கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முன்னுரை
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீனம் அழிகிறது. ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பெண்கள், குழந்தைகள், வயோதிபர், நோயாளிகள் என்ற பேதமின்றி இஸ்ரவேலின் கொலைவெறிக்குப் பலியாகின்றனர். அதன் கல்விக்கூடங்கள், வைத்தியசாலைகள், வணக்கஸ்தலங்கள், வீடுகள், பொதுநிர்வாக அலுவலகங்கள் யாவுமே இஸ்ரவேலின் குண்டுவீச்சுக்கு ஆளாகி குறிப்பாக காசா நகரும் அதன் சுற்றுப் பிரதேசமும் ஒரு மயானபூமியாக மாறிவிட்டது. அமெரிக்க ஆயுதங்களுடனும் மந்திர ஆலோசனையுடனும் மேற்குநாட்டுச் செய்தி நிறுவனங்களின்; திட்டமிட்ட இஸ்ரவேல் சார்பான பிரச்சாரத்துடனும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வளைகுடா நாடுகளின் கேவலமான மௌனத்துடனும் பலஸ்தீனம் இஸ்ரவேலின் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றது. தமிழ் சினிமாவிலே இடைவேளை வருவதுபோல் கத்தார் அரசின் சமரச முயற்சி ஹமாஸ் சிறைபிடித்த இஸ்ரவேலர்களை விடுவிக்கும் வரையிலேயே நீடித்தது. அவர்கள் விடுதலையானதும் ஹமாஸின்மேல் அமெரிக்காவும் இஸ்ரவேலும் பழியைச் சுமத்தி போரின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் துருக்கியும் ஈரானும் இஸ்ரவேலுக்கெதிராக வாய்கிழியக் கர்ஜித்தபோதும் ஆனபயன் ஒன்றும் இல்லை. இந்;த நிலை ஏன் குறிப்பாக அரபுலகுக்கும் பொதுவாக முஸ்லிம் உலகுக்கும் ஏற்பட்டது?
இந்த வினாவுக்கான விடையை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராயுமுன்னர் இவ்விடையுடன் சம்பந்தப்பட்ட எனது இரண்டு ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை வாசகர்களின் கவனத்துக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, Journal of Muslim Minority Affairs என்ற ஆங்கில மொழி ஆய்வுச் சஞ்சிகையில் 2007ல் வெளிவந்த இதழ் ஒன்றில் இடம்பெற்ற முஸ்லிம்களின் சிந்தனைத் தேக்கம்; என்ற தலைப்பில் எழுதப்பட்டது. மற்றது, International Journal of Islamic Thought என்ற இன்னோர் ஆய்வுச் சஞ்சிகையில் 2018 இல் வெளிவந்த முஸ்லிம் உலகு நழுவவிட்ட சந்தர்ப்பம் என்ற பொருளில் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரை துருக்கி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியது. இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் இன்று பலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லையெனினும் இன்று அரபுலகும் முஸ்லிம் உலகும் அனுபவிக்கும் இழிநிலையை விளங்குவதற்கு அக்கட்டுரைகள் இரண்டும் கட்டியம் கூறுகின்றன எனலாம்.
உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி, புதிய நாகரிகம் ஒன்றையும் தோற்றுவித்து, அறிவுலகின் எல்லையிலே நின்றுகொண்டு அந்த எல்லையையும் தொடர்ந்து விஸ்தரித்து, உலகின் ஏனைய இனங்களையும் ஆட்சியினரையும் தன்காலடிக்குக் கொண்டுவந்து, செல்வச் செழிப்புடன் விளங்கிய அரபுலகு இன்று ஏன் அதே உலகத்தால் ஒதுக்கப்பட்டு, உலக அரங்கில் ஊமையாகி, அறிவுலகின் ஓரத்திலே நின்றுகொண்டு, தன்னையும் தன்னை நம்பியவர்களையும் காப்பாற்ற முடியாமல் படைத்தவன்மேல் பாரத்தைப்போட்டுக் கையேந்தி நிற்கிறது? இந்த நிலைமைக்குப் படைத்தவன் பழியா? அல்லது படைத்தவன் வகுத்த பாதையைத் தவறவிட்டு அதனை மீண்டும் அடைவதற்கு அவன் அளித்த சந்தர்ப்பங்களையும் விரயமாக்கிய அவனது படைப்புகளின் தவறா? இதற்கான விடையைத்தான் எனது அன்றைய இரு கட்டுரைகளும் ஆராய்ந்தன. அந்த அடிப்படையிலேதான் இக்கட்டுரையும் இன்றைய நிலைமையை விளக்க விரும்புகிறது.
வரலாற்றில் ஓர் அதிசயம்
முதலில் ஒரு சுவையான வரலாற்றுச் சம்பவம். அது நடந்தது 871ஆம் ஆண்டு. அப்பாசியர் ஆட்சியில் பஸ்ராவிலே வாழ்ந்த இப்னு வஹ்ப் என்ற சுற்றுலா வேட்கை கொண்ட ஒரு முஸ்லிம். பதினான்காம் நூற்றாண்டில் மொரொக்கோவிலே வாழ்ந்த வரலாற்றுப் புகழ்பெற்ற பயணி இப்னு பத்துத்தா போன்ற ஒருவரென இவரை கருதலாம். இப்னு வஹ்ப் சீனா சென்றபோது அங்கே சீனப் பேரரசனின் அரச ஊழியர்கள் அவரை தகுந்த மரியாதைகளுடன் அரசனின்முன் கொண்டு நிறுத்தினர். இப்னு வஹ்ப் அப்பாசியர் ஆட்சியின் ஒரு பிரஜை என அறிந்ததும் சீன அரசன் அவரிடம் கேட்ட முதலாவது கேள்வி உலக அரசர்களை நீங்கள் எவ்வாறு வரிசைப்படுத்துகிறீர்கள் என்பதாகும். அதற்கான விடை தனக்குத் தெரியாது என்றார் அந்தப் பயணி. உடனே சீன அரசன் அந்த வினாவுக்கு அளித்த பதில் இதோ: “உலகின் மிகப்பெரும் பகுதியை ஆட்சி புரிபவர் உங்கள் அரசர். அவர்தான் உலக அரசர்களுள் மத்தியில் இருக்கிறார். மற்றவர்கள் அவரைச் சுற்றியே இருக்கிறார்கள். அவரை நாங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்போம். அவருக்கு அடுத்ததாக நான். மூன்றாம் இடத்தில் துருக்கியின் அரசன். அதற்கடுத்து இந்தியாவின் அரசன். அதற்கடுத்து பைசாந்திய அரசன்”. அரபு மக்களின் புகழ் எந்த இடத்தில் அன்று இருந்தது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறிய உதாரணம். பொருளாதாரத்திலும் பக்தாதின் தினார் நாணயம் இன்றைய அமெரிக்க டொலாராக இருந்த காலம் அது. அதனால் ஈர்க்கப்பட்ட இங்கிலாந்து அரசன் ஒபா 774 இல் இங்கிலாந்தின் நாணயத்தின் ஒரு பக்கத்தில் உரோம எழுத்துக்களினால் தலைகீழாக முகம்மத் ரசூலுல்லாஹ் என்ற வாக்கியத்தையும் பொறித்திருந்தார்! இந்தப் புகழ் முஸ்லிம் உலகுக்கு எங்கிருந்து வந்தது, அதற்கு என்ன ஆனது வாசகர்களே?
குர்ஆன் செய்த புரட்சி
அரபு மக்களை வரலாற்றுக்குள் நுழைத்ததே குர்ஆன். பெருமானாரும் குர்ஆனும் இல்லையென்றால் அரபு மக்கள் வரலாற்றின் புழுதிக்குள் மேலும் பல நூற்றாண்டுகள் புதையுண்டு கிடந்திருப்பர். அவ்வாறு குர்ஆன் செய்த புரட்சிதான் என்னவோ? அதனை இரண்டொரு வரிகளுக்குள் சுருக்கி விடலாம். ‘இறைவனைத்தவிர வேறு எதற்குமோ யாருக்குமோ நீங்கள் அடிபணியத் தேவை இல்லை. இயற்கை உங்கள் காலடியில். அது உங்களுக்குப் பொதுவுடமை. அறிவு மட்டுமே உங்களின் தனியுடமை. இரண்டையும் உங்களுக்கு நான் அமானிதச் சொத்தாகத் தந்திருக்கிறேன். இறுதியில் எனக்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும்’: குர்ஆனின் இந்தத் தாரக மந்திரத்தை பெருமானாரின் வழிகாட்டலின்கீழ் அன்றைய அரபு மக்கள் புரிந்துகொண்டு அரேபியப் பாலையைவிட்டும் கிளர்ந்தெழுந்தனர். அந்தக் கிளர்ச்சியின் வெளிப்பாடே அவர்கள் அமைத்த பேரரசுகளும், கலையுலகும், கலாசாரமும், பொருளுலகும். அந்த மந்திரத்துக்கு இன்று என்ன நடந்தது? கஸ்ஸாலி இமாம் குர்ஆனைப்பற்றி விமர்சிக்கும் போது அதை இறைவனிடம் இருந்து பெருமானார் மூலம் முஸ்லிம்களுக்கும் அவர்கள் மூலம் மனித சமுதாயத்துக்கும் வந்த ஒரு கடிதம் என்றார். ஒரு கடிதத்தை வாசித்துவிட்டு அதன்படி ஒழுகுவதைத் தவிர்த்து அந்தக் கடிதத்தையே பல ராகங்களில் வாசித்து வாசித்து மனப்பாடம் பண்ணிவிட்டால் அந்தக் கடிதத்தின் செய்தியை நடைமுறைப்படுத்தி விட்டதாகக் கருத முடியுமா? குர்ஆனின் செய்தியை விளங்கி அதன் தாரக மந்திரத்தை நடைமுறைப் படுத்தியதால் அன்றைய முஸ்லிம்களின் காலடியில் உலகமே சரணடைந்தது. அந்த மந்திரத்தை முஸ்லிம்கள் மறந்த நிலையில் அதை முஸ்லிம்களிடமிருந்து மற்றவர்கள் கற்று அதன்படி செயற்பட்டதால் இன்று மற்றவர்களின் காலடியில் அரேபியரும் முஸ்லிம்களும் சரணடைந்து கிடக்கிறார்கள். முஸ்லிம்களோ அன்று வந்த கடிதத்தை இன்னும் வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் விளைவைத்தான் இன்று பலஸ்தீனம் உணர்த்துகிறது.
நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பம்
இந்தியாவின் முகலாயராட்சிக்கு 1857ல் முற்றுப்புள்ளி வைத்து, அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவையே கதிகலங்கச் செய்த உதுமானியப் பேரரசையும் திட்டமிட்டுச் சின்னாபின்னமாக்கி, அப்பேரரசுக்கு ஐரோப்பாவின் நோயாளி என்ற பட்;டமும் சூட்டி, அந்தப் பேரரசின் நிழலில் வாழ்ந்த இனங்களிடையே தேசியம் என்ற போர்வையில் பிரிவினைவாதத்தை வளர்த்து, ஒன்றுபட்டிருந்த இனங்களை வேறுவேறாக்கி, தனிப்பட்ட நாடுகளை தனது விருப்பத்திற்கேற்ப எல்லை வகுத்து உருவாக்கி, பின்னர் அந்த நாடுகளையே கைப்பற்றித் தனது குடியேற்ற நாடுகளாக்கிய பிரித்தானியா மீண்டும் ஓர் இஸ்லாமியப் பேரரசு உலகில் எங்காவது தோன்றுவதைத் தடுத்தாக வேண்டும் என்ற நோக்கில் மத்திய கிழக்கில் அரபுமக்களின் மத்தியில் 1948ல் அறிமுகப்படுத்தியதே இஸ்ரவேல். அதே நோக்கம்தான் இன்றுவரை ஐரோப்பிய அமெரிக்க பிரித்தானிய ஆதரவை இஸ்ரவேலுக்குத் திரட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. 1979ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து தோன்றிய இஸ்லாமிய விழிப்புணர்வும் புதிய முஸ்லிம் உலக ஒழுங்கொன்று அமைக்கப்படல் வேண்டும் என்ற தாகமும் செயல்வடிவுபெறா வண்ணம் இன்றுவரை அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவற்றின் நேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன. இந்தச் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்று நடைபேறும் பலஸ்தீனப் பேரையும் கருத வேண்டும்.
இஸ்ரவேலின் வளர்ச்சியையும் அதன் பலத்தையும் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதன் அண்டை அரபு நாடுகளுள் ஏதாவதொன்று இஸ்ரவேலுக்குச் சமமான பலத்துடன் வளரவேண்டும். அந்த எண்ணம் எகிப்தின் அன்றையத் தலைவன் அப்துல் நாசருக்கு இருந்தது. ஆனால் எகிப்து ஒரு வறிய நாடு;. அதனால் நாசரின் எண்ணம் கைகூட வாய்ப்பிருக்கவில்லை. மற்றைய நாடுகளின் உதவியை நம்பி எந்த ஒரு வறிய நாடும் வளமுள்ள பலசாலியாக மாற முடியாது. எனவே முதலில் வறுமை விரட்டப்படல் வேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பமே 1980களில் அரபு எண்ணெய்வள நாடுகளுக்குக் கிட்டியது. தமது நாடுகளின் பாலைவனங்களை பொன்னால் செப்பனிடப்பட்ட தரைகளாக மாற்றுவதற்குச் செலவிட்டாலும் தீhhத அளவுக்கு பணம் கொட்டோகொட்டென இந்நாடுகளில் கொட்டியது. ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்தார்கள்? தமது நாடுகளை அன்னியரின் தொழில்நுட்பத்துடனும் ஆலோசனைகளுடனும், வறிய நாடுகளின் தொழிலாளர் வியர்வையுடனும் உல்லாசபுரிக மாற்றி அன்று ஆயிரத்தோர் இரவுகளாக உரைக்கப்பட்ட கனவுகளை நனவாக்க முனைந்தார்களேயன்றி இஸ்ரவேலுக்கு ஈடாக தம்மை ஒரு பலசாலி நாடாக மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் அவை எதுவுமே செயற்படவில்லை. இந்த ஏமாற்றத்தை மேலும் விபரிக்காமல் அதே காலப்பகுதியில் வறுமையால் பீடிக்கப்பட்டுக் கிடந்த வேறு இரு நாடுகளின் மாற்றத்துடன் ஒப்பிட்டுப்பார்ப்பது பொருத்தமானது.
சீனாவும் இந்தியாவும் 1970கள் முடியும்வரை வறுமைக்கு இலக்கணமாகக் கருதப்பட்ட நாடுகள். சீனா தனது பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவியது. இந்தியாவும் தனது சமவுடமை கொன்கைகளைக் கைவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அந்த நாடுகள் இரண்டும் விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில்நுட்பத்திறனிலும் கல்வி மேம்பாட்டிலுமாக தமது செலவினங்களை முடக்கி பிராந்திய வல்லரசுகளாகத் தம்மை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் போட்டிபோடுட்டுக் கால்வைத்தன. இன்று அமெரிக்காவுக்குச் சவாலாகச் சீனாவும், சீனாவுக்குச் சவாலாக இந்தியாவும் வளர்ந்துள்ளதை யார்தான் மறுக்கமுடியும்? இவற்றுடன் அரபு நாடுகளின் மாற்றத்தையும் ஒப்பிட்டு அவர்களிடம் இத்தனை செல்வமும் இருந்தும் இன்னும் அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் அடிவருடிகளாக வாழ்ந்துகொண்டு பலஸ்தீனம் இஸ்ரவேலால் அழிக்கப்பட்டுப் படிப்படியாகப் பறிபோவதைத் தடுக்கமுடியாமல் மௌனிகளாக இருக்கும் நிலையைப் பார்த்துக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியுமா? இஸ்ரவேலுக்கு ஈடாக மாறக்கூடிய ஓர் அரிய வாய்ப்பினை கைநழுவ விட்டபின்னர் அல்லாஹ்விடம் கையேந்துவதில் ஏதும் பயனுண்டா முஸ்லிம்களே? அல்லாஹ் இயக்குபவன் அல்ல உதவுவன். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளாதவரை இறையும் உங்களை மாற்றாது என்ற திருவசனத்தை மறந்தது ஏனோ?
யார் குற்றம்?
இஸ்ரவேல் உருவாகிய நாளில் இருந்தே அந்த உருவாக்கத்தின் அந்தரங்க நோக்கத்தை அரபு நாடுகள் உணர்ந்திருக்க வேண்டும். அது அரபு நாடுகளுக்கு எதிராக மட்டுமல்ல, இஸ்லாமிய சமுதாயமே மீண்டும் தலைதூக்காத வண்ணம் அந்தச் சமுதாயத்துக்குச் சாவுமணி அடிக்கும் வகையில் அன்றய வல்லரசினால் தீர்மானிக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியே இஸ்ரவேல். இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பின்னர் கைத்தொழில் நாகரிகம் அமெரிக்காவின் தலைமையில் வளரத்தொடங்கி அந்த நாகரிகத்தின் உயிர்நாடியாக எண்ணெய்வளம் மாறியவுடன் அந்த வளத்தைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்காக எண்ணெய் வளநாடுகளைத் தனது வலைக்குள் சிக்கவைக்கும் அதே வேளையில் அந்த நாடுகளுள் எங்காகிலும் அமெரிக்காவுக்கெதிரான புரட்சித்தாகம் தலையெடுத்தால் அதனை நசுக்குவதற்கு உடந்தையாக இஸ்ரவேலை வளர்த்தெடுக்கும் நோக்கிலுமே அமெரிக்க ராஜதந்திரம் இன்றுவரை செயற்பட்டு வருகின்றது.
இந்த நோக்கிலேதான் அன்று ஈரானை முறியடிக்க ஷீயா சுன்னி என்ற மதப் பிரிவினையை அமெரிக்கா முன்னின்று வளர்த்தது. அதன் பின்னர் இஸ்லாமிய அரசு என்ற கோஷத்தில் உருவாகிய முஸ்லிம் இயக்கங்களை எல்லாம் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உள்ளடக்கி அவற்றிற்கெதிரான வன்முறைகளை அமெரிக்கா அவிழ்த்துவிட்டது. அரபு நாடுகளின் ஜனநாயகமற்ற அரசுகளை அகற்றவென்று 2011ல் மலர்ந்த அரபு வசந்தத்தையும் பழமைவாதத்துக்கு ஆதரவு வழங்கி அமெரிக்காவே அந்த வசந்தத்தையும் ஒரு பனியுறை காலமாக மாற்றியது. இப்போது சுதந்திர தாகத்தினால் பலஸ்தீன ஹமாஸ் போராளிகள் இஸ்ரவேலின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறியவென ரொக்கட்டுகளை வீசத் தொடங்கவே அதற்குப் பதிலாக பலஸ்தீனத்தையே இஸ்ரவேலுக்குச் சொந்தமாக்க அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்குகிறது. அந்த நிலையில் இஸ்ரவேல் அப்பாவிப் பலஸ்தீனர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யவேண்டும் என்று அமெரிக்கா கூறுவது தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவதுபோல் இல்லையா? என்ன பம்மாத்து இது? இதனிடையே அரபு நாடுகளோ மௌனமாய் நிற்கின்றன. இந்த அவலத்தை என்னென்று வருணிப்பதோ? உலக மனச்சாட்சியின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஜோ பைடனும் நெத்தன்யாகுவும் மட்டுமல்ல அரபு நாட்டுத் தலைவர்களும்தான்.
1961ல் இஸ்ரவேலின் விமானம் ஒன்றை யாசிர் அறபாத்தின் பலஸ்தீன விடுதலை முன்னணி கடத்திச்சென்று குண்டுவீசித் தகர்த்தபின்னர் அறபாத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்ததை நான் கேட்டேன். அந்தப்பதிலில் இஸ்ரவேலுக்குள் அவர்களின் இயக்கம் நுழைவது நேரடியாகவல்ல அரபு நாடுகளின் ஊடாகவே என்றார். இன்றோ ஹமாஸ் போராளிகள் தமது உயிரைப் பணயம்வைத்து அச்சமின்றி அமெரிக்க-இஸ்ரவேல் இனச்சுத்திகரிப்பை எதிர்த்துப் போராடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனப் பாலகர்களும் பெண்களும் நோயாளிகளும் முதியவர்களும் இஸ்ரவேலின் குண்டுகளுக்கு இரையாகினாலும் உலகநீதியும் உலக மக்களின் ஆதரவும் பலஸ்தீனப் போராளிகளின் பக்கமே நிற்கின்றது. அந்த ஆதரவு இஸ்ரவேல் மக்களையும் அதன் பக்கம் ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. பலஸ்தீனத்தின் சாம்பலில் இருந்தாவது ஒரு புதிய வசந்தம் அரபுலகில் மலருமா? – Vidivelli