(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அக்குறணை நகர் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களின் போது களத்தில் உத்தியோகபூர்வ ஒழுங்கில் பணியாற்றுவதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஒன்று அக்குறணையில் நிறுவப்பட்டுள்ளது.
இப்பிரிவு ஆரம்பக் கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை அக்குறணை நகரை ஊடறுத்துச் செல்லும் ஆற்றினை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆரம்பக்கட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் அக்குறணையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினை நிறுவும் கூட்டம் அண்மையில் அஸ்னா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜிதுகள் சம்மேளனம், அக்குறணை வர்த்தகர் சங்கம் ,கலாசார குழு, முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், தஃவா அமைப்புகள் மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பிரதேசங்களை அண்மித்துள்ள மஸ்ஜிதுகள் என்பனவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மூன்று பிரதான பகுதிகளை உள்ளடக்கியதாக செயற்படவுள்ளது. இப்பிரிவு முன்னேற்பாடுகள் எதிர்கொள்ளல் மற்றும் மீள்தல் எனும் மூன்று பிரதான பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
மழைக்காலத்தில் ஆற்றுக்கு வந்து சேர்கின்ற நீரைக் குறைப்பதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல் ,வெள்ள அபாய பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தல், நிர்மாணப் பணிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் சூழலை மாசுப்படுத்தல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் போன்ற செயற்றிட்டங்கள் முன்னேற்பாடுகள் உப குழுவினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்தோடு வெள்ள அனர்த்தங்களின் போது களத்தில் இருந்து வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணுதல், மாற்று வீதி ஒழுங்குகளை வகுத்து நெறிப்படுத்தல், நோயாளர்கள் மற்றும் அவசர நிலைமைகளுக்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் எதிர்கொள்ளல் உப குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல், தொண்டர் படையணியை வழிகாட்டுதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடி நீர் வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் இழப்புகள் பற்றி தகவல்களைத் திரட்டி உரிய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை ‘மீள்தல்’ உபகுழுவினூடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்வருவோர் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர்:எம். வை.எம்.ரம்ஸான், உப தலைவர்கள்: அஷ்ஷெய்க் ஏ.எம்.சியாம், ஜே.பைரூஸ் முஹம்மத், செயலாளர்: ஏ.சி.எம்.பஸ்லான் உப செயலாளர்: நஸ்லான் ரஷீத், பொருளாளர்: எம்.எஸ்.எம்.ரஸ்லான். ‘முன்னேற்பாடுகள்’ உபகுழு பொறுப்பாளர்: அஷ்ஷெய்க் வை.எம்.மாஹிர், எதிர்கொள்ளல் உபகுழு பொறுப்பாளர்: ரியாஸ் ஷஹீத், ‘மீள்தல்’ உப குழு பொறுப்பாளர்: எம்.ரீ.அரூஸ் முஹம்மத் என்போராவர்.
- Vidivelli