காஸா : ‘குழந்தைகளின் மயானம்’

0 271

பாரதி ஆனந்த்

“எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது…”

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி இது­வரை உலகில் நடந்த அத்­தனை மோதல்­க­ளிலும் உயி­ரி­ழந்த குழந்­தை­களின் எண்­ணிக்­கை­யை­விட, கடந்த அக்­டோ­பரில் தொடங்கி இது­வரை காஸாவில் இறந்த குழந்­தை­களின் எண்­ணிக்கை அதிகம். அத­னால்தான் காஸாவை ’குழந்­தை­களின் மயானம்’ என்று வேத­னை­யுடன் அழைத்­துள்ளார் ஐ.நா. பொதுச் செய­லாளர் ஆண்­டோ­னியோ குத்ரேஸ்.

கடந்த அக்­டோபர் 7-ஆம் திக¬தி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்­குதல் நடத்­தி­ய­தி­லி­ருந்து, அந்தப் பிராந்­தி­யத்தில் மனிதப் பேர­ழி­வு­களின் வீச்சு விவ­ரிக்க முடி­யாத அளவில் இருக்­கின்­றது. காஸாவில் குழந்­தை­களும், இளை­ஞர்­களும் கொத்துக் கொத்­தாக மடி­கின்­றனர். கிழக்கு ஜெரு­ச­லே­மிலும், மேற்குக் கரை­யிலும் இளை­ஞர்கள் மத்­தியில் மன அழுத்தம் அதி­க­ரித்­துள்­ளது. அங்கே பள்­ளிகள், கல்­லூ­ரிகள் மூடப்­பட்­டுள்­ளன. இரு பகு­தி­க­ளுக்கும் இடையே மக்கள் பய­ணிப்­ப­து­கூட பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இஸ்­ரே­லிய குழந்­தை­களும், பலஸ்­தீன குழந்­தை­களும் தங்கள் வாழ்நாள் முழு­வதும் மறக்க இய­லாத அதிர்ச்­சியில் தள்­ளுப்­ப­டுவர் என்று யுனிசெஃப் அமைப்பு எச்­ச­ரிக்­கின்­றது.

2019 முதல் 2022 வரை காஸா, கிழக்கு ஜெரு­சலேம், மேற்குக் கரையில் குழந்­தை­களின் நலன் சார்ந்து ஓர் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அது­பற்றி இங்கே குறிப்­பி­டு­வது பொருத்­த­மாக இருக்கும். நோர்வே நாட்டின் அக­திகள் கவுன்சில் பங்­க­ளிப்­புடன் 800 குழந்­தைகள் மற்றும் அவர்­களின் ஆசி­ரி­யர்­க­ளிடம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது அவர்கள் தெரி­வித்த கருத்­துகள் எல்­லாமே கூர்ந்து கவ­னிக்க வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்­றன.

எப்­போ­துமே பாது­காப்­பற்ற உணர்வு : காஸாவில் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட குழந்­தைகள் பலரும் எப்­போ­துமே பாது­காப்­பற்ற உணர்­வுடன் இருந்­தனர். எங்கள் ஆய்வில் பங்­கேற்ற 800 குழந்­தை­களும் இஸ்­ரேலின் 3 பெரிய தாக்­கு­தல்­களை சந்­தித்­த­வர்கள். அவர்­க­ளுக்கு உணவு பற்றி அச்­சமும், மின்­சாரம், குடிநீர் கிடைக்­காமல் போய்­வி­டுமோ என்ற அச்­சமும் எப்­போ­துமே உண்டு. பெரும்­பா­லான வீடு­களில் வறுமை தாண்­ட­வ­மாடும், வீடுகள் இல்­லாமல் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளிடம் வாழும் குழந்­தை­களின் நிலை இன்­னமும் மோசம். அவர்கள் வன்­மு­றை­க­ளுக்கு ஆளா­கின்­றனர்.

2019 இல் காஸாவில் மேற்­கொண்ட ஆய்­வின்­போது அங்­கி­ருந்த குழந்­தைகள் எதிர்­கா­லத்தில் எல்லாம் மாறும் என்ற நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர். ஆனால், 2021 இல் இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தலால் அதன் பின்னர் எங்கள் ஆய்வில் பங்­கேற்ற குழந்­தை­களில் 20 சத­வீதம் பேர் மட்­டுமே எதிர்­காலம் பிர­கா­ச­மாகும் என்று நம்­பினர். நாங்கள் நடத்­திய குழு நட­வ­டிக்­கையில் ஒரு மாண­வர்கள் குழு, “எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நம்­பிக்­கையைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது” என்று எழு­தி­யி­ருந்­தனர். இந்த எண்­ணங்­கள்தான் அவர்கள் எதிர்­கா­லத்தைப் பற்றி யோசிக்க, கனவு காண ஆசைப்­ப­ட­வி­டாமல் செய்­கி­றது.

கொரோனா தந்த நிம்­மதி: உலகம் முழு­வதும் கொரோனா பெருந்­தொற்று உயி­ரி­ழப்­பு­களை, பொருள் நஷ்­டங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால், இஸ்ரேல் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள ஹெப்ரான் 2 மற்றும் கிழக்கு ஜெரு­ச­லேமில் உள்ள குழந்­தை­க­ளுக்கு மகிழ்ச்­சியைத் தந்­தது. ஏனெனில் அப்­ப­குதி குழந்­தைகள் தினமும் இஸ்ரேல் இரா­ணு­வத்தின் பல சோதனைச் சாவ­டி­க­ளையும் தாண்டி பல்­வேறு தொந்­த­ர­வு­களைக் கடந்தே பள்ளி செல்ல வேண்டும். ஆனால், கொரோனா காலத்தில் கெடு­பி­டிகள் தளர்வால் அவர்­களால் பள்­ளிக்கு தாம­த­மின்றி செல்ல முடிந்­தது. இது குறித்து குழந்­தைகள் “தெருக்கள் அமை­தி­யாக இருந்­தன. நாங்கள் செல்லும் வழியில் இரா­ணு­வத்­தினர் எங்­களை நிறுத்­தவும் இல்லை துன்­பு­றுத்­தவும் இல்லை” என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

கடந்த அக்­டோபர் 7-க்கு முன்­பா­கவே காஸா குழந்­தை­க­ளிடம் அத்­தனை வேதனை இருந்தால் இனி அவர்கள் என்ன சொல்­வார்­களோ! அத­னால்தான் இப்­போது நடை­பெறும் போரை நிறுத்த பல தரப்­பி­லி­ருந்தும் அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. போர் நிறுத்­தப்­பட்டால் அங்கே மனி­தா­பி­மான தொண்டு நிறு­வ­னங்­களும், கொடை­யா­ளர்­களும் குவிந்­து­வி­டு­வார்கள். அங்கே மீட்பு, புன­ர­மைப்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­படும். மக்கள், குழந்­தை­களின் உடல் ரீதி­யான இழப்­பு­க­ளையும் சிதைந்­து­போன உள்­ளங்­க­ளையும் சரி செய்­யலாம். ஆனால் இந்தப் பிரச்­சி­னைக்கு நீடித்த நிரந்­தர தீர்வு காணப்­ப­டா­விட்டால் இரத்தம் சிந்திக் கொண்­டேதான் இருக்கும். துயரக் கதைகள் நீண்டு கொண்­டேதான் இருக்கும்.

“எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது” என்ற இந்த வலி­மிகு வார்த்­தைகள் காசா குழந்­தைகள் மட்­டு­மல்ல, போரினால் பாதிக்­கப்­பட்ட எந்த ஒரு குழந்­தையின் மன­நிலை இது­வா­கத்தான் இருக்கும். எங்கோ காஸாவில், உக்­ரைனில் ஏதோ ஒரு குழந்­தையின் வேதனை இது­வென்று நினைத்துக் கடந்­து­விட இய­லாது. போரினால், வெறுப்­பினால் வரும் எந்த ஆபத்தும் யாருக்கும் வெகு தூரத்தில் இல்லை.

அத­னால்தான், யூத இன அழிப்பு தொடர்­பான ஆராய்ச்­சி­யாளர் ஒருவர், இஸ்ரேல் – ஹமாஸ் போரின் தாக்கத்தை ஒரு ரஷ்ய யூத கவிஞரின் பாடல் மூலம் விளக்குகிறார். ஹயீம் நாமென் பிலாலிக் என்ற அந்தக் கவிஞர், “பழிவாங்குவோம் என்று சொல்பவர் மனிதரா! ஒரு சிறு குழந்தையின் ரத்தத்துக்காக இத்தகைய பழிவாங்கலை சாத்தான் கூட இன்னும் திட்டமிடவில்லை” என்ற பொருள்பட கவிதை வரிந்திருப்பார். ஹமாஸ் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குழந்தைகள் இறந்துள்ளனர். காஸாவில் 4000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். எண்ணிக்கை மாறுபடலாம்; ஆனால் இவை மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.