(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை நீதிவான் எதிர்வரும் 2024 மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது நீதிவான் திலின கமகே இந்த ஒத்திவைப்பு உத்தரவினைப் பிறப்பித்தார்.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் ஞானசார தேரர் இஸ்லாம் மதத்தை அவமதித்து இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சர்ச்சைக்குள்ளாகியது. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஞானசார தேரருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து ஞான சார தேரர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இம்மனு மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை மீண்டும் இடம்பெற்ற போது ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமாஅதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே தெரிவித்தார்.இதனையடுத்து இம்மனு மீதான விசாரணையை எதிர்வரும் 2024 மார்ச் 11ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.- Vidivelli