எம்.எல்.எம்.மன்சூர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் 75 ஆவது பிறந்தநாளையொட்டி அவருடைய வாழ்வையும், பணிகளையும் நினைவுகூரும் ஒரு நிகழ்வு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.
அஷ்ரப் தனது அரசியல் வாழ்வின் பிற்காலத்தில் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணி (NUA) என்ற கட்சியை தற்பொழுது தன் கைவசம் வைத்திருக்கும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ஆசாத் சாலி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர், பாராளுமன்றத்தின் சபாநாயகர், பல் சமயத் தலைவர்கள், பெருந்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் ஆகியோரையும் உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். மறைந்த அமைச்சரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினரும் அங்கிருந்தார்கள்.
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கையின் அரசியல், பாதைகள் பிரியும் மிக முக்கியமான ஒரு வரலாற்றுத் தருணத்தில் வந்து நிற்கும் ஒரு பின்புலத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும். அரசியல் களத்தில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தெளிவற்ற நிலையும், ஒரு விதமான குழப்பமும் நிலவி வரும் சூழ்நிலையில் அடுத்து வரும் தேர்தல்களில் ‘யாருக்கு வாக்களிப்பது’ என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியாத ஒரு பெரும் தடுமாற்ற நிலையில் இலங்கை மக்கள் இருந்து வருகிறார்கள். அதே வேளையில், பிரதான கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டுக்களை உருவாக்கிக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தி வரும் சிறு கட்சிகளும் ‘யாருடன் கூட்டுச் சேருவது‘ என்பதனை தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
மறுபுறம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட ஒரு போதும் இல்லாதவாறான ஒடுக்குமுறை மற்றும் அறகலய மக்கள் எழுச்சியுடன் இணைந்த விதத்தில் ‘இன மத நல்லிணக்கத்துடன் கூடிய ஒரு புதிய இலங்கை தேசம்’ தொடர்பாக துளிர்த்திருக்கும் நம்பிக்கைகள் என்பவற்றின் பின்னணியிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு நிகழ்ச்சியில் கட்டாயமாக யார் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அவர்கள் அவ்விடத்தில் இல்லாதிருப்பதனை ஆங்கிலத்தில் `Conspicuous by Absence’ என்று சொல்வார்கள். அதாவது, ‘அந்த இடத்தில் இல்லாதிருப்பதன் காரணமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள்’ என்று சொல்லலாம். அந்த வகையில், 1988 தொடக்கம் 2000 வரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அஷ்ரப்பின் சக பயணிகளாக இருந்து வந்த பல பிரமுகர்களை அங்கு காண முடியவில்லை. அதே போல, கிழக்கிலும், வன்னியிலும் அவர் உருவாக்கிக் கொடுத்த முஸ்லிம் வாக்கு வங்கியை இப்பொழுது தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் (மறைந்த தலைவரின் பணிகளை அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்வதாக கூறிக் கொள்வதுடன், அவரை நினைவு கூர்ந்து புறம்பாக நினைவேந்தல்களை நடத்தி வரும்) இரண்டு முக்கிய தலைவர்களையும் அங்கு காண முடியவில்லை.
பல விஷயங்களிலும் துணிச்சலான விதத்தில் தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆசாத் சாலி, நிகழ்வை ஏற்பாடு செய்தவர் என்ற முறையில் இதற்கொரு விளக்கத்தை அளித்திருக்க வேண்டும். SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகள் தற்போது முன்னெடுக்கும் முஸ்லிம் அடையாள அரசியல், ‘நுஆ’ வுக்கு ஊடாக அஷ்ரப் முன்னெடுக்க விரும்பிய அரசியலிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதனை யாராவது விளக்கிக் கூறியிருக்கலாம்.
ஒரு தலைவர் மறைந்த பின்னர் இவ்விதம் வருடாந்தம் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளின் முக்கிய நோக்கம் அவருடைய வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பிடுவதாகும். ஆங்கிலத்தில் அதனை `Legacy’ என்று சொல்வார்கள். அதாவது, அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் (நல்லவையும், மோசமானவையுமான) விடயங்கள் மற்றும் சமகால வரலாற்றில் அவர் உருவாக்கும் தாக்கம் என்பவற்றை அப்படிச் சொல்லலாம்.
பிரபாகரன் மற்றும் அஷ்ரப் ஆகிய இருவரினதும் வரலாற்றுப் பாத்திரங்கள் (Legacies) முறையே இலங்கை தமிழ் அரசியலிலும், முஸ்லிம் அரசியலிலும் மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவை. சொல்லப் போனால் இன்றும் கூட வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் இவ்விருவரும் விட்டுச் சென்றிருக்கும் விழுமியங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. தத்தமது சமூகங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் அவ்விருவரினதும் வகிபாகங்கள் தொடர்பாக விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகள் (Objective Analysis) எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ‘பெருந்தலைவர்’, ‘மாமனிதர்’ போன்ற முன்னொட்டுக்களுடன் தலைவர்கள் திருநிலைப்படுத்தப்படும் பொழுது அவர்கள் தொடர்பாக கறாரான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அநேகமாக ‘துரோகிகளாகவே‘ பார்க்கப்படுகின்றார்கள். இலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பொதுப் புத்தி சார்ந்த நிலைப்பாடுகள் இன்னமும் அவ்விதமாகவே இருந்து வருகின்றது.
இந்நிகழ்வின் பெரும்பாலான உரைகள் ஆங்கில மொழியில் நிகழ்த்தப்பட்டமை அதற்கு ஓர் அந்நியத்தன்மையையும், மேட்டிமைத் தோரணையையும் வழங்கியது. அமான் அஷ்ரப் தனது தந்தையின் நற்பண்புகளை எடுத்துக் கூறி விட்டு, ஆசாத் சாலிக்கு நன்றி தெரிவித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.
‘நுஆ’ கட்சியின் எதிர்கால திட்டங்கள் எவை, அஷ்ரப்பின் நோக்கும் பணிகளும் (Vision and Mission) எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும், SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகள் செய்து வரும் அரசியல் குறித்த ‘நுஆ’ வின் (அல்லது அமான் மற்றும் பேரியல் போன்றவர்களின்) நிலைப்பாடு என்ன என்பன போன்ற விடயங்கள் அங்கு பேசப்படவில்லை. முக்கியமாக, ‘அனைவரையும் அரவணைக்கும் ஐக்கிய இலங்கை’ (Inclusive United Sri Lanka) என்ற அஷ்ரப்பின் கனவை நனவாக்குவதற்கு ‘நுஆ’ என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது குறித்து ஆசாத் சாலியோ அல்லது அஷ்ரப் அமானோ ஒன்றும் சொல்லவில்லை.
‘எவருடைய மனதையும் புண்படுத்தாத, எவருடைய பெயரையும் குறிப்பிடாத கண்ணியமான கனவான் இயல்பிலான’ பேச்சுக்கள் அரசியலுக்குப் பொருந்துபவை அல்ல. அந்த வகையான பேச்சுக்களை நிகழ்த்துவதோ அல்லது திட்டவட்டமான ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய/ நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணத்தை வெறும் புன்னகையுடன் கடந்து செல்வதோ அரசியல் அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள் செய்யக் கூடாத காரியங்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது உரையில் அஷ்ரப்பின் வசீகரமான ஆளுமை, தலைமைத்துவப் பண்புகள், பன்முகத் திறன்கள், தேசிய நல்லிணக்கத்துக்கான அவருடைய பங்களிப்புக்கள் போன்ற விடயங்களை தொட்டுச் சென்றார். அதே வேளையில், ‘அஷ்ரப்பின் அகால மரணம் குறித்து இன்னமும் எனக்கு சந்தேகம் இருக்கின்றது’ என அதிரடியாகச் சொன்ன அவர் ‘சமாதானத்தை விரும்பாத சில சக்திகள் அதன் பின்னணியில் இருந்திருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால், சமாதானத்தை விரும்பாத அந்தச் சக்திகள் எவை என்பதனை அவர் திட்டவட்டமாக கூறவில்லை.
ஆனால், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் சந்திரிகா தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். தேசிய உளவுப் பணியகம், இராணுவ உளவுப் பிரிவு மற்றும் சிஐடி என்பன முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த அமைப்புக்கள். நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் தனக்கிருந்த அபரிமிதமான அதிகாரங்களை பயன்படுத்தி, அரநாயக்கவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பான மர்மத்தை அந்த அமைப்புக்களுக்கு ஊடாக துலக்கிக் கொள்வதற்கு தன்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதனையும் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உரையில் தனக்கும், பேரியலுக்கும், ஆசாத் சாலிக்குமிடையில் இருந்து வரும் பொதுவான ஒரு அம்சத்தை மிகவும் சுவாரசியமாகக் குறிப்பிட்டார் (மூவரும் கம்யூனிஸ்டு அப்பாக்களின் பிள்ளைகள்). அவர் சுட்டிக் காட்டிய முக்கியமான ஒரு விடயம் பாராளுமன்றத் தேர்தலில் பின்பற்றப்படும் 5% வெட்டுப் புள்ளி தொடர்பான சர்ச்சை (ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேரம் பேசி, முன்னர் 12.5% ஆக இருந்து வந்த வெட்டுப் புள்ளியை 5% ஆகக் குறைக்கச் செய்தது அஷ்ரப்பின் அரசியல் வாழ்க்கையின் முக்கியமான ஒரு மைல் கல்).
ஜேவிபி போன்ற கட்சிகளினதும், சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்கள வலதுசாரி சக்திகள் இந்த 5% வெட்டுப் புள்ளி மீண்டும் பழைய அளவான 12.5% க்கு உயர்த்தப்பட வேண்டுமென இப்பொழுது பரப்புரை செய்து வருகின்றன. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மாவட்ட மட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளே பொதுவாக அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்கின்றன. அதன் காரணமாக, அவற்றுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையிலான எம்பி க்களும் கிடைக்கின்றனர். தேசப்பிரிய சுட்டிக் காட்டிய ஒரு விடயம், அவ்விதம் அதிக எம்பி க்களை அக்கட்சிகள் பெற்றுக் கொள்ளும் பொழுது பட்டியலில் கடைசியில் வரும் சிலர் 12.5% த்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் பிரவேசிக்கிறார்கள் என்பது. ஆகவே, வலதுசாரிகளின் வாதத்தை இதன் மூலம் தேசப்பிரிய முறியடிக்கிறார்.
வாக்கு வங்கி எதுவுமில்லாத, பதிவு செய்யப்பட்ட வெறும் பெயர்ப் பலகை கட்சியொன்றை வைத்திருப்பது இலங்கை அரசியலில் உயர் ஆதாயங்களை எடுத்து வரக் கூடிய ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது என்பதனை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. 2020 பாராளுமன்றத் தேர்தலின் போது பொதுபல சேனாவுக்கு தனது கட்சியை வாடகைக்கு விட்டு ‘அபே ஜனபலய’ என்ற கட்சியை பதிவு செய்து வைத்திருந்த பிக்கு பயனடைந்தார். அதே போல, ‘சமகி ஜன பலவேகய’ என்ற தனது கட்சியை சஜித் அணிக்கு வாடகைக்கு விட்டு, அதன் மூலம் எம்பி மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் டயனா கமகே.
எதிர்கால தேர்தலொன்றில் அநேகமாக அந்த நல் வாய்ப்பு ஆசாத் சாலிக்கும் கிடைக்க முடியும். ஒரு ஆளுநர் பதவி அல்லது தேசிய பட்டியல் எம்பி போன்றவற்றுக்காக பேரம் பேசக் கூடிய ஒரு நிலை (அநேகமாக தேர்தலொன்றுக்கு முன்னர் அல்லது பின்னர்) உருவாக முடியும். அதைத் தவிர, இப்போதைக்கு இலங்கை அரசியலில் ‘நுஆ’ ஒரு பொருட்படுத்தக் கூடிய சக்தியாக எழுச்சியடைவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவில்லை.
அஷ்ரப்பின் பெருமைமிகு `Legacy’ யை வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் சக்தியை தொடர்ந்தும் தம் வசம் வைத்துக் கொண்டிருக்கும் SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகளுக்கு எந்த விதத்திலும் அது ஒரு சவாலாக இருந்து வரவும் முடியாது. – Vidivelli