ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கையை வழங்கியது ஜனாதிபதி செயலகம்
ஏ.ஆர்.ஏ.பரீல்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதியின் செயலணியினது இறுதி அறிக்கை ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த அறிக்கையை ஜனாதிபதி செயலகம் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் தகவல் அறியும் சட்டம் ஊடாக விடிவெள்ளி இவ் அறிக்கையின் பிரதியைத் தருமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு இதனை வழங்க முடியாது என ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கியிருந்தது.
இந்த பதிலில் திருப்தியுறாத விடிவெள்ளி இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்தது. இம் மேன்முறையீடு தொடர்பான அமர்வுகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெற்று வந்த நிலையில் 2023.11.01ஆம் திகதி நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையின்போது இவ் அறிக்கையின் முதலாம் பாகத்தை விடிவெள்ளிக்கு வழங்க ஜனாதிபதி செயலகம் இணக்கம் தெரிவித்தது. எனினும் சாட்சியங்களை உள்ளடக்கிய இரண்டாம் பாகத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 2 ஆம் பாகமும் வழங்கப்பட வேண்டும் என விடிவெள்ளி கோரியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அறிக்கையின் முதலாம் பாகம் 133 பக்கங்களைக் கொண்டுள்ளது. இவ் அறிக்கை 8 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது.
இலங்கையில் பொதுவாக அமுலிலுள்ள நீதிக்கட்டமைப்பும் அதன் வரலாறும் முதலாவது அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கையில் நடைமுறையிலுள்ள விசேட சட்டங்கள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எண்ணக்கருவுக்கு அமைவாக சட்டங்களின் நிலைமை, கண்டியர் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பன உள்ளடங்கியுள்ளன. மற்றும் முஸ்லிம் சட்டத்தில் தலாக், விவாகரத்து, காதி நீதிமன்ற முறைமை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் என்பனவும் உள்ளடங்கியுள்ளன.
மேலும் தேச வழமைச் சட்டம், கண்டியர் சட்டம், முஸ்லிம் சட்டத்தில் விவாகரத்து தொடர்பில் நடைமுறையிலுள்ள விடயங்கள் என்பனவும் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ளன.
பல்வேறு தராதரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பான நடைமுறையிலுள்ள வேறுபாடுகள் தொடர்பான விபரங்கள் மூன்றாம் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ளன. சிறைக் கைதிகள், ஆதிவாசிகள் சமூகம், மாற்றுத் திறனாளிகள் சமூகம், குல வேறுபாடுகளுள்ள சமூகம், சம பாலுறவு சமூகம் எனும் விபரங்களும் அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் ‘இத்தா’ கால விடுமுறை தொடர்பான விபரங்களும் அடங்கியுள்ளன.
முஸ்லிம் பெண் ஒருவரின் கணவர் மரணித்த பின்பு வழங்கப்படும் நான்கு மாதங்கள் 10 நாள் விடுமுறை (இத்தா), விவாகரத்து வழங்கப்பட்ட பின் வழங்கப்படும் 3 மாத கால இத்தா விடுமுறை என்பன இரத்துச் செய்யப்பட்டு அரச சேவையிலுள்ள ஏனைய இன பெண்களுக்கு வழங்கப்படும் விடுமுறை மாத்திரமே முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென இச் செயலணி சிபாரிசு செய்துள்ளது.
இலங்கையில் பெண்களின் நிலைமை தொடர்பான அவதானிப்புகள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ளன.
சமூகத்தை அடிப்படைவாதத்தின் பால் ஈர்க்கச் செய்யும் செயற்பாடுகள் குறித்து ஐந்தாம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிதலை தடை செய்தல், ஹலால் சான்றிதழ் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சிபாரிசினை அமுல்படுத்தல், சட்டரீதியற்ற மத மாற்றங்களை தடை செய்தல், வஹாபிஸத்தை பரப்புவதற்கு சமய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்கள், இன, மத ரீதியாக மற்றும் பிரதேசவாரியாக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் மற்றும் நடத்துதலைத் தடுத்தல் என்பனபற்றி இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் நீதிமன்றம் மூலம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யும் வரை பதவிகள் வகிப்பதை தவிர்த்தல் போன்ற சிபாரிசுகள் 6ஆவது அத்தியாயத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் சில 7ஆவது அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சிபாரிசும் இவ் அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது அத்தியாயத்தில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எண்ணக் கருவை அமுல்படுத்துவது தொடர்பில் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் பல சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் சொத்துகள், உடமைகள் என்ன? அவற்றின் பெறுமதி பற்றிய விபரங்களை பொதுமக்கள் பரிசீலனை செய்யும் வகையில் அந்த விபரங்களை இணையவழி கட்டமைப்புக்குட்படுத்தல், தமிழீழ யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்றுக் கொடுத்தல், தொல்பொருள் பிரதேசங்களில் மத மற்றும் கலாசார சக வாழ்வினைப் பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பன போன்ற சிபாரிசுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி
இச்செயலணி முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இல. 2251/30 மற்றும் 2021 அக்டோபர் 26ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின்படி நிறுவப்பட்டது.
இச்செயலணிக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக 13 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் மௌலவி எம்.இஸட்.ஏ.எஸ்.மொஹமட் என்பவர் மாத்திரமே அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை செயலணியில் முஸ்லிம் உறுப்பினராக இருந்தார். எனினும் இவர் அறிக்கையின் சிபாரிசுகளில் 01, 05, 06, 15, 21 என்பவற்றைத் தவிர்த்து ஏனைய சிபாரிசுகளுக்கு கையொப்பமிட்டுள்ளார். இவ்விபரங்கள் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் உறுப்பினர்
கையொப்பமிடாத சிபாரிசுகள்
முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிவது தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறான ஆடை அணிவதன் மூலம் அவர்கள் அடிப்படைவாதத்துக்கு உட்படும் சந்தர்ப்பம் உருவாகிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பெண்கள் முகம், கைகள் மற்றும் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிய வேண்டுமென பத்வா வழங்கியுள்ளது.
பொது இடங்களில் முகத்தை பூரணமாக மறைத்து ஆடை அணிந்து நடமாடுவது தடை செய்யப்பட வேண்டும். முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிவது குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவினால் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
கடைகளிலும் விற்பனை நிலையங்களிலும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் ஹலால் சான்றிதழ் அற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும்.
வஹாபிஸம் மற்றும் அடிப்படைவாதம் இது தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அறிஞரொருவர் அல்லது இஸ்லாமிய அமைப்பொன்றின் மூலம் ‘பத்வா’ என்ற பெயரில் வழங்கப்படும் மத தீர்ப்புகள் அடிப்படைவாதத்தை வளர்க்கின்றமையால் அவ்வாறான மார்க்கத் தீர்ப்புகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
நியாயமற்ற முறையில் மதமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் வறுமை நிலையினைப் பயன்படுத்தி அவர்களுக்கு பல்வேறு பொருளாதார வசதி வாய்ப்புகளை வழங்கி இவ்வாறு மதம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான மத மாற்றங்களுக்கு அதிகமாக பௌத்த, இந்து மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ மத பிரிவுகள், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே முறையற்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இன, மத ரீதியிலான மற்றும் பிரதேச ரீதியிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். அத்தோடு தற்போது செயற்படும் இவ்வாறான அரசியற் கட்சிகள் தேசிய கட்சிகளாக மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான கால எல்லைக்குள் மாற்றம் பெறாத அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.
தண்டனைச் சட்டக் கோவை 365 மற்றும் 365A பிரிவின்படி சமபாலின சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது நீக்கப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நாட்டில் வாழும் சம்பிரதாய முஸ்லிம் குழுவொன்று இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பு முழுமையாக செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். இது பற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அதிகாரியொருவரினால் உலமா சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பனவே குறிப்பிட்ட முஸ்லிம் உறுப்பினர் உடன்படாத, கையொப்பமிடாத சிபாரிசுகளாகும்.
செயலணிக்கான செலவு
43 இலட்சங்கள்
இதேவேளை ‘விடிவெள்ளி’ சமர்ப்பித்த தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்காக அரச நிதியிலிருந்து 43 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 2021.10.26ஆம் திகதி முதல் 22.06.17 ஆம் திகதி வரை இச்செயலணி இயங்கியதாகவும் இச்செயலணிக்காக அரசாங்கத்தின் திரண்ட நிதியிலிருந்து 43 இலட்சத்து 22 ஆயிரத்து 589 ரூபா 44 சதம் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அலுவலர் எஸ்.கே.ஹேனாதீரவினால் வழங்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. – Vidivelli