சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்பியமை தொடர்பில் பிரபல சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுடன் சட்ட ஆலோசனை நடாத்தியுள்ளதாகவும் டாக்டர் ரயீஸ் முஸ்தபா விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
தன்னை அவமதிக்கும் வகையில் மிக மோசமான கருத்துக்களை உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் ஓடியோ பதிவுகளை வெளியிட்டவர்களை இனங்கண்டுள்ளதாகவும் குறித்த நபர்களிடம் 100 மில்லியன் ரூபா நஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பெறப்படும் நஷ்டயீட்டுப் பணம் மாவனல்லை ஆயிஷா ஸித்தீக்கா கலாபீடத்தின் தப்ஸீர் ஆய்வுகூடத்திற்காக பயன்படுத்தப்படுமெனவும் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தெரிவித்தார்.
கடந்த வாரம் சாய்ந்தமருதிலுள்ள மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரபுக் கல்லூரிகளை விமர்சிக்கும் வகையில் வட்ஸ்அப் குரல் பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அக் குரல் பதிவில் இவ்வாறு அரபுக் கல்லூரிகளை விமர்சிப்பவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபாவே எனத் தவறாக அனுமானம் கொண்ட சிலர், டாக்டரை விமர்சிக்கும் வகையில் கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டிருந்தனர். இந் நிலையில் இவ்வாறு பகிரப்பட்ட குரல் பதிவானது டாக்டர் ரயீஸ் முஸ்தபாவினுடையது அல்ல என்றும் அது தன்னுடைய குரல் பதிவே என்றும் பாயிஸ் முகம்மட் என்பவர் உரிமை கோரியிருந்தார். அத்துடன் இதனால் டாக்டர் ரயீஸ் முஸ்தபாவுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்கு அவர் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந் நிலையிலேயே பாயிஸ் என்பவரின் குரலை தனது குரலாகக் கருதி அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டாக்டர் ரயீஸ் முஸ்தபா தெரிவித்தார்.
இதேவேளை “இவ்வாறு சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்து சமூகத்தில் நற்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்பட வேண்டும். ஆர்ப்பாட்டமில்லாது சமூகப் பணி செய்பவர்களை இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன்” என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli