காஸா மீது இஸ்ரேல் வான் வழியாகவும் தரை வழியாகவும் 11 ஆவது வாரமாகவும் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளன. அத்துடன் தாக்குதல்கள் ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நேற்று வரை 20 இலட்சம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். நேற்றைய தினம் ஜபாலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் 46 பலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரபாஹ் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்று நேற்று விமானக் குண்டுத் தாக்குதலில் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19667 என அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் தரைவழியாகவும் காஸாவினுள் நுழைந்துள்ள நிலையில் அங்கு பலஸ்தீன போராளிக்குழுக்களுடன் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்று வரை ஹமாஸுக்கு எதிரான போரில் 464 இஸ்ரேல் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக ஏஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் காஸாவில் கடும் மழை பெய்ததால் பல இடங்களிலும் வெள்ள நீர் நிரம்பியுள்ளது. அகதி முகாம்களிலுள்ள கூடாரங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக மக்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 360000 பேர் தொற்று நோய்களுக்கு முகங்கொடுத்துள்ள ஐ.நா. முகவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஹமாஸின் கஸ்ஸாம் இராணுவப் பிரிவின் தலைவர் முஹம்மத் தாயிப் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் உயிருடன் உள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா எகிப்தில் முக்கிய தலைவர்களைச் சந்தித்துள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் ஹமாஸின் பிடியிலுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் நோக்கில் மற்றுமொரு தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு செல்ல தயாராகவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி ஐசாக் ஹெர்சோக் குறிப்பிட்டுள்ளார். – Vidivelli