத்தின் பண்டெலாங் பிராந்தியம் ஆகியன மிகவும் மோசமான பாதிப்புக்களுக்கு இலக்கானதாக அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. பண்டெலாங் பிராந்தியத்தில் மாத்திரம் இறந்தோரின் எண்ணிக்கை 33 ஆகும்.

தெற்கு சுமாத்ராவில் அமைந்துள்ள பந்தர் லம்பங் நகரத்தில் நூற்றுக்கணக்கான பிரதேசவாசிகள் ஆளுநர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சுனாமி அலைகள் சுமார் மூன்று மீற்றர் உயரமாகக் காணப்பட்டதாக பண்டெலாங் பிரதேச வாசியான ஆலிப் தெரிவித்தார். மெட்ரோ தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்த அவர், ஏராளமானோர்  காணமல்போயுள்ள தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகள், தலைகீழாகப் புரண்டிருந்த கார்கள் மற்றும் விழுந்த மரங்கள் போன்றவற்றால் வீதிகள் தடைப்பட்டிருப்பதை தொலைக்காட்சியின் காணொலிகள் காண்பித்தன. உள்ளூர் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது சுனாமி தாக்கியதன் காரணமாக இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதோடு ஏனையோர் காணாமல் போயுள்ளனர்.

டிசம்பர் 25 ஆம் திகதி வரை உயர்ந்த கடல் அலைகள் தோன்றும் என்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதால் பிரதேசவாசிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் சுண்டா நீரிணைக் கரையோரப் பிரதேசங்களிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தயவுசெய்து சுண்டா நீரிணையினை சூழவுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இருக்க வேண்டாம். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டாமென  இந்தேனேஷியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவிப் பௌதிகவியல் நிறுவனத்தைச் சேர்ந்த றஹ்மத் ட்ரையோனோ தெரிவித்தார்.

நேர்வே நாட்டவரான ஒயிஸ்டின் லூண்ட் அண்டர்சன் எரிமைலையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவரை நோக்கி பாரிய அலையொன்று வந்து மோதியதை உணர்ந்து ஓட ஆரம்பித்தார்.

“அடுத்த அலை நான் தங்கியிருந்த ஹோட்டலினுள் நுழைந்ததோடு அதற்கு பின்புறமாக நின்றிருந்த கார்களைப் புரட்டியதோடு வீதியினையும் தகர்த்தது. ஒருவாறு நானும் எனது குடும்பத்தினரும் காட்டுவழிகள் மூலமாகவும் கிராமங்கள் ஊடாகவும் ஒடி உயரமான இடத்தினை அடைந்தோம். நல்லவேளையாக எங்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்களே எங்களை தற்போது பாரமரித்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

“நாம் தற்போது அனர்த்தம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகின்றோம், பாதிக்கப்பட்டோர் மற்றும் சேதங்கள் தொடர்பான எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன” என அனர்த்த முன்னாயத்த முகவரகம் தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தையும் ஜாவா கடலையும் இணைக்கும் சுண்டா நீரிணையில் அமைந்துள்ள அனக் கரகட்டாஉ எரிமலை வெடித்து 24 நிமிடங்களின் பின்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது என இந்தோனேஷியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து தென்மேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 205 மீற்றர் உயரமான எரிமலை கடந்த ஜூன் மாதம் தொடக்கம் குழம்பினை வெளியேற்ற ஆரம்பித்தது. கடந்த ஜுலை மாதம் குறித்த எரிமலையிலிருந்து இரண்டு கிலோமீற்றர் பகுதியினை யாரும் செல்லக்கூடாத பிரதேசமாக அதிகாரிகள் அறிவித்தனர்.

பாரதூரமான சேதத்திற்குள்ளான 430 வீடுகள், ஒன்பது ஹோட்டல்கள் மற்றும் மிக மோசமாக சேதமடைந்த வள்ளங்கள் என்பன பௌதிக பாதிப்புக்களாகக் காணப்படுகின்றன. நீர் நிறைந்துள்ள வீதிகளும் தலைகீழாகப் புரட்டப்பட்ட வாகனங்களையும் காண்பிக்கும் காணொலிகள் அனர்த்த முகாமைத்து முகவரகத் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் பொனேயேவுக்கு கிழக்கே அமைந்துள்ள சுலாவெசி தீவின் பலூ நகரத்தை பூகம்பமும் சனாமியும் தாக்கியதில் 2,500 இற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

புகைப்படங்கள்
https://goo.gl/rvPkuR

 

Leave A Reply

Your email address will not be published.