ஏ.ஆர்.ஏ.பரீல்
இஸ்ரேல்–ஹமாஸ் தரப்பிடையே கடந்த அக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்காலிகமாக உடன்படிக்கையொன்றின் கீழ் ஒரு வாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு வாரகால யுத்த நிறுத்தத்தின் போது சுதந்திரமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலஸ்தீன மக்கள் மீண்டும் யுத்த நெருக்கடிக்குள் சிக்கி அல்லலுறுகின்றனர்.
தற்காலிக தற்காலிக யுத்த நிறுத்தம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட் கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்த தற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பதற்கும், இஸ்ரேலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீன சிறைக்கைதிகளில் ஒரு தொகுதியினரை விடுவித்துக் கொள்வதற்கும், காஸா பிரதேசத்துக்குள் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குமாகவே மேற்கொள்ளப்பட்டது. கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடனான பேச்சு வார்த்தைகளையடுத்தே தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் இணங்கியிருந்தனர்.
தொடராக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்து முதற்கட்டமாக அமுலுக்கு வந்த 4 நாள் தற்காலிக யுத்த நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டு இறுதிக்கட்டமாக மொத்தம் ஏழு நாட்கள் (நவம்பர் 30 வரை வரை) நீடிக்கப்பட்டது.
தற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்பு கடந்த முதலாம் திகதி முதல் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்தது. ஹமாஸின் இலக்குகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. எனினும் இத் தாக்குதலில் 193 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களினால் பலியானோர் தொகை 15900 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்களில் 6600 பேர் சிறுவர்களாவர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களில் 41500 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் டெல்அவிவ் நகர் மற்றும் அண்மித்த பகுதிகளை நோக்கி தொடராக ரொக்கட் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
‘‘நாங்கள் எங்களது இலக்கினை அடையும் வரை இராணுவ நடவடிக்கைகளை தொடருவோம். எங்களது பணயக் கைதிகள் அனைவரையும் ஹமாஸிடமிருந்து விடுவித்துக் கொள்ளும் வரை தாக்குதல்கள் தொடரும்’’ என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான யுத்தத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் படையினர் கான்யூனிஸ் மற்றும் ரபா நகர் மற்றும் எகிப்திய எல்லை பிராந்தியங்கள் மீது பலத்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கான் யூனிஸிலுள்ள நாஸர் வைத்தியசாலை நோயாளிகளினாலும், காயப்பட்டவர்களினாலும் நிரம்பி வழிகிறது. நோயாளிகளுக்கு தரையில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.
நான்கு குழந்தைகளின் தாயான சமீரா ரொய்டர் செய்தி ஏஜன்சிக்கு கருத்து தெரிவிக்கையில், ‘‘கான் யூனிஸ் வைத்தியசாலையில் கடந்த 6 வாரங்களாகத் தங்கியிருக்கிறோம். இந்த ஆறு வாரங்களில் தற்போதுதான் மிகவும் பயங்கரமான இரவைக் கழிக்கிறோம். இஸ்ரேலிய படையினர் இந்த வைத்தியசாலைக்குள் நுழைந்து விடுவார்கள் என்று பயப்படுகிறோம் ’’ என்றார்.
காயங்களுக்குள்ளானவர்களினால் கான்யூனிஸ் வைத்தியசாலை நிரம்பி வழிகிறது என கான்யூனிஸ் வைத்தியசாலையிலிருந்து யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் யுத்த நிறுத்தத்துக்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளன என பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புபட்டிருந்த பலஸ்தீன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்று வரும் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையிலிருந்தும் மொசாட் புலனாய்வு அதிகாரிகளை விலக்கிக் கொண்டுள்ளதாக இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இதேவேளை தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அரசியல் பிரிவின் பிரதித்தலைவர் சாலே அல் அரூரி அல் ஜஸீரா ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். அத்தோடு யுத்தம் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்றம் இடம் பெற மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 110 இஸ்ரேலிய பணயக்கைதிகள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நரகத்திலிருந்து விடுதலையாகியிருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறேன் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதற்கு மாற்றீடாக 240 பலஸ்தீன் பெண்கள் மற்றும் இளைஞர் சிறைக்கைதிகளை விடுதலை செய்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும் 140 இஸ்ரேலிய பணயக்கைதிகள் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெண்களும், இராணுவ வீரர்களும் அடங்குகின்றனர்.
இஸ்ரேல்- ஹமாஸுக்கு இடையிலான தற்காலிக யுத்த நிறுத்தத்தை நிரந்தரமான யுத்த நிறுத்தமாக மாற்ற வேண்டுமென ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் கூறி வந்தாலும் அது சாத்தியப்படவில்லை. இதேவேளை ஜோர்தான் பலஸ்தீன விவகாரத்தில் மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்க மாட்டாரென ஜோர்தான் மன்னர் கூறியுள்ளார். மேலும் ஜோர்தானும், பஹ்ரெய்னும் இஸ்ரேலிலிருந்து தமது தூதுவர்களை மீள் அழைத்துக் கொண்டுள்ளன. வளைகுடா நாடுகள் தமது தூதுவர்களை இஸ்ரேலிலிருந்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
800க்கும் மேற்பட்டோர் பலி
தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து கடந்த புதன் கிழமை வரை (நேற்று) சுமார் 800 க்கும் அதிகமானோர் இஸ்ரேலின் தாக்குதல்களினால் காஸா பிராந்தியத்தில் பலியாகியுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதலில் பலஸ்தீன செம்பிறைச் சங்கத்தின் உறுப்பினரான பலஸ்தீன பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய இராணுவம் காஸாவின் கான் யூனிஸ் பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இப்பகுதியின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் அப்பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் யுத்த தாங்கிகள் தென் காஸா நகரான கான்யூனிஸுக்கு வெளியே வரிசையாக தரித்திருப்பதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள்
‘‘வைத்தியசாலைகள் இறந்த உடல்களினால் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலிய படைகளின் தரைவழித்தாக்குதல்கள் தென் காஸாவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளதனாலே இந்நிலைமை உருவாகியுள்ளது’’ என அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்பு காஸாவின் வைத்தியசாலைகளுக்கு டசின் கணக்கான ஜனாஸாக்கள் கொண்டு வரப்படுகின்றன. இஸ்ரேல் காஸா பிராந்தியத்தின் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகிறது.
‘‘இஸ்ரேல் படையினரின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது வைத்தியசாலைகள் மூலம் எத்தகைய உதவிகளையும், சிகிச்சைகளையும் வழங்க முடியாதுள்ளது. எங்களது வைத்தியசாலைகளின் அனைத்து வைத்திய உபகரணங்களும் இஸ்ரேலிய படைகளினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன’’ என காஸாவின் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் முனீர் அல் புர்ஸ் தெரிவித்தார்.
காயங்களுக்குள்ளான பலஸ்தீனர் ஒருவரை அல் அவ்தா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சுகாதார ஊழியர் ஒருவரும் இஸ்ரேலிய படையினாரால் சுடப்பட்டுள்ளார்.
காயங்களுக்குள்ளான 40 ஆயிரம் பேரில் 400 பேர் மாத்திரமே காஸாவின் தென்பகுதி ரபா எல்லையைக் கடந்து சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டனர். எதிரிகளின் இலக்கு மக்களை கொலை செய்வதே என்றும் அவர் கூறினார்.
கிழக்கு காஸா நிகரான சுஜய்யா மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல் படையினர் அங்கு 50 க்கு மேற்பட்ட வீடுகளைத் தாக்கி அழித்துள்ளதாக பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும் பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘‘இஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்வதற்கு அமெரிக்கா பச்சை விளக்கு காட்டியுள்ளது. அதனாலே இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது’’ என பட்ட கற்கைகளுக்கான தோஹா கல்வி நிலையத்தின் உதவி பேராசிரியர் தமர் கார்மொன்ட் தெரிவித்துள்ளார். ‘‘அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். என்றாலும் இஸ்ரேலியர்களிடம் அவர்களுக்கு சொந்தமான திட்டமிருக்கிறது. அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால் யுத்தத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை இஸ்ரேல் மீது பிரயோகிக்கவில்லை’’ எனவும் அவர் தெரிவித்தார்.
சுரங்கப்பாதைகளை கடல் நீரால் மூழ்கடிக்கத் திட்டம்
ஹமாஸ் படையினரை தோற்கடிக்க முடியாத நிலையில் இஸ்ரேல் காஸாவில் ஹமாஸ் படையினரின் இரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய தரைக்கடலில் இருந்து நிலத்தடி வலையமைப்பு மூலம் நீரை சுரங்கப்பாதைகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லீட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை இஸ்ரேல் வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது. வடக்கு காஸாவில் அல்ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே ஒரு மைல் தூரத்தில் இந்த பம்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றினால் காஸா பகுதியில் உள்ள நன்னீர் மாசடைவதோடு இதன் காரணமாக மேலும் பல அபாயகரமான அழிவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அமெரிக்கா நட்பு நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஹமாஸின் 800 க்கும் மேற்பட்ட சுரங்கங்களில் 500 க்கும் அதிகமானவற்றை தாம் அழித்து விட்டதாக இஸ்ரேல் ஏற்கனவே கூறியுள்ளது. எனினும் ஹமாஸ் இதனை முற்றக மறுத்துள்ளது..
என்ன நடக்கப் போகிறது?
தற்காலிக யுத்த நிறுத்த காலத்தில் இஸ்ரேலிய பணயக் கைதிகளின் விடுதலையோடு, ஹமாஸின் மறைவிடங்கள், சுரங்கப் பாதைகள், ஆயுதக்களஞ்சிய சாலைகள் போன்ற விபரங்களை நிச்சயம் இஸ்ரேல் திரட்டியிருக்கும். அதனைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேலும் உக்கிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இக் காலப்பகுதிக்குள் ஹமாஸும் தன்னை பல வழிகளல் தயார்படுத்தியிருக்கும் என நம்பப்படுகிறது. எனவே நிரந்தர யுத்த நிறுத்தத்தை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.
இஸ்ரேல் தற்போது தெற்கு காஸா பகுதியில் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே வட பகுதியில் தாக்குதல் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்பட்டு விட்டன. தெற்கு பகுதியிலிருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவித்துள்ளது. செல்ல இடமின்றி மக்கள் தவிக்கின்றனர். அங்கு நிலவும் குளிரான காலநிலை அப்பகுதி மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் நவீன ஆயுதங்கள் மூலம் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸாவை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் இலக்கு இந்நிலையில் காஸா மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித ஆக்கபூர்வமான திட்டங்களையும் அரபு நாடுகளிடமிருந்து காணவில்லை. அம்மக்களுக்காக பிரார்த்திப்போம். – Vidivelli