பத்தாயிரம் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு தொழிலுக்காக அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையர்களுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ள இஸ்ரேல் அவர்களுக்கு அங்கு இராணுவப் பயிற்சியும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்தோடு பலஸ்தீனர்களிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொள்ளப்பட்ட காணிகளிலேயே இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு அனுப்புவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கோரினார்.
பாராளுமன்றில் விஷேட உரையொன்றினை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது எமது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். அரபு நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் தொழில் புரியும் நிலையில் இலங்கையிலிருந்து தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது கவலைக்குரியதாகும். இதனால் எமது அரபு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். எமது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பிழையான நேரத்தில் தவறான தீர்மானம் என என்னிடம் அரபு நாடுகளின் பல தூதுவர்கள் தெரிவித்தார்கள். தென்னாபிரிக்க மற்றும் பிரேஸில் ஜனாதிபதிகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நாம் இவ்விடயம் தொடர்பில் உணர்வுபூர்வமாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
அரபு நாடுகள் இஸ்ரேல் தொடர்பாக கலந்துரையாடி வரும் நிலையில் நாங்கள் சந்தர்ப்பவாதிகளாக செயற்படக் கூடாது. ஜேர்மனியில் ஹிட்லர் யூதர்களை கொலை செய்த போது, அங்கு ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையாகவே இதனை நான் கருதுகிறேன். அதனால் இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு அனுப்புவதை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் தொழிலுக்கு செல்பவர்களுக்கு அங்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் இந்நாட்டில் எதிர்காலத்தில் வேறு அசம்பாவிதங்களும் இடம் பெற வாய்ப்புண்டு.
அரபு நாடுகள் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரபு நாடுகளின் பகைமை நாடாக விளங்கும் இஸ்ரேலுடன் உறவு கொள்வதும், வேலைவாய்ப்பிற்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பதும் உகந்ததாக அமையாது என்றார்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதிலளிக்கையில், இலங்கையிலிருந்து பலர் அரபு நாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்கின்றனர். ஏதாவது ஒரு நாடு எம்மிடமிருந்து தொழிலாளர்களை கோரும் பட்சத்தில் நாம் இன, மத ரீதியாக செயற்பட முடியாது. இஸ்ரேல் -காஸா யுத்தம் ஆரம்பித்த போது நாம் தொழிலாளர்களை அங்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தோம். தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுமென கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை. இஸ்ரேலினால் காஸாவில் கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்படமாட்டார்கள்.
இலங்கை வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல் -காஸா யுத்தத்தை நாம் எதிர்க்கிறோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல் கொடுத்துள்ளோம். எனவே இங்கு இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றார்.– Vidivelli