ஏப்ரல் 2020 இல், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்சியை கடுகஸ்தோட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ஐசிசிபிஆர்) மீறிய குற்றச்சாட்டில் கைது செய்தது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூறப்படும் இனவெறி தாக்குதல்களை எதிர்கொள்ள “பேனா மற்றும் கணினி” மூலம் “சித்தாந்த ஜிஹாத்” (போராட்டம்) செய்ய வேண்டும் என முஸ்லிம்களை வலியுறுத்தும் வகையில் முகநூல் பதிவை எழுதியதே அவர் செய்த குற்றமாகும்.
சென்ற மாதம் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கவிஞரும் சமூக ஊடக ஆர்வலருமான ரம்ஸி, அந்த வலிமிகுந்த காலகட்டத்தையும், அது அவர் மீதும், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மீதும் ஏற்படுத்திய நிரந்தர வடுக்கள் குறித்தும்சண்டே டைம்ஸுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த சம்பவத்தால் “நான் மிகவும் கஷ்டப்பட்டேன், என் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டது.” என்றும் அவர் கூறினார்.
முகநூல் பதிவில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு வருத்தப்படுகிறீர்களா, அதனை சர்ச்சையை ஏற்படுத்தாத வகையில் கூறியிருக்கலாம் என கருதுகிறீர்களா எனக் கேட்டதற்கு, “பதிவில் எதையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏதாவது தவறு இருந்தால் தானே நான் மாற்ற வேண்டும்.” என்றார்.
“நான் அந்த பதிவை முஸ்லிம் சமூகத்திற்காக எழுதியதால் தான் நான் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்,” என்று அவர் கூறினார். “நான் முஸ்லிம்களுக்கு எழுதும்போது, முஸ்லிம்களால் புரிந்துகொள்ளப்படக் கூடிய விதத்திலேயே குறிப்பிட வேண்டும், எங்கள் மொழி வழக்கில் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம்’’ என்றார்.
இந்த ஆண்டு நவம்பர் 14 அன்று, ரம்ஸியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. அவர் ICCPR சட்டம், தண்டனைச் சட்டம் அல்லது கணினி குற்றச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமளவு எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அது தீர்மானித்தது.
சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து வந்த நாட்களில், ரம்ஸிக்கு எதிராக முஸ்லிம் விரோத வெறுப்பு பதிவுகள் முகநூலில் அதிகம் பகிரப்பட்டன். அத்துடன் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. இது பற்றி உடனடியாக பொலிஸ் மா அதிபரிடம் புகார் செய்தார். பொலிசார் அவருக்கு பதில் வழங்கவோ பாதுகாப்பை வழங்கவோ இல்லை. மாறாக முறைப்பாடு செய்த ரம்ஸியையே பொலிசார் அன்று மாலை கைது செய்தனர்.
அடுத்த ஐந்து மாதங்களும் எட்டு நாட்களும் அவரை தடுப்புக் காவலில் வைத்திருந்தனர். செப்டம்பர் 2020 இல், அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரம்ஸி ராஸிக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, சிஐடி தலைமையகத்தில் இரவோடு இரவாகத் தங்க வைக்கப்பட்டார். அங்கு இருந்தவர்கள் அல்லாஹ்வை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ரம்ஸியை நோக்கி கூச்சலிட்டதுடன் ரம்ஸி மீது தாக்குதலும் நடத்தினர். அவர்கள் “நீ எங்கள் மீது போர் பிரகடனம் செய்ய முயன்றிருக்கிறாய்” என்று குற்றம்சாட்டினர் கூச்சலிட்டனர். ரம்ஸி மறுநாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது.
ரம்ஸிக்கு முடக்கு வாதம் உள்ளது. இதனால் விவசாயத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த அவர் முன்கூட்டியே ஓய்வுபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “எனக்கு ஏற்பட்ட நோய் காரணமாக, சிறையில் தலையணைகள் இல்லாமல் சிமென்ட் தரையில் தூங்குவது மிகவும் கஷ்டமாக இருந்தது,” என்று அவர் கூறினார். “ சிறைக்குள் மிகவும் நெரிசலாக இருந்தது, சில கைதிகள் கழிப்பறைகளில் தூங்கினர், மற்றவர்கள் நின்று கொண்டே தூங்குவர்.” என்றார்.
சிறைச்சாலையில் குந்தி மலங்கழிக்கும் கழிப்பறை மட்டுமே இருந்ததால், கழிவறையைப் பயன்படுத்துவது கூட அவருக்கு கஷ்டமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்குள், ரம்ஸியின் கால்களில் ஏற்பட்ட புண்களுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். “அவர்கள் எனக்கு வலி நிவாரணிகளை மட்டுமே கொடுத்தனர் மற்றும் என் காயங்களுக்கு மருந்திட்டனர்,” என்று அவர் கூறினார். “எனக்குத் தேவையான மருந்து தங்களிடம் இல்லை என்று சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியர்கள் கூறினர், அது கொரோனா காலம் என்பதால், எனது மூட்டுவலிக்கான மருந்தை எனது குடும்பத்தினரால் தொடர்ந்து அனுப்ப முடியவில்லை.”
மற்றொரு முறை, ஒன்லைன் வழியாக நடந்த நீதிமன்ற அமர்வில் கலந்து கொள்ள சிறைக் காவலர்களால் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டதபோது, ரம்ஸி தடுக்கி வீழ்ந்து காயம் அடைந்தார். “எனது மூட்டுவலி காரணமாக என்னால் வேகமாக நடக்க முடியாது. பொலிசார் அவசரப்படுத்தியதால் நான் அவசரப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார். ” ‘‘அந்த ஒன்லைன் அமர்வில் வலியைச் சகித்துக் கொண்டே பங்குபற்றினேன்” என்றார்.
இவ் விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு பின்னரே டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து கை முறிந்திருப்பதை கண்டுபிடித்தனர்: அவர்கள் அன்று சரியாக சிகிச்சை வழங்கவில்லை, அதனால் அந்தக் கை இன்றுவரை பழைய நிலைக்குத் திரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தடுப்பு விதிமுறைகள் குறிப்பாக கைதிகளுக்கு கடுமையாகவே இருந்தது. இதனால் உறவினர்கள் அவர்களைப் பார்க்கவோ தேவையானவற்றை வழங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் ரம்ஸியை குடும்பத்தினர் அவ்வப்போது சந்தித்தனர். ஆனால் அவர் காவலில் இருந்த காலம் வரை, அவர் ஒரு முறை கூட தனது சட்டத்தரணிகளை சந்திக்கவில்லை. அவர் நீதிவானுடன் இணையம் வழியாகப் பேசியபோது, காவலில் இருந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி சுதந்திரமாக நீதிவானிடம் கூறுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் இடமளிக்கவில்லை. இந்த அனுபவம் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்கிறார்.
“ரிமாண்டில் அனைவரும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார். “ஆனால் காவலர்கள் என்னை உளவியல் ரீதியாக குறிவைத்து, ‘ஐஎஸ்ஐஎஸ் காரன்’ என்று அழைத்தனர். என்னை ஒரு பயங்கரவாதி போல் நடத்தினர்.” என்றார். அதேபோன்று சிறைக்கு வெளியே, அவரது குடும்பத்தினரும் பயங்கரவாதிகளைப் போன்றே பார்க்கப்பட்டனர்.
அவர் கைது செய்யப்பட்டபோது ரம்ஸியின் மகளுக்கு வயது 16. தந்தை விளக்கமறியல் சிறையில் இருந்தபோமே மகள் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றினார். அச்சுறுத்தல்களால் தாங்கள் தாக்கப்படலாம் என்ற பயத்தில் மகள் இருந்தார். அதனால் அவர் பயணம் செய்வதையோ அல்லது டியூஷன் வகுப்புகளுக்குச் செல்வதையோ தவிர்த்துவிட்டார்.
“உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பிறகும், நண்பர்கள் எங்களிடம் பேசுவதற்கு பயந்தனர், மேலும் சில அயலவர்கள் எங்களை பயங்கரவாதிகள் போல பார்த்தார்கள்” என்று ரம்ஸி கூறினார். இந்தக் கைதினால் “எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.” என்றார்.
உளவியல் பாதிப்புக்கு மேலதிகமாக, அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்தது. முன்கூட்டியே ஓய்வு பெற்றதால் சிறிய ஓய்வூதியமே அவருக்கு கிடைத்தது. ஃப்ரீலான்ஸ் வேலைகள் இல்லாமல், அன்றாட செலவுகளைச் சந்திப்பது கடினமாக இருந்தது. இந்த பாதிப்புகளிலிருந்து இன்று வரை இக் குடும்பம் மீளவில்லை.
இப்போதெல்லாம் எனக்கு வேலை குறைவாகவே கிடைக்கிறது,” என்று ரம்ஸி விளக்கினார். “கை மற்றும் மோசமடைந்து வரும் மூட்டுவலி காரணமாக கணினியில் தட்டச்சு செய்வதும் கடினம்.” என்றார்.
தான் கைது செய்யப்பட்டிருப்பது துன்புறுத்தலை இலக்காகக் கொண்டது என்றும், சட்டத்தை மீறிய அடிப்படையில் அல்ல என்றும் ரம்ஸி கூறுகிறார். (தற்போது மக்கள் தவறாகக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படும் போக்கு அதிகமாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளமையும் கவனிக்கத்தக்கது)
“ICCPR இன் கீழ் மஜிஸ்திரேட் எனக்கு பிணை வழங்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த சட்டத்தின் கீழ், அவர்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு என்னை உள்ளே வைத்திருக்க முடியும்.” என்று குறிப்பிட் அவர் பிணை கிடைத்த பிறகும், வழக்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீடித்ததாகவும் கூறினார்.
அவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதற்கு, சிஐடி அதிகாரிகள் ஐசிசிபிஆர், குற்றவியல் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை “ஆயுதங்களாக” பயன்படுத்தினர் மற்றும் “தண்டனைக்கு சமமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்” என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
ரம்ஸி ராசிக்கை கைது செய்து தடுத்து வைத்தமைக்காக அரசு அவருக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கணினி மற்றும் தடயவியல் பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் ரம்ஸிக்கு அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து தலா ரூ. 30,000 வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
ஒப்பீட்டளவில் இது சிறிய இழப்பீடு என்ற போதிலும் இந்த தீர்ப்பு முக்கியத்துமிக்கது என ரம்ஸி கருதுகிறார். ” நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் தீர்ப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பிறகு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்வதற்கு பொலிசார் தயங்குவார்கள்.’’ என்றார்.
இன்று, ரம்ஸி ஒரு சுயாதீன மொழிபெயர்ப்பாளராகவும் சமூக ஊடக ஆர்வலராகவும் கிறேன். இத் தீர்ப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பிறகு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்வதற்கு பொலிசார் தயங்குவார்கள்.’’ என்றார்.
இன்று, ரம்ஸி ஒரு சுயாதீன மொழிபெயர்ப்பாளராகவும் சமூக ஊடக ஆர்வலராகவும் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் சுதந்திரம், கலை மற்றும் வெளிப்பாட்டிற்கான நடவடிக்கைக் குழுவுடன் இணைந்தும் பணியாற்றுகிறார். மேலும் தனக்கு விருப்பமான இதயத்திற்கு நெருக்கமான தலைப்புகளில் எழுதியும் வருகிறார்.
உங்கள் வாழ்வில் சந்தித்த இந்த அனுபவம் சமூக விவகாரங்களில் குரல் கொடுப்பதற்கு உங்களுக்கு அச்சத்தை தந்ததா எனக் கேட்டதற்கு ‘‘ என் பங்கை தொடர்ந்து செய்வேன்,” என அவர் பதிலளித்தார். “குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது, நம் நாட்டிலும் சமூகத்திலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்றார்.
நன்றி: சண்டே ரைம்ஸ் 03.12.2023
- Vidivelli