சிறு வயது மாணவர்களுக்கு விடுதி முறைமை பொருந்தாது

மூடப்பட்டுள்ள மத்ரசா கல்வி முறைமை திறந்து விடப்பட வேண்டும் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணர் ரயீஸ் முஸ்தபா

0 1,149

மாணவர்களை சிறு வய­தில் மத்ரஸா விடுதிகளில் தங்க வைத்து படித்துக் கொடுப்பது பிழையானது. மாணவர்கள் பாடசாலைக் கல்வியுடன் சேர்த்து சமாந்திரமாக குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும் வரை தாய் தந்தையருடனே இருக்க வேண்டும். க.பொ.த. (சா/த) சித்­தி­ய­டைந்த பிறகு விடுதிகளில் இருக்கலாம். இவ்வாறான வழிமுறை பின்பற்றப்பட்டிருந்தால் சாய்ந்தமருது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கொலைச் சம்­பவம் இடம்பெற்றிருக்க முடியாது’ என சிறுவர் நோய் நல விஷேட மருத்துவ நிபு­ணர் ரயீஸ் முஸ்தபா தெரிவித்தார்.
சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு வழங்­கிய நேர்காணல்க­ளி­லே­யே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் மத்ரஸா முறைக்கு எதிரானவனல்ல. மத்ரஸாக்கள் மேலும் கட்டப்பட வேண்டும். மத்ரஸா முறைக்கூடாக தான் சமூகத்தில் சுமார் 10 வீதமானோர் ஷரீஆவைப் படித்து வெளியேறுகிறார்கள். மத்ரஸாக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் மத்ரஸா கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

பாடசாலைக் கல்வியின் போது எனக்கு இஸ்லாத்தையும் ஷரீஆவையும் படிக்க கிடைக்கவில்லை. அதனால் நான் இன்று எனது 55ஆவது வயதிலும் ஷரீ­ஆவைப் படிக்­கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காலகட்டத்தில் நவீன துறைகளு­டன் மார்க்கக் கல்வியையும் கற்க வேண்டும். மத்ரஸாக்களில் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம் போன்ற விடயங்கள் பற்றி நாம் பேச வேண்டும்.

Q: கொலை சம்பந்தமாக பின்னணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மத்ரஸாக்களில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் இவ்வாறு நடக்கிறது. பாடசாலைகள், வீடுகளில் இது நடக்கிறது. எல்லா சமூகங்களிலும் நடக்கிறது.

எனது துறை நோய் நல விஷேட மருத்துவம். சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் எனது பொறுப்பு. பல்வேறு இடங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கிறது. சிறுவர் துஷ்பிரயோகத்தை மாத்திரமல்ல மத்ரஸாக்களில் எவ்வாறு கல்வி போதிக்கப்படுகிறது என்பதனையும் நாம் ஆராய வேண்டும். மத்ரஸாக் கல்வியை மேலும் விஸ்தரிக்கலாம். சீர்திருத்தலாம். குடும்ப சூழ்நிலையினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும்.

குர்ஆன் கல்வி வேண்டாம், பாடசாலைக் கல்வி மாத்திரம் தான் வேண்டும் என்று எம்மால் கூறமுடியாது.

Q; நீங்கள் மத்ரஸாக்களுக்கு எதிரானவரா?

நிச்சயமாக இல்லை. மத்ரஸாக்கள் மேலும் கட்டப்பட வேண்டும். அதிகரிக்கப்பட வேண்டும். மத்ரஸாக்கள் மூலம் சுமார் 10 வீதமானவர்களே குர்ஆன், ஷரீஆவைப் படித்து வெளியேறுகிறார்கள். மத்ரஸாக்களை விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் 10 வீதமானவர்களுக்கு மத்திரமல்ல அனைத்து மாணவர்களுக்கும் சமயக்கல்வி வழங்கப்பட வேண்டும்.

நான் மத்ரஸாவில் படிக்கவில்லை. எனக்கு குர்ஆன் படிக்க ஆசை. ஷரீஆ படிக்க ஆசை. அது எனது ஆசை மாத்திரமல்ல, அது எனது கடமை. இதனை விளங்கிய நாளிலிருந்து நான் படிக்கிறேன். நான் புகையிரதத்தில் தினம் ஒரு மணி நேரம் பயணிக்கிறேன். அந்த நேரத்தை குர்ஆன் மற்றும் இஸ்லாம் படிப்பதற்கு செலவிடுகிறேன். நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எனக்கு குர்ஆன், ஷரீஆவைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அத­னால் இப்போது 55 ஆவது வயதில் புகையிரதத்தில் படிக்கிறேன்.

அடுத்த தலைமுறைக்கு இப்படி நடக்கக் கூடாது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காலத்தில் அவர்கள் மத்ரஸாக்களுக்கு சென்று நவீன துறைசார் மார்க்கக் கல்வியை கற்க வேண்டும். எனவே மத்ரஸாக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். துறைசார் ரீதியில் மேம்படுத்தப்பட வேண்டும். நான் மத்ரஸாக்களுக்கு எதிரானவனல்ல.

Q: மத்ரஸா மாணவர்கள் விடுதி (ஹொஸ்டல்) முறைக்கு உட்படுத்தக் கூடாதென நினைக்கிறீர்களா?

ஆம். நிச்சயமாக. நான்கு வருடங்கள் தங்க வைத்து படித்துக்கொடுப்பது பிழையானது. மாணவர்கள் பாடசாலைக் கல்வியுடன் சேர்த்து சமாந்திரமாக குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வியை கற்க வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும் வரை தாய் தந்தையருடனேயே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு விடுதிகளில் இருக்கலாம். க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்த பின்னர் விடுதிகளில் இருக்கலாம்.

எல்லோருக்கும் ஷரீஆ கல்வி தேவை. சாய்ந்தமருது மாணவன் காலையில் பாடசாலைக்கு சென்று கல்வி கற்றிருக்கலாம். மாலையில் மத்ரஸாவுக்கு சென்று குர்ஆன் கற்றிருக்கலாம். மாலையிலிருந்து இஷா வரையில் குர்ஆனைப் படித்திருக்கலாம். ஷரீஆ படித்திருக்கலாம். அதன் பின்பு வீட்டுக்கு சென்றிருக்கலாம். தாய், தந்தையருடன் இருந்திருக்கலாம். காலையில் பெற்றோர் தனது பிள்ளையை வாழ்த்தி பாடசாலைக்கு அனுப்பி வைக்கலாம். இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையின் கீழ் நாம் மத்ரஸாக்களில் விடுதிகள் வைத்திருக்கத் தேவையில்லை. சாப்பாடும் வீட்டிலேயே சாப்பிடலாம்.

விடுதிகள் நடத்தி சாப்பாட்டுக்கு செலவிடும் பணத்தை கல்வி மேம்பாட்டுக்கு செலவளிக்கலாம். இதன்மூலம் மார்க்க, ஷரீஆ கல்வியை மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விரிவுபடுத்தலாம்.

மத்ரஸாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மத்ரஸாக்களில் விடுதிகளில் மாணவர்கள் பயில்வதால் அவர்களுக்கென்று நாளாந்தம் பாரிய அளவில் நிதி செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஊர்களில் இருக்கும் மத்ரஸாக்கள் அந்த ஊர் மாணவர்களுக்கானதாக இருக்க வேண்டும். சாய்ந்தமருது மத்ரஸாவில் சாய்ந்தமருது மாணவர்கள் பயில வேண்டும். காத்தான்குடி மத்ரஸாவில் காத்தான்குடி மாணவர்கள் பயில வேண்டும்.
நாம் ஒவ்வொரு ஜமாஅத்தினருக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஏசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் இதனை ஆன்மிகமாகப் பார்க்க வேண்டும். உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும். நாட்டிலுள்ள பிரபல கல்லூரிகளின் தரத்துக்கு மத்ரஸாக்களை மாற்ற வேண்டும்.

Q: மத்ரஸாக்களை மேம்படுத்துவதற்கு உலமா சபை உட்பட புத்திஜீவிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?

எனக்கோர் கவலை. ஏன் மக்கள் இதனை குறுகிய பார்வையில் பார்க்கிறார்கள். இவர்களது சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறான கொலைகள் நடைபெறாமலிருப்பதற்கு எமது சமூகத் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். முன்னின்று செயற்படுவதற்கு அப்ரர் பவுண்டேசன் தயார்.

இது சமூகப் பிரச்சினை. இவ்விடயங்களுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் சரியான தீர்வுகள் வழங்கப்படாமையினாலே சஹ்ரான் போன்றவர்கள் உருவாகினார்கள்.

இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மனந்திறந்து பேச வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆழமாகப் படிப்போம். குர்ஆனை விளங்குவோம்.

மூடிய நிலையில் இருக்கும் மத்ரஸா கல்வி முறைமையை திறந்து விடுங்கள் என்றே நான் கூறுகிறேன். அப்ரார் பவுண்டேசன் கலந்துரையாடலுக்கு தலைமைத்துவம் வழங்கத்தயாராக இருக்கிறது.

Q: உலமாக்களையும், ஷரீஆ கல்வியையும் விமர்சிப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

இது மிகவும் பிழையானது. தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விடயம். சமூகத்தை ஓரளவாவது பாதுகாத்துக் கொண்டிருப்பது உலமாக்களே. எங்களுக்கும் குர்ஆன் ஷரீஆ படித்துத் தந்தவர்கள் உலமாக்கள் தான். அவர்களை நாம்தான் படித்தவர்கள் என்று நினைத்து ஏசுவதோ, விமர்சிப்பதோ கூடாது. அது நிறுத்தப்பட வேண்டும்.

உலமாக்கள் மத குருக்களாக, மத பீடமாக உருவாக முடியாது. இது கிறிஸ்தவ முறைமையாகும். மத குரு, மதபீடம் என்ற சிந்தனையை இல்லாமற் செய்ய வேண்டும். துறைசார் கல்வியும் மார்க்கக் கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைய வேண்டும். கல்வி முறைமை இவ்வாறு மாற்றம் பெற வேண்டும்.

பெயர்போன மத்ரஸாக்களில் பட்டப்பின் கல்வி போதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் சமாந்திரமான கல்வி போதிக்கப்பட வேண்டும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.