நாட்டில் அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை தோற்றுவிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளைத் தூண்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவை இயல்பாகவே இடம்பெறுகின்றனவா அல்லது திட்டமிட்டு தோற்றுவிக்கப்படுகின்றனவா என்பதை உறுதியாகக் கூற முடியாதுள்ளது. அடுத்த வருடம் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரசியல் பிரசாரங்களுக்கு தீனி போடுவதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
அந்த வகையில்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மெளலவி அப்துல் ஹமீத் எனும் மார்க்கப் பிரசாரகர் பரதநாட்டியம் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழ் முஸ்லிம் மக்களிடையே பலத்த வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. இக் கருத்துக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் ஓரிரு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் பொலிஸ் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. சில அமைப்புகள் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டன. சமூக வலைத்தளங்களில் இரு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் தமக்கிடையே கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே குறித்த மெளலவியின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இக் கருத்து தொடர்பில் அவர் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் தற்போது மீண்டும் மத நல்லிணக்கம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்தொன்று சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. ‘‘மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும், கண்டனத்துக்குரியதுமாகும். மதத்தலைவர்கள் பிற மதங்களை, கலாசாரங்களை மதித்து நடப்பவர்களாக இருக்கவேண்டியதுடன், சமூகங்களிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்களாக திகழவேண்டும்’’ எனவும் உலமா சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் இந்து குருக்களும் இந்து அமைப்புகளும் உலமா சபையைச் சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தனர்.
இது மாத்திரமன்றி அண்மையில் சக மதங்களைப் புண்படுத்தும் வகையில் இலங்கையில் மேலும் சிலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் கவனிப்புக்குரியதாகும். குறிப்பாக இந்திக்க தொடவத்த என்பவர் நபிகளாரையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேபோன்று முதித்த ஜயசேகர என்பவரும் முகநூலில் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாட்டில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட மற்றொரு சம்பவமே கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்ணான்டோ பெளத்த, இந்து, இஸ்லாமிய சமயங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றமையாகும். நேற்றைய தினம் அவர் நாடு திரும்பியுள்ளதுடன் 48 மணி நேரங்களுக்குள் சிஐடியிடம் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
தீவிர பெளத்த பிக்குகளைப் பொறுத்தவரை இவ்வாறான கருத்துக்களை அவர்கள் சர்வசாதாரணமாகவே வெளியிட்டு வருகின்றனர். ஞானசார தேரர் முதல் மட்டக்களப்பிலுள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் வரை இப் பட்டியல் நீண்டு செல்கிறது.
நாட்டில் இன மத நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டிய மத தலைவர்களே இவ்வாறு மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல.
இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு பின்னர் மன்னிப்புக் கோருவதை விட முன்கூட்டியே நிதானமாக தயார்படுத்தி தமது உரைகளை அமைத்துக் கொள்வதே பொருத்தமானதாகும். சில நாடுகளைப் பொறுத்தவரை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களையே இவ்வாறான பிரசாரகர்கள் தமது உரைகளில் பயன்படுத்தலாம். எனினும் இலங்கையில் அவ்வாறான ஜனநாயகத்திற்கு முரணான நடைமுறைகள் இல்லை. மத தலைவர்களுக்கும் பிரசாரகர்களுக்கும் விரும்பியதை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக வாயில் வருவதையெல்லாம் பேசி மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையும் தவறெனக் காண முடியாது.
எனவேதான் சகல மதங்களையும் சேர்ந்த பிரசாரகர்கள் இவ்வாறான தவறுகளை தொடர்ந்தும் இழைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli