மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்!

0 533

எம்.எல்.எம். மன்­சூர்

”புத்­தரின் போத­னை­களில் புனிதப் போர் என்ற கருத்­தாக்கம் இல்லை; புத்த தர்­மத்­தையும், அதைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கூட போர் புரி­வ­தற்கு அதில் அனு­ம­தி­யில்லை. இந்தப் பின்­ன­ணியில், புத்த தர்­மத்தைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கென ஆட்­களை கொலை செய்­வ­தனை நியா­யப்­ப­டுத்த வேண்­டு­மானால், புத்­தரின் போத­னை­க­ளுக்கு வெளியில் ஒரு வலு­வான புதிய அத்­தி­யா­யத்தைச் சேர்க்க வேண்டும்.”

”(பௌத்த) துட்­ட­கை­மு­னு­வுக்கும், (இந்து) எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற போரை, சிங்­கள அர­சியல் மேலா­திக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு புனிதப் போராக சித்­த­ரித்துக் காட்­டு­வதன் மூலம் மகா­வம்ச ஆசி­ரியர் அந்தக் காரி­யத்தை கச்­சி­த­மாக செய்­தி­ருக்­கிறார்.”
”இவ்­விதம், கௌதம சித்­தார்த்­தரின் பௌத்த மதத்தை (ஐந்தாம் நூற்­றாண்டில் பாளி மொழியில் எழு­தப்­பட்ட) ‘புதிய சமயக் கிரந்­த­மான‘ மகா­வம்சம் ‘சிங்­கள பௌத்­த­மாக‘ மாற்­றி­ய­மைத்­தது” என்­கிறார் திச­ரணி குண­சே­கர.

இந்தப் பின்­ன­ணியில், புரா­தன கால வீரர்கள் மற்றும் மன்­னர்கள் குறித்து மகா­வம்சம் முன்­வைக்கும் புராணக் கதைகள் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு மத்­தியில் பின்­வரும் விதத்­தி­லான ஓர் உணர்வைத் தூண்­டி­யி­ருந்­தன:
”ஓர் உண்­மை­யான இலங்­கை­ய­ராக இருக்க வேண்­டு­மானால், ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க வேண்டும்; உண்­மை­யான ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க வேண்­டு­மானால், ஒரு பௌத்­த­ராக இருக்க வேண்டும்.”

விருந்­தோம்­பு­ப­வர்கள் (சிங்­கள பௌத்­தர்கள்) மற்றும் விருந்­தா­ளிகள் (ஏனைய சிறு­பான்மை இனங்­களைச் சேர்ந்­த­வர்கள்) என்ற கருத்­தாக்கம் இந்தத் தொன்­மத்­தி­லி­ருந்தே தோன்­றி­யது. அதன் பிர­காரம், ‘இந்தத் தீவு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது; அவர்­களே அதன் அசல் உரி­மை­யா­ளர்கள்‘ என்ற கருத்து சிங்­கள மக்­களின் பிரக்­ஞையில் ஆழ­மாக வேரூன்­றி­யது.

இதுவே மகா­வம்ச மனோ­பாவம் (Mahawamsa Mindset) என அழைக்­கப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும், சிங்­கள கிறிஸ்­த­வர்­களும் மற்றும் ஏனைய சிறு­பான்­மை­யி­னரும் ஒரு­போதும் இலங்­கை­யர்­க­ளாக இருந்து வர முடி­யாது என்ற நம்­பிக்கை உரு­வா­கி­யது.
இந்த நம்­பிக்­கையே இன்­றைய சிங்­கள தேசி­ய­வா­தத்தின் சாராம்­ச­மாக இருந்து வரு­கின்­றது.

”1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாவ­லப்­பிட்டி நகரில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் சிங்­கள இனத்­தையும், பௌத்த மதத்­தையும் மிக மோச­மான விதத்தில் இழி­வு­ப­டுத்தி ஜீ ஜீ பொன்­னம்­பலம் நிகழ்த்­திய உரை, பல நூற்­றாண்டு காலம் இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் நிலவி வந்த நல்­லு­றவை முற்­றிலும் சீர்­கு­லைத்­தது” என எழு­து­கிறார் சிங்­கள தேசி­ய­வா­தத்தின் தீவிர ஆத­ர­வாளர் ஒருவர்.

”அதன் விளை­வாக, சுதந்­தி­ரத்­துக்குப் பின்­பட்ட இலங்­கையின் 75 வருட கால வர­லாறு கண்­ணீ­ராலும், இரத்­தத்­தி­னாலும் எழு­தப்­பட வேண்­டிய நிலை தோன்­றி­யது” என அவர் முத்­தாய்ப்­பாகச் சொல்­கிறார்.

ஆனால், 1920 களி­லேயே சிங்­கள பௌத்த சமூ­கத்­துக்கு மத்­தியில் இன­வாத உணர்­வு­களைத் தூண்­டு­வ­தற்கும், அவற்றை நிலைத்­தி­ருக்கச் செய்­வ­தற்கும் அந­கா­ரிக தர்­ம­பால (1864 -–1933) முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்தார். அவ­ரு­டைய எழுத்­துக்­க­ளிலும், பேச்­சுக்­க­ளிலும் அவர் தொடர்ந்தும் தமி­ழர்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் சிங்­கள இனத்தின் எதி­ரி­க­ளா­கவே கட்­ட­மைத்து வந்தார்.

”Sri Lanka: War -Torn Island” (1998) என்ற நூலில் Lawrence J Zwier இப்­படி எழு­து­கிறார்:
”தமி­ழர்­களும், சிங்­க­ள­வர்­களும் சுமார் 2000 ஆண்டு கால­மாக இலங்­கையில் பரம வைரி­க­ளாக இருந்து வந்­துள்­ளார்கள் என்ற தப்­பெண்­ணத்தை ஜன­ரஞ்­ச­கப்­ப­டுத்­திய மிக முக்­கி­ய­மான தலைவர் அந­கா­ரிக தர்­ம­பால. அவர் பல சந்­த­ரப்­பங்­களில் மகா­வம்­சத்தை மேற்கோள் காட்­டி­யி­ருக்­கிறார்; அதில் எழு­தப்­பட்­டி­ருக்கும் அனைத்து விட­யங்­களும் முற்­றிலும் உண்­மை­யா­னவை என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தே அவர் அவ்­வாறு கூறி­யி­ருக்­கிறார்…. அவ­ரு­டைய பெரும்­பா­லான பேச்­சுக்­களும், எழுத்­துக்­களும் இன­வாத இயல்­பி­லா­னவை. சிங்­க­ள­வர்கள் இன ரீதியில் தூய ஆரி­யர்கள் என்ற விட­யத்தை அவர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்தார். சிங்­க­ள­வர்­களின் பூர்­வீகம் வேறு, தமி­ழர்­களின் பூர்­வீகம் வேறு என்­பது அவ­ரு­டைய நிலைப்­பாடு. அதனால், தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளிலும் பார்க்க தாழ்­வா­ன­வர்கள் என்று அவர் கூறினார்.”
தர்­ம­பா­லவின் பரப்­பு­ரைகள் கார­ண­மாக சுதந்­தி­ரத்­துக்கு முன்­ன­ரேயே இந்த மகா­வம்ச மனோ­பாவம் சிங்­கள சமூ­கத்தில் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்­தது. இதற்­கான சுவா­ர­சி­ய­மான ஓர் உதா­ரணம் அசோ­க­மாலா (1947) என்ற சிங்­கள திரைப்­படம்.

இரண்­டா­வது சிங்­களப் பட­மான அசோ­க­மாலா கோயம்­புத்தூர் சென்ரல் ஸ்டூடி­யோவில் தயா­ரிக்­கப்­பட்­டது. T.R. கோபு என்ற தமிழர் அதன் இயக்­குநர். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்­கையில் அப்­படம் திரை­யி­டப்­பட்­டது. அக்­கால சிங்­கள பத்­தி­ரி­கைகள் ‘அசோ­க­மாலா‘ திரைப்­படம் தொடர்­பான விமர்­ச­னங்­களை கடும் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் முன்­வைத்­தி­ருந்­தன. இது தொடர்­பாக ‘சர­சவி சந்­த­ரஸ‘ என்ற பத்­தி­ரிகை எழு­திய ஆசி­ரியர் தலை­யங்கம் இது:

”இப்­பொ­ழுது கொழும்பு திரை­ய­ரங்­கு­களில் காண்­பிக்­கப்­பட்டு வரும் ‘அசோ­க­மாலா‘ என்ற திரைப்­படம் ஒட்­டு­மொத்த சிங்­கள இனத்தின் மீதும் அவ­தூறு பொழிந்­துள்­ளது. மாவீ­ரனும், சிங்­கள பேர­ர­ச­னு­மான துட்­ட­கை­முனு ஒரு கோழை­யாக, பல­வீ­ன­மான மனி­த­னாக சித்­த­ரிக்­கப்­ப­டு­வதைப் பார்த்து எந்­த­வொரு சிங்­கள மகனும் மௌன­மாக இருக்க முடி­யாது….”

”….புத்த சாச­னத்­தையும், சிங்­கள இனத்­தையும், சிங்­களத் தீவையும் தமி­ழர்­களின் பிடி­யி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­காகப் பிறந்­தவன் தான் மாவீரன் துட்­ட­கை­முனு…. அந்தக் கால கட்­டத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் இடையில் ஒரு பாரிய பிளவு நிலவி வந்­தது. அதற்குப் பதி­லாக அக்­கா­லத்தில் தமி­ழர்­க­ளுக்கும், சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஒரு சகோ­த­ரத்­துவம் நிலவி வந்­த­தாகக் காட்­டு­வ­தற்கு இப்­ப­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் முயற்சி வெட்­கக்­கே­டான ஒரு அவ­தூறு; பொய்; வர­லாற்றை திசை­தி­ருப்­பு­வ­தற்­கான ஒரு முயற்சி”.

ஆனால், மார்ட்டின் விக்­ர­ம­சிங்க (மயூ­ர­பாத என்ற புனை­பெ­யரில்) எழு­திய விமர்­சனம் இந்தப் பார்வைக் கோணத்தை முற்­றிலும் நிரா­க­ரிக்கும் விதத்தில் வர­லாறு குறித்த துல்­லி­ய­மான ஒரு பார்­வையை முன்­வைத்­தது:

”…..சோழர் படையை முறி­ய­டித்த பின்னர் பௌத்த மதத்தின் கொடியின் கீழ் நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்­திய மாவீ­ர­னாக இள­வ­ரசன் துட்­ட­கை­மு­னுவை வர­லாறு சித்­த­ரிக்­கின்­றது. அவன் தமி­ழர்­க­ளுடன் நட்­பு­றவைப் பேணு­வ­தற்கு முயற்­சித்த சந்­தர்ப்­பத்தில் ஒரு கீழ்­மட்ட படை­ய­தி­காரி துட்­ட­கை­மு­னு­வுக்கு எதி­ராக கலகம் செய்தான் எனக் கூறு­வது வர­லாற்று ரீதியில் பொருத்­த­மற்­றது…. நாட்­டையும், மக்­க­ளையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்த சோழர்­களின் அந்­நியப் படை­க­ளுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட போர் மகா­வம்­சத்தில் ஒரு சிங்­கள – தமிழ் போராக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.”

”அந்த ஆக்­கி­ர­மிப்­புக்குத் தலைமை தாங்­கிய சோழ மன்னன் கொல்­லப்­பட்டு, அவ­னு­டைய படை முறி­ய­டிக்­கப்­பட்ட பின்னர், இந்­நாட்டில் வாழ்ந்து வந்த சிங்­க­ள­வர்­க­ளுக்கும், திரா­வி­டர்­க­ளுக்­கு­மி­டையில் எத்­த­கைய பிரி­வி­னை­களும் நிலவி வர­வில்லை. இள­வ­ரசன் துட்­ட­கை­மு­னுவின் காலத்தில் இடம்­பெற்ற சோழ மன்­னனின் ஆக்­கி­ர­மிப்பின் போது சிங்­கள பௌத்­தர்­களும், தமிழ் பௌத்­தர்­களும் நசுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லேயே அந்தப் பிளவு தோன்­றி­யது. அந்­நிய இரா­ணுவம் முறி­ய­டிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் ‘தீர்த்து வைக்­கப்­பட வேண்­டிய சிங்­கள – தமிழ் பிரி­வி­னை­யொன்று‘ இருந்து வர­வில்லை.”
1950 களில் செல்­வ­நா­யகம் போன்­ற­வர்கள் முன்­வைத்த சமஷ்டிக் கோரிக்­கை­யையும், 1980 களில் எழுச்­சி­ய­டைந்த தமி­ழீழ கோரிக்­கை­யையும், அத­னுடன் இணைந்த விதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்­தையும் இந்த மகா­வம்ச மனோ­பாவ கருத்­தி­யலை பரப்­புரை செய்­வ­தற்­கான ஒரு சிறந்த வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள் சிங்­களத் தேசி­ய­வா­திகள்.

எனவே, ‘சுதந்­திர இலங்­கையின் எழு­பத்­தைந்து வருட கால வர­லாறு ‘கண்­ணீ­ராலும், இரத்­தத்­தி­னாலும் எழு­தப்­பட்­ட­மைக்கு‘ பொன்­னம்­ப­லத்தைப் பார்க்­கிலும், தர்­ம­பா­லவும், அவர் போஷித்து வளர்த்த (இன­வெ­றுப்பு) தேசி­ய­வா­தத்தை அதே விதத்தில் முன்­னெ­டுத்து வரும் (‘1956 இன் குழந்­தைகள்‘ என தம்மை அழைத்துக் கொள்ளும்) சிங்­கள தேசி­ய­வா­தி­க­ளுமே பொறுப்புக் கூற வேண்டும்.

சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தில் இந்த மனோ­பாவம் எந்­தெந்த வழி­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது என்­பதை எடுத்துக் காட்­டு­வ­தற்கு உதா­ர­ணங்­களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் மிக முக்­கி­ய­மா­னது அர­சியல் யாப்பில் பௌத்த மதத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அதி­வி­சேட முக்­கி­யத்­துவம். அடுத்­தது, அரச கரும மொழிகள் தொடர்­பான அர­சியல் யாப்பின் பிரிவு 18 (1) மற்றும் 18 (2) என்­ப­வற்றில் தரப்­பட்­டி­ருக்கும் பின்­வரும் விநோ­த­மான வாக்­கி­யங்கள்:

18. (1) இலங்­கையின் அரச கரும மொழி சிங்­கள மொழி­யாதல் வேண்டும்.
(2) தமிழும் அர­ச­க­ரும மொழி­யாதல் வேண்டும்.
ஒரே வாக்­கி­யத்தில் இதனை சொல்ல முடி­யாமல் போனது ஏன்? இதன் பின்­ன­ணியில் செயற்­படும் நுட்­ப­மான உள­வியல் என்ன?
ஓர் ஒப்­பீட்­டுக்­காக அரச கரும மொழிகள் தொடர்­பாக தென்­னா­பி­ரிக்க அர­சியல் யாப்பு என்ன கூறு­கி­றது என்­பதைப் பார்ப்போம்.
தென்­னா­பி­ரிக்க அர­சியல் யாப்பின் பிரிவு 6(1) ”குடி­ய­ரசின் அரச கரும மொழிகள் Sepedi, Sesotho, Setswana….” எனத் தொடங்கி பதி­னொரு மொழி­களை வரி­சைப்­ப­டுத்­து­கி­றது. ஆனால், பெருந்­தொ­கை­யான பழங்­குடி மொழி­களைக் கொண்ட அந்­நாட்டின் குடித்­தொ­கையில் ஆகக் கூடிய சத­வீ­தத்­தினர் (23%) பேசும் Isi Zulu என்ற மொழி அந்தப் பட்­டி­யலில் கடை­சியில் அதா­வது, பதி­னோ­ரா­வது ஸ்தானத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நாட்டு மக்­களில் 16 சத­வீ­தத்­தினர் பேசும் இரண்­டா­வது பெரும்­பான்மை மொழி­யான Isi Xhosa பத்­தா­வது இடத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மையை இலங்­கையில் கற்­பனை செய்து கூட பார்க்க முடி­யுமா?
தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­படும் பொழுது தோன்றும் எதிர்ப்­புக்­களும், ‘தமிழ் பௌத்­தர்கள் இருந்து வந்­துள்­ளார்கள்‘ என வர­லாற்று ஆதா­ரங்­க­ளுடன் கூறும் பொழுது தோன்றும் அதீத பதற்ற உணர்­வு­களும் இந்த வகையைச் சேர்ந்­தவை. ‘சிங்­கள பௌத்தம் என்ற கருத்­தாக்கம் கட்­ட­மைத்­தி­ருக்கும் தமிழ் விரோத உணர்வு கார­ண­மாக ‘தமிழ் பௌத்தம்‘ என்ற சொல்லே கடும் ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

2015 ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­யான போது விமல் வீர­வன்ச தெரி­வித்த கருத்து:

”பெரும்­பான்மை மக்­களில் சிறு தொகை­யி­னரும், சிறு­பான்மைச் சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் பெரும் எண்­ணிக்­கை­யிலும் வாக்­க­ளித்து ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள்”.

இலங்கைப் பிர­ஜை­க­ளான தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளுக்கு (சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளுக்கு இருக்கும் அதே­ய­ள­வி­லான) மதிப்பு இருந்து வர முடி­யாது என்­பதே அவர் இங்கு சொல்ல வரும் விடயம்.
”கோல்பேஸ் அற­க­லய பூமியில் தாரா­ள­மாக பிரி­யா­ணியும், வட்­ட­லப்­பமும் பரி­மா­றப்­ப­டு­வதை நாங்கள் பார்த்தோம்” என்­கிறார் நளின் டி சில்வா.
”விதி­வி­லக்­கான விதத்தில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் பெண்­களும், மௌலவிமாரும் அங்கு திரண்­டி­ருந்­ததைப் பார்க்க முடிந்­தது” என்று எழு­து­கிறார் மற்­றொரு சிங்­கள தேசி­ய­வா­தி­யான சேன தோர­தெ­னிய.

”(சிங்­கள) அர­சுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்யும் உரிமை முஸ்­லிம்­க­ளுக்கு – குறிப்­பாக, சிறு­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு – இல்லை; அதனை ஏற்றுக் கொள்­ளவும் முடி­யாது” என்­பதே இத்­த­கைய கருத்­துக்­க­ளுக்கு ஊடாக இவர்கள் பூட­க­மாக முன்­வைக்க முயலும் நிலைப்­பாடு.

”சிங்­கத்தின் மக்கள்: சிங்­கள அடை­யாளம் மற்றும் வர­லாற்­றி­னதும், வர­லாற்­றி­ய­லி­னதும் கருத்­தியல்” (1979) மற்றும் ”இனப் போராட்டம் நிகழ்ந்து வரும் ஒரு கால கட்­டத்தில் வர­லாற்­றியல்:

சம கால இலங்­கையில் கடந்த காலம் கட்­ட­மைக்­கப்­படும் விதம்” (1995) போன்ற விரி­வான ஆய்வுக் கட்­டு­ரை­களில் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் வர­லாற்­றுத்­துறை பேரா­சி­ரியர் லெஸ்லி குண­வர்­தன இந்த ‘மகா­வம்ச மனோ­பாவம்‘ தொடர்­பான சில கேள்­வி­களை எழுப்­பி­யுள்ளார்.
” பன்­னி­ரண்டாம் நூற்­றாண்டில் எழு­தப்­பட்ட ‘தம்ம பிர­தீப்­பி­காவ‘ என்ற காவி­யத்­தி­லேயே முதன் முதலில் ”சிங்­கள இனம் என்ற சொல் காணப்­ப­டு­கி­றது” என அவர் முன்­வைத்த கருத்து கடும் சர்ச்­சை­களைக் கிளப்­பி­யது.

”சிங்­கத்தின் மக்கள்: சம­கால இலங்­கையில் சிங்­கள இனத்­துவ அடை­யாளம், கருத்­தியல் மற்றும் வர­லாற்றுத் திரி­பு­வாதம்” (1989) என்ற நீண்ட கட்­டு­ரையில் அதற்கு எதிர்­வி­னை­யாற்­றினார் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் சிங்­க­ளத்­துறை பேரா­சி­ரி­ய­ரான கே என் ஓ தர்­ம­தாச (ஆர்­வ­முள்­ள­வர்கள் இணை­யத்தில் தேடி, அந்த ஆங்­கிலக் கட்­டு­ரை­களை படிக்க முடியும்).
பதி­னேழாம் மற்றும் பதி­னெட்டாம் நூற்­றாண்­டு­களில் எழு­தப்­பட்ட ‘கிரள சங்தேசய‘ மற்றும் ‘வடிக சட்டன‘ போன்ற சிங்கள காவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான வன்மம், கண்டி இராச்சியத்தில் அக்கால கட்டத்தில் நிலவி வந்த (சிங்கள – தமிழ் உறவுகள் தொடர்பான) முதன்மைக் கருத்தாக்கத்துக்கு நேர்மாறானது என்கிறார் லெஸ்லி குணவர்தன.

ஆனால், அநகாரிக தர்மபாலவின் வாரிசுகளான குணதாச அமரசேகர, நளின் டி சில்வா, சேன தோரதெனிய மற்றும் வசந்த பண்டார போன்ற சமகால தேசியவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களையும், (ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர்) முஸ்லிம்களையும் சிங்களவர்களின் எதிரிகளாக கட்டமைக்க முயற்சித்து வருகின்றார்கள்.

சிங்கள சமூகத்தின் முதன்மைக் கருத்தியலாக அந்தச் சிந்தனைப் போக்கு நீடிக்கும் வரையில், உத்தேச புதிய அரசியல் யாப்பில் இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக (Secular Nation) பிரகடனம் செய்வது எப்படிப் போனாலும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபை அந்தஸ்தை பெற்றுக் கொள்வது கூட சாத்தியப்பட முடியாது.

ஏனென்றால், அத்தகைய ஒரு சிறு நிர்வாக ஏற்பாட்டையும் கூட, ‘சிங்கள இனம் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக‘ சித்தரித்துக் காட்டி, அதற்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டும் காரியத்தை இன்றைய சூழலில் மிக எளிதில் மேற்கொள்ள முடியும்.

அந்தப் பின்புலத்தில், கரையோர அம்பாறை மாவட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற அபிலாஷை மிக்க கோரிக்கைகள் தொடர்ந்தும் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்க முடியும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.