(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இதுவரை பதிவு செய்யப்படாதுள்ள பள்ளிவாசல்கள் உட்பட அனைத்து மதங்களினதும் மத ஸ்தலங்களைப் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க அனைத்து மத ஸ்தலங்களையும் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அமைச்சும் முன்னெடுத்துள்ளன.
மதஸ்தலங்களின் பதிவுகள் மற்றும் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன. நாட்டில் சுமார் 300 பள்ளிவாசல்கள் இதுவரை பதிவு செய்யப்படாது நிர்வாகங்களினால் பதிவு செய்வதற்கான எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமலிருக்கின்றன. இத்தகைய பள்ளிவாசல் நிர்வாகங்கள் உடனடியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதஸ்தலங்கள் எனும் போது பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல தக்கியாக்கள் தரீக்காக்கள் என்பனவும் உள்ளடங்கும்.இவைகளும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும்.
பள்ளிவாசல்களின் பதிவுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு தரவுகளின் கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.
இம்முறை எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து செயலுருப்பெறும்.
பதிவு செய்யப்படாதுள்ள பள்ளிவாசல்கள்,தக்கியாக்கள், தரீக்காக்கள் மாத்திரமல்ல ஏனைய மதங்களின் மதஸ்தலங்களும் பதியப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
பதிவுகளுக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நுாற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். – Vidivelli