- தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்
அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல நாடுகள், சேமிக்கின்ற கழிவுகள் அனைத்தையும் மீள்சுழற்சி செய்து அவற்றை வளங்களாக பயன்படுத்துவது மாத்திரமின்றி வருவாயையும் ஈட்டுகின்றன. ஆனால், எங்களுடைய நாட்டில் நாடு முழுவதும் கழிவுகள் சேமிக்கப்பட்டு அதனை திரளாக்கி ஓரிடத்தில் கொட்டி சுற்றுச் சூழல், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளே நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சூழலியலாளர்கள் குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.
கொழும்பு மாநகரத்திலேயே கழிவுகள் சேரும் நிலை கூடிய வீதத்தில் காணப்படுகிறது. இந்த நிலை கடந்த பத்து வருடங்களில் பல்வேறு மனித உயிர்களை காவுகொண்டுள்ளன. குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றாத உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்று. குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றி சிறந்த எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
புத்தளம் வாழ் மக்கள், புத்தளத்தின் அனல் மின் நிலையம் கட்டப்படும் போதும் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும், மக்களுடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இன்று அதன் மூலம் பலர் வாழ்க்கையை இழந்தது மாத்திரமின்றி குழந்தைகள் அங்கவீனமாக பிறக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் கட்டப்பட்டதன் மூலம் புத்தளம் மக்கள், இன்னும் கோரமான அனுபவங்களை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த செயற்பாட்டின் மூலம் சுற்றுச் சூழலினதும் மனித வாழ்க்கையினதும் அழிவு உறுதி என மெய்ப்பித்துக்காட்டப்பட்ட இந்த நிலையில் புத்தளம் அறுவாக்காடு பகுதியில் குப்பை கொட்டும் ஒரு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்னைய திட்டங்களால் பாதிப்படைந்த புத்தளம் மக்கள் இந்த செயற்றிட்டத்தினால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். வெந்த புண்ணின் மேல் வேல் பாய்ச்சப்பட்ட மக்களின் கோபமும் ஆத்திரமும் மாவட்டம் முழுவதும் போராட்டங்களாக வெடித்துள்ளன.
தற்போது குப்பை கொட்டுவதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேசம் சேரக்குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ளது. இதனால் புத்தளத்தை பாதுகாக்கும் வேட்கையில் புத்தளம், வனாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் சேரக்குளி மக்கள் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு முஸ்லிம் பெண்களுடைய பங்களிப்பும் பெரும்பலத்தைச் சேர்த்துள்ளது. முஸ்லிம் பெண்களுடைய ஈடுபாடு போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார, சனத் நிஷாந்த பெரேரா மற்றும் பொதுஜன பெரமுனவின் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
எதிர்ப்பில் ஈடுபடும் மக்கள் எவ்விதமான இன,மத வேறுபாடுகளின்றி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும் குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவதற்கான காரணத்தைக் கோருகிறார்கள். சேரக்குளி ஏரியை முற்றாக சிதைக்கத்தான் இந்த முடிவு என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குறித்த ஏரியை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்கள் அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் இந்த செயற்திட்டத்தை எண்ணி நிலைகுலைந்து போயுள்ளனர். இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடுகிறார்கள். சேரக்குளி ஏரியை நம்பி பல மீனவர்கள் வாழ்கிறார்கள். அறுவாக்காட்டில் குப்பைகளை கொட்டும் பட்சத்தில் ஏரியினுடைய நீர் மாசடையும் என்பது கிட்டத்தட்ட உறுதி. இதனால் பல மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்புள்ளது.
தொழிலாளர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரின் பங்களிப்பில் சத்தியாக்கிரக போராட்டம் 40 நாட்களையும் தாண்டி தொடர்கிறது.
உத்தேசிக்கப்பட்ட இடத்தில் மனித கழிவுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை நிறுவ 989 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு மெகா பொலிஸ் அமைச்சு முடிவெடுத்திருந்தது.
குப்பை கொட்டும் செயற்றிட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டபோதும், போதியளவு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டதா என்பது தொடர்பில் தெளிவு வழங்கப்படவில்லை. அமைச்சு முன்வைத்திருந்த உட்கட்டமைப்பு வசதிகளும் திட்டங்களும் முழு மாவட்டத்திற்கும் பொருந்துவதாக இருக்கவில்லை.
எதிர்ப்பில் ஈடுபடும் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று முன்னாள் மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியிருந்தார்.
“கொழும்பிலிருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு புத்தளம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வில்பத்து பிரதேசம் அழிவடையலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர் ரயில்களை குப்பைகளை ஏற்றிச்செல்வதற்காக களனியிலிருந்து ஆரம்பிக்க அம்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ” என்று அவர் கூறினார்.
“ஒரு நாளில் கொழும்பில் மட்டும் 700 தொன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மேலும், கல்கிசை, மொரட்டுவ, மஹரகம மற்றும் வத்தளை போன்ற பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் சேர்த்தால் அந்தத் தொகை 1500 தொன்னாக அதிகரிக்கும். இந்தக் குப்பைகள் புளுமெண்டல் மற்றும் கரதியான பகுதிகளிலே கொட்டப்பட்டன” என சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
குப்பை கொட்டும் பிரதேசம் வில்பத்துவிற்கு அருகில் இருப்பதால் வனஜீவராசிகள் திணைக்களமும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர். குப்பை கொட்டும் இடத்தினை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார்.
குப்பைக் கழிவுகளைக் கொண்டு மேல் மாகாணத்தின் கம்பஹா, கரதியான மற்றும் முத்துராஜவெல போன்ற இடங்களில் சக்திவள நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன.இந்த சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டு 20 வருடங்களுக்குத் தலா 10 மெகா வாட்ஸினை வழங்கமுடியுமாக விருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.சேமிக்கப்படுகின்ற குப்பைகள் நேரடியாக குப்பை இயந்திரத்துக்குள் இட்டு எரிக்கவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சேமிக்கப்படும் மனித கழிவுகளும் இவ்வாறே அகற்றப்படும்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் 6000 மெட்ரிக் தொன் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. அவற்றுள் 3500 மெட்ரிக் தொன் கழிவுகள் மேல் மாகாணத்தில் சேமிக்கப்படுவதாகும். இலங்கையின் சனத்தொகையில் 33 சதவீதமான மக்கள் மேல் மாகாணத்தில் இருப்பதே இங்கு அதிகூடிய குப்பைகள் சேமிக்கப்படுவதற்கு காரணமாகும்.
தற்போது மேல் மாகாணத்தில் குறைந்தது 1000 மெட்ரிக் தொன் குப்பைக் கழிவுகள் சேமிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் 2030 ஆகும் போது 10000 மெட்ரிக் தொன் குப்பைக் கழிவுகள் சேரும் நிலை ஏற்படும் என மேல்மாகாண கழிவு முகாமைத்துவ இயக்குநர் நளின் மன்னப்பெரும தெரிவித்தார்.
நன்றி: டெய்லி மிரர்