2024 ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அனர்த்தங்களுடனேயே பிறந்துள்ளது. கடும் மழை, வெள்ளம், மண்சரிவு அபாயம் மற்றும் மினி சூறாவளி போன்ற அனர்த்தங்களுக்கு நாட்டின் பல மாகாணங்கள் முகங்கொடுத்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களுக்கமைய ஊவா, சப்ரகமுவ, கிழக்கு, மத்திய, வட மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்கள் இந்த அனர்த்தங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நேற்று மாலை வரையான புள்ளிவிபரங்களுக்கமைய 9573 குடும்பங்களைச் சேர்ந்த 33286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் 459 வீடுகளும் சேதமடைந்துள்ளன. தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறிய மக்கள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புது வருடம் பிறந்த கையோடு மக்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும். அதேபோன்றுதான் கடும் மழை காரணமாக ஆயிரக் கணக்கானோர் தொழில்களையும் இழந்துள்ளனர்.
வற் வரி அதிகரிப்பு காரணமாக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்றுதான் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பல பகுதிகள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதானது மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனினும் எமது நாட்டின் அரச கட்டமைப்பு இன்று ஏற்பட்ட வெள்ளத்திற்கு பல வாரங்கள் கழித்தே நிவாரணம் வழங்கும் என்பதே நிதரிசனமாகும். அந்த வகையில் தொண்டு நிறுவனங்களும் சிவில் அமைப்புகளும் தம்மால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். தற்போதும் கூட தன்னார்வ தொண்டர்களும் சில நிறுவனங்களும் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மிகவும் நெருக்கடிமிக்க இக் காலப்பகுதியில் மேலும் பல அமைப்புகளும் தனவந்தர்களும் முன்வந்து மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
அதேபோன்றுதான் நாம் அடிக்கடி வலியுறுத்துகின்ற ஒரு விடயமே இயற்கை அனர்த்தங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் அரச கட்டமைப்புக்குப் புறம்பாக ஓர் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இயங்க வேண்டும் என்பதாகும். அனர்த்தம் ஒன்று ஏற்பட்ட பிற்பாடு ஆர்வமுள்ளவர்கள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டுவதை விட ஏலவே அதற்குத் தயாராகவிருப்பதானது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்கு ஏதுவாகும். அந்த அடிப்படையில் பள்ளிவாசல்களை மையப்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளை ஸ்தாபிக்க வேண்டியது அந்தந்தப் பகுதி செயற்பாட்டாளர்களின் கடமையாகும்.
அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அக்குறணை நகரில் தற்போது இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கென தனியான அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இதேபோன்ற கட்டமைப்புகள் ஏனைய பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முடியுமாகவிருப்பதுடன் அனர்த்தங்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து அனைவரும் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.- Vidivelli