மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை விரைவில் மீளத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் நேரில் விஜயம் செய்து கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை விரைவில் மீளத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிசாத் பதியுதீன் கடந்த செவ்வாய்க்கிழமை மஹர பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.அதன் பின்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் இப்பிரதேச மக்களுக்காக 1903இல் நிர்மாணிக்கப்பட்டது. நூற்றாண்டுகால வரலாறு கொண்ட பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாழும் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் மார்க்கக் கடமைகளைத் தொடர முடியாதுள்ளனர். ஐவேளை தொழுகை ஜும்ஆ தொழுகை மற்றும் ஜனாஸாத் தொழுகைகளை நடத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர்.இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் பேசிய போதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.இதனாலே இவ்விடயத்தில் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறோம். மூடப்பட்டுள்ள பள்ளி மீண்டும் திறக்கப்பட வேண்டும் இல்லையேல் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணிக்க காணி வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன்.
பள்ளிவாசல் மீளத்திறக்கப்பட வேண்டுமென இப்பகுதி சிங்கள மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.நான்கு வருடங்களாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.இப்பிரச்சினை அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார். – Vidivelli