அழுகும் சடலங்கள் இறக்கும் குழந்தைகள்
கல்லறையாக மாறிவிட்ட ஷிபா மருத்துவமனை
காஸாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய இராணுவம் தற்போது அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையினுள் நுழைந்துள்ளது. இதை ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது.
உலக சுகாதார நிறுவனமானது அல்-ஷிபா மருத்துவமனை ‘கிட்டத்தட்ட ஒரு கல்லறையாகிவிட்டதாக’ தெரிவித்துள்ளது.
காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்கு கீழே தான் ஹமாஸின் சுரங்க அமைப்புகளுடைய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்குவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் இந்த மருத்துவமனை கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் தற்போது 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது வடக்கில் உள்ள நோயாளிகளை அனுமதிக்கும் ஒரே மருத்துவமனை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மருத்துவமனை பல்வேறு வசதிகளில் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ( 36 இல் 22 மருத்துவமனைகள்) எரிபொருள் பற்றாக்குறை, சேதம், தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
தெற்கில் செயல்படும் மருத்துவமனைகள் அதிக நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்பதால், வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை வெளியேற்றுவது சிலருக்கு “மரண தண்டனை” விதிக்கப்படுவதற்குச் சமம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மருத்துவமனையினுள் இஸ்ரேலின் 6 டாங்கிகள் இருப்பதைப் பார்த்ததாக அல் ஷிபா மருத்துவமனையில் உள்ள காதர் ஜானன் என்பவர் கூறினார். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினர் எமர்ஜென்சி பிரிவுக்குள் நுழைந்ததாகவும் அவர் கூறுகிறார்.
மருத்துவமனையை ஆயுதக்குழுக்கள் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதை தங்களின் உளவுத்துறை உறுதிப்படுத்தியிருப்பதாக அமெரிக்காவும் செவ்வாயன்று தெரிவித்தது.
ஹமாஸ் கூறுவது என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், இஸ்ரேலின் இந் நடவடிக்கை மனிதகுலத்துக்கு எதிரான போர்க் குற்றம் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த மருத்துவமனையில் 9 ஆயிரம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களும், மருத்துவமனை பணியாளர்களும் இருப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
இதற்கிடையே, தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தொடர்ந்து நான்காவது நாளாக பலஸ்தீன சுகாதாரத் துறையால் வழங்க முடியவில்லை.
மருத்துவமனையில் இருந்து செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அதிகாரிகளுக்கு 12 மணிநேர கால அவகாசம் வழங்கியதாகவும், எனினும் அது நடக்கவில்லை என்றும் கூறும் இஸ்ரேல், ஹமாஸால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்பதே தங்கள் சோதனையின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் ஆயுதக் குழுவை ஒழிக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த எதையும் செய்யும் என அமெரிக்காவுக்கான அந்நாட்டின் துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர், சுமார் 600 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர், மற்றவர்கள் அதன் பிற அறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், என்றார். “மருத்துவமனையைச் சுற்றியும் சடலங்கள் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவோ, புதைக்கவோ அல்லது பிணவறைக்கு எடுத்துச் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது,” என்று அவர் கூறினார். “மருத்துவமனை வேலை செய்யவில்லை. இது கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டது,” என்று லிண்டெமியர் கூறினார்.
அழுகும் சடலங்கள்,
இறக்கும் குழந்தைகள்
மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அழுகிய உடல்களைப் புதைப்பதறகாக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ணத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் மொஹமட் அபு செல்மியா பிபிசியிடம் தெரிவித்தார்.
மின்தடை காரணமாக இன்க்யுபேட்டர்களில் வைக்கப்பட முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குறைமாத குழந்தைகளின் நிலை குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அவற்றில் ஏழு குழந்தைகள் ஒட்சிசன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாக செல்மியா கூறினார்.
கடந்த அக்டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போதிருந்து அல் ஷிஃபாவைத் தவிர, காஸா பகுதி முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை உள்ளிட்ட பரவலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
மருத்துவர் மொஹமட் அபு செல்மியா, அல் ஷிஃபா மருத்துவமனையிலுள்ள மோசமான நிலைமை குறித்து பிபிசியிடம் கூறுகையில், அங்கு சமீபத்திய நாட்களில் 32 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்களில் மூன்று குறைமாத குழந்தைகள் மற்றும் 7 பேர் ஒட்சிசன் பற்றாக்குறையால் இறந்தனர் என்று அவர் கூறினார். டயாலிசிஸ் தேவைப்படும் இன்னும் பல நோயாளிகள் சிகிச்சை கிடைக்காததால் ‘அடுத்த இரண்டு நாட்களில் இறக்கும் அபாயம் உள்ளது’, என்றார்.
அடக்கம் செய்யப்படாமல் கிடக்கும் 150 உடல்கள்
மேலும் பேசிய மருத்துவர் அபு செல்மியா, அவர் மருத்துவமனையின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறினார். சுமார் 150 சடலங்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும், மருத்துவமனைக்குள் வந்த நாய்கள் பிணங்களை உண்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய இராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவர் மீண்டும் கோரிக்கை வைத்தார். “எந்த நோயாளியும் இறக்கக் கூடாது. அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவையைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.- Vidivelli