ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும்?
இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் கவலை
நா.தனுஜா
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நாட்டிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவ்வலுவலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அதுமாத்திரமன்றி பிறிதொரு நாட்டில் தமக்குரிய நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறும், இதுவரை காலமும் தமக்கு வழங்கப்பட்டுவந்த மாதாந்தக் கொடுப்பனவை நிறுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
மியன்மாரில் 2017 ஆம் ஆண்டளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் ‘முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான இனவழிப்பு’ என வர்ணிக்கப்படும் படுகொலைகள் போன்றவற்றால் அங்கிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள், பங்களாதேஷுக்குச் சென்றனர். இருப்பினும் பங்களாதேஷ் அகதி முகாம்களின் மிகமோசமான நிலை காரணமாக அங்கிருந்து தப்பிய அகதிகள் இலங்கைக் கடற்பிராந்தியத்துக்கு அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் இலங்கையில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்குரிய மாதாந்த செலவுகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையிலான மாதாந்தக்கொடுப்பனவொன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் அவ்வலுவலகத்தை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (2) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட அகதிகள், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்பட்டால் தமக்கு என்ன நேருமெனத் தெரியவில்லை என்று கவலை வெளியிட்டனர்.
‘எமக்கான உணவு, தங்குமிடம், உடைகள், தொடர்பாடல், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு அவசியமான மாதாந்தக்கொடுப்பனவை ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வழங்கிவந்தது’ என்று சுட்டிக்காட்டிய அவர்கள், அவ்வலுவலகம் மூடப்படின் பிறிதொரு நாட்டில் தாம் குடியேறுவதற்கான வாய்ப்போ அல்லது தமக்கான நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்போ கேள்விக்குள்ளாகும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தம்மை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுத்தரவேண்டும் அல்லது தாம் புதிய வாழ்வைத் தொடங்கக்கூடியவகையில் தம்மை மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனவும், இம்மூன்றில் ஏதேனுமொரு தீர்வைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ரோஹிங்கிய அகதிகள் வலியுறுத்தினர். அத்தோடு இவ்விடயங்களை வலியுறுத்தி ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் அவர்கள் மகஜரொன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli