பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் முதன் முறையாக போர் நிறுத்தத்திற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நான்கு நாட்களுக்கு இப் போர் நிறுத்தம் நீடிக்கும் என்றும் இக் காலப்பகுதியில் ஹமாஸினால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 50 பேர் விடுவிக்கப்படுவர் என்றும் இதற்குப் பகரமாக ஏற்கனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கட்டாரின் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் இந்த போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முதலில் நான்கு நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் இப் போர் நிறுத்தம் தேவைப்படின் மேலும் நீடிக்கப்படும். காஸாவிலிருந்து மேலும் 10 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில் போர் நிறுத்தம் மேலும் ஒரு தினத்திற்கு நீடிக்கப்படும்.இஸ்ரேல் தனது இராணுவ வாகனங்கள் முன்னேறுவதை நிறுத்துவதுடன் பலஸ்தீன பொது மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கு பயணிக்கவும் அனுமதி வழங்கும். எரிபொருள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் இக் காலப்பகுதியில் தடையின்றி காஸாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கும் ஆகிய நிபந்தனைகள் இந்த இணக்கப்பாட்டில் உள்ளடங்கியுள்ளன.
இன்று முதல் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருகின்ற நிலையில் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடாத்தியது. நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அகதி முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும் ஹமாஸை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தாது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு நேற்றைய தினமும் அறிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும் போது கூட இஸ்ரேல் பாரிய மனிதப் படுகொலைகளை காஸாவில் அரங்கேற்றியுள்ளது.
போர் நிறுத்த உடன்பாடு சற்று ஆறுதலைத் தந்தாலும் இதுவரை இஸ்ரேல் அரங்கேற்றியுள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வேதச சமூகம் என்ன தண்டனை வழங்கப் போகின்றது என்ற கேள்விக்கு பதிலில்லை. உலகளாவிய ஊடகங்கள் முன்னிலையிலும் அத்தனை சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பதிவிடப்பட்ட நிலையிலும் இஸ்ரேலினால் இவ்வாறானதொரு கொடூரத்தை எவ்வாறு அரங்கேற்ற முடிகிறது. சர்வதேச மனித உரிமைப் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா இஸ்ரேலின் குற்றங்களை மட்டும் கண்டுகொள்ளாது அதனைத் தட்டிக் கொடுப்பது போல் நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம்?
எனவேதான் போர் நிறுத்தத்துடன் நின்றுவிடாது அரபு நாடுகளும் பலஸ்தீன ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அறச்சீற்றத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான பிரசாரம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை தற்காலிகமாக அன்றி முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அழுத்தம் வழங்க வேண்டும்.
அதேபோன்று ஹமாஸ் அமைப்பும் பலஸ்தீன மக்களின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கவனத்திற் கொண்டு தனது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக காஸா மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகளை வெளியிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். நான்கு நாட்களுக்கான யுத்த நிறுத்தம் போதாது. அதனை மேலும் நீடித்து காஸா மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். – Vidivelli