(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள பயணிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடாகவே பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உப முகவர்களென தங்களைக் கூறிக்கொள்பவர்களுக்கு முற்பணம் வழங்கி ஏமாற வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம். பைஸல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வருடம் ஹஜ் முகவர்களாக 93 பேர் நியமனம் பெற்றுள்ளார்கள். அவர்களது விபரங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களே உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டவர்களாவர்.
இதுவரை இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 2800 பேர் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர். மேலும் 700 பேருக்கு வெற்றிடமுள்ளது. இலங்கைக்கு சவூதி ஹஜ் அமைச்சினால் 3500 கோட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு முன்பு 25 ஆயிரம் பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திணைக்களத்தின் நிகழ்நிலை இணையவழியூடாக ஹஜ் யாத்திரிகர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இதேவேளை இவ்வருடத்திற்கான ஹஜ் முகவர்களுடனான கூட்டமொன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்சார் என்போரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வருடத்துக்கான ஹஜ் யாத்திரை கட்டணம் வழங்கப்படும் சேவைகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
17 இலட்சம் ரூபா, 19 ½ இலட்சம் ரூபா, 23 ½ இலட்சம் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.- Vidivelli