காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்க

159 இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு ஐ.நா. செயலாளருக்கு கடிதம்

0 204

(ஏ.ஆர்.எ.பரீல்)
காஸா மீதான இஸ்­ரேலின் அரா­ஜ­க­மான தாக்­கு­தல்­களை உடன் நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்து, 159 இலங்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்ட கடி­த­மொன்று ஐ.நாவின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டெ­ர­ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் ­ப­தி­யு­தீன் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினரால் நேரில் கையளிக்கப்பட்டது. இக்­கோ­ரிக்கை கடி­தத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­மான மைத்­தி­ரி­பால சிரி­சேன, மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோரும் கையொப்­ப­மிட்­டுள்­ளனர்.

ஐ.நா செய­லாளர் நாய­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உலக அர­சி­யலில் முக்­கிய பங்கு வகிக்கும் முக்­கிய பங்­கு­தா­ரர்கள் மத்­திய தரைக்­கடல் பகு­தியின் பிரச்­சி­னையின் மூல கார­ணத்தை ஆராய வேண்டும். சரி­யான தீர்­வினை செயற்­ப­டுத்­து­வதன் மூலம் உட­ன­டி­யாக இந்­தப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான வழி­வ­கை­களைக் கண்­ட­றிய வேண்டும்.

கிழக்கு ஜெரூ­ச­லமை தலை­ந­க­ராகக் கொண்ட 1967 ஆம் ஆண்டின் எல்­லை­க­ளுடன் கூடிய சுதந்­திர பலஸ்­தீ­னத்தை உரு­வாக்கி அங்­கீ­க­ரிக்க வேண்டும். பிராந்­தி­யத்தில் ஸ்திரத்­தன்மை மற்றும் நியா­ய­மான அமை­தியை அடை­வ­தற்­கான ஒரே வழி இது­வாகும். இதனை இஸ்ரேல் ஏற்க வேண்டும். இதற்­காக உலக நாடுகள் செயற்­பட வேண்டும்.

சர்­வ­தேச ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் சர்­வ­தேச சட்­டங்கள் மற்றும் இது தொடர்­பாக எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு உட­ன­டி­யாக போரை நிறுத்தும் படியும் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறும் நாங்கள் கோரு­கிறோம்.

இஸ்ரேல் சர்­வ­தேச சட்­டங்கள் மற்றும் உல­க­ளா­விய மனி­தா­பி­மான விதி­மு­றை­களின் கீழ் தற்­போதும் இதற்கு முன்­னரும் ஒரே மாதி­ரி­யான போர்க் குற்­றத்தை மேற்­கொண்­ட­மையைப் பொறுப்­பேற்க வேண்டும்.

இலங்கைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற வகையில் ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் அதன் அனைத்து நிறு­வ­னங்­களும் உலகில் அமை­தியை விரும்­பு­வோரும் பலஸ்தீன் மக்கள் மீதான தாக்­கு­தல்கள், ஆக்­கி­ர­மிப்­புகள் என்­ப­வற்றை நிறுத்­து­வ­தற்கு இஸ்ரேல் மீது தேவை­யான நட­வ­டிக்­கை­களை விரைந்து செயற்­ப­டுத்­து­மாறு வேண்டிக் கொள்­கிறோம்.

இஸ்­ரேலை ஆத­ரிப்­பதை நிறுத்­தி­விட்டு சர்­வ­தேச சட்­டத்­தின்­படி நய­வஞ்­ச­கத்­தன்மை மற்றும் இரட்டை நிலைப்­பாடு இல்­லாமல் நியா­ய­மான ரீதியில் நடந்து கொள்­ளு­மாறு மேற்­கத்­திய நாடு­களை வேண்­டு­கிறோம். குறிப்­பாக ஐ.நா பாது­காப்பு சபையின் மூன்று நிரந்­தர உறுப்­பி­னர்­க­ளான அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களைக் கேட்டுக் கொள்­கிறோம்.
மனித உரி­மைகள், மனித விழு­மி­யங்கள் என்­ப­வற்றைக் கையாள்­வதில் நேர்­மை­யா­கவும், உண்­மை­யா­கவும் இருக்க வேண்­டிய தருணம் இது­வாகும் என்றும் அக்கடிதத்தில் ­தெ­ரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் ­ப­தி­யுதீன் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், பலஸ்­தீ­னர்­களின் பாரம்­ப­ரிய நிலத்தை கப­ளீ­கரம் செய்து சர்­வ­தேச சட்­டங்­களை மீறி நிலை­கொண்­டுள்ள இஸ்ரேல் காஸா பொது மக்கள் மீது குண்­டு­களை வீசி அழி­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. பெரும் எண்­ணிக்­கை­யி­லான சிறு­வர்கள், பெண்கள் என நாளாந்தம் படு­கொலை செய்­யப்­பட்டு வரு­கி­றார்கள்.

இஸ்ரேல் மன­சாட்­சியே இல்­லாது தொடர்ந்தும் ­தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 120 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. எம்மால் இதனை அனுமதிக்க முடியாது. அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் ஐ.நா.வின் செயலாளர் நாயகத்திடம் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி கடிதம் மூலம் கேட்டுள்ளோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.