ICCPR சட்டத்தின் கீழ் ரம்ஸி ராசிக் கைது விவகாரம்: பொலிஸார் தவறிழைப்பு

வரலாற்று சிறப்புமிக்­க தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம் 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமா­றும் அரசுக்கு உத்தரவு

0 503

( எம்.எப்.அய்னா)
சமூக செயற்­பாட்­டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்­யப்­பட்­டமை, தடுத்து வைக்­கப்­பட்­டமை சட்டவிரோ­த­மா­னது எனவும் அது அவ­ரது அடிப்­படை உரி­மை­களை மீறிய நட­வ­டிக்கை எனவும் உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அதன்­படி ரம்ஸி ராசிக்­குக்கு அவரை கைது செய்த சி.ஐ.டி.யின் கணினி மற்றும் பகுப்­பாய்வு பயிற்சி பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன, அப்­போ­தைய சி.ஐ.டி. பணிப்­பாளர் டப்­ளியூ. தில­க­ரத்ன ஆகியோர் தமது சொந்த நிதி­யி­லி­ருந்து நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், ரம்ஸி ராசிக்கின் சட்டவிரோத கைதுக்கு அரசும் பொறுப்புக் கூற வேண்டும் என்­பதால் அரசும் ஒரு மில்­லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­றி­வித்­துள்­ளது.

எஸ்.சி.எப்.ஆர். 135/2020 எனும் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு ரம்ஸி ராசிக் சார்பில், சட்­டத்­த­ரணி ரம்சி பாச்­சா­வினால் தன்­னையே மனு­தா­ர­ராக குறிப்­பிட்டு தாக்கல் செய்­யப்­பட்­டது. ரம்ஸி ராசிக் கைது செய்­ய­ப்படும் போது நில­விய சூழ்நிலை­களால், அவரை மெய்­நிகர் மனு­தா­ர­ராக கொண்டு சட்­டத்­த­ரணி ரம்சி பாச்­சா­வினால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இம்­ம­னுவில் சி.ஐ.டி. பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன, சி.ஐ.டி.யின் அப்­போ­தைய‌ பணிப்­பாளர் தில­க­ரத்ன, சட்ட மா அதிபர் உள்­ளிட்ட 6 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டனர். இந்த மனு­வா­னது உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் புவ­னேக அளு­வி­ஹார, யசந்த கோதா­கொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகி­யோரை உள்­ள­டக்­கிய நீதி­யர­சர்கள் குழாம் விசா­ரித்­தது.
இதன்­போது ரம்சி ராசிக்­குக்­காக சட்­டத்­த­ரணி நுவன் போப்­பகே ஆஜ­ரா­ன­துடன், பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி இந்­துனி புஞ்­சி­ஹேவா ஆஜ­ரானார்.

கடந்த 2020 ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் தான் எழு­திய கட்­டு­ரையில் ரம்சி ராசிக், அனைத்து இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதி­ராக முஸ்­லிம்கள் சிந்­தனா ரீதி­யான ஜிஹாத் (போராட்டம் – ideological war) ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் என அழைப்பு விடுத்­தி­ருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரம்ஸி ராசிக்­கிற்கு முகநூல் வாயி­லாக உயிர் அச்­சு­றுத்தல்கள் விடுக்­கப்­பட்­டன.

2020 ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலீ­ஸா­ரிடம் தனக்கு விடுக்­கப்­படும் மிரட்­டல்­களைக் குறித்து முறை­யிட்டார். ஆனால், இந்த மிரட்­டல்­களைக் குறித்து விசா­ரணை செய்­யாமல் பொலிஸார் ராசீக்கைக் கைது செய்­தனர்.
இது குறித்து விசா­ரணை செய்த சி.ஐ.டி., ரம்சி ராசிக்கை நீதிவான் நீதி­மன்­ற‌த்­துக்கு பிணை அளிக்கும் அதி­கா­ர­மற்ற சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்ப்­பாட்டு சட்­டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்­தி­ருந்­தது.

‘ எந்­த­வொரு பயங்­க­ர­வாத அமைப்பும் ஆரம்­பத்தில் மக்­களின் மன­நி­லையை மாற்­றவே முயற்­சிப்­ப­தா­கவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்­வா­றான சில சொற்­களைப் பயன்­ப­டுத்தி இனங்­க­ளுக்கு இடையே குரோதம் ஏற்­படும் விதத்­தி­லான சமூக வலைத்­தள பதி­வு­களை அனை­வரும் பார்க்­கும்­ப­டி­யாக (பப்லிக்) பதி­விட்டு வந்­துள்ளார்.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28 ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்­க­ளிலும் அவர் இது­போன்ற பதி­வு­களைப் பதி­விட்­டுள்ளார் என்றும் அதற்கு சமூக வலைத்­த­ளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள கருத்­துக்கள் பொது மக்­க­ளி­டையே குழப்­பத்தை தூண்டும் வகையில் இருந்­துள்­ள­மையை தெளி­வா­கின்­றது.’ என சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­கா­ரிகள் நீதிவான் நீதி­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக கூறினர்.
எனினும் சில வாரங்­க­ளுக்கு முன்னர் அந்த குற்­ற­வியல் வழக்­கி­லி­ருந்து ரம்சி ராசிக் விடு­தலை செய்­யப்பட்டார்.

இந்த நிலை­யி­லேயே அவர் சார்பில் தாக்கல் செய்­யப்பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு­விலும் உயர் நீதி­மன்றம் அவ­ரது கைது சட்­டத்­துக்கு புறம்­பா­னது என தீர்­மா­னித்­துள்­ளது.

அடிப்­படை உரிமை மீறல் மனுவில் பிர­தி­வா­திகள் சார்பில் முன் வைக்­கப்­பட்ட தர்க்­கத்தில், ரம்சி ராசிக்கின் வலைப் பதிவு இன முரண்­பாடுகள், பகைமை உணர்வை தூண்­டு­வ­தா­கவும் அத­னா­லேயே கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது.

எனினும் ரம்சி ராசிக் சார்பில் உயர் நீதி­மன்­றுக்கு முன் வைக்­கப்பட்ட வாதத்தில், ரம்சி ராசிக் அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்பு ஊடாக வழங்கப்­பட்­டுள்ள கருத்து வெளிப்­பாட்டு சுதந்தி­ரத்­தையே பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­பட்­டது.
இந்த நிலையில், விசா­ர­ணையின் பின்னர் உயர் நீதி­மன்றின் தீர்ப்பை நீதி­யரசர் யசந்த கோதா­கொட, ஏனைய இரு நீதி­ய­ர­சர்­களின் இணக்­கத்­தோடு எழு­தி­யி­ருந்த நிலையில், அதில் முகப் புத்­தக பதிவு ஊடாக ஒரு விட­யத்தை வெளிப்­ப‌­டுத்­து­வது, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக வழங்­க‌ப்­பட்­டுள்ள உரிமை என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் ரம்சி ராசிக்கின் பதிவில் ‘ சிந்­தனை ஜிஹாத்’ எனும் பதம் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­மையை மிக விரி­வாக விளக்­கி­யுள்ள நீதி­யரசர், அதற்­கான ஆயு­த­மாக பேனை­யையும் விசைப் பல­கை­யையும் பயன்­ப­டுத்த வேண்டும் என ரம்சி ராசிக் அப்­ப­தி­வி­லேயே குறிப்­பிட்­டுள்­ளதன் ஊடாக, அது வன்­மு­றைக்­கான அழைப்­பல்ல என்­பது மிகத் தெளி­வாக புரி­வ­தா­கவும் அவ்­வா­றான பின்­ன­ணியில் எந்த ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளாது சி.ஐ.டி.யினர் அவரை தன்­னிச்­சை­யாகக் கைது செய்­த­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் சுட்­டிக்­க­ாட்­டி­யுள்ளார்.

அத்­துடன், கைது செய்தல், குற்­ற­வியல் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் சந்­தேக நபர் ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்தல் போன்­றன தண்­டனை தன்­மையை கொண்ட தனி மனித சுதந்­தி­ரத்­துடன் நேர­டி­யாக தாக்கம் செலுத்தவல்ல குற்­ற­வியல் நீதி நட­வ­டிக்கை என்­பதை பொலிஸ் அதி­கா­ரிகள் நினைவில் கொள்ளல் வேண்டும்.

ஒரு­வரின் அடிப்­படை உரி­மை­களை மீறும் விதத்தில் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­வதும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும், அவர்­களின் பிரிக்க முடி­யாத அடிப்­படை உரி­மை­களைப் பயன்­ப­டுத்த விரும்பும் பிற நபர்­க­ளுக்கும் கடு­மை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும். எனவே, இத்­த­கைய குற்­ற­வியல் நீதி நட­வ­டிக்­கைகள் சட்­டத்தால் வழங்­கப்­பட்­டுள்­ள­படி சுதந்­தி­ர­மா­கவும், புற­நி­லை­யா­கவும், மிகவும் கவ­ன­மா­கவும், கண்­டிப்­பா­கவும் நடத்­தப்­பட வேண்டும்.

காணக் கூடிய ஒரு குற்­றத்தை செய்த சந்­தேக நபரை சிரேஷ்ட அதி­கா­ரியின் வழி­காட்டல் அல்­லது சட்ட ஆலோ­சனை இன்றி சுய­மாக தீர்­மானம் எடுக்கும் நிலைமை ஒன்றின் போது, கைது செய்தல் அல்­லது செய்­யா­தி­ருத்தல் தொடர்பில் தீர்­மா­னத்தை அவ­ச­ரா­மாக எடுக்க வேண்டி இருப்பின் , இந்த நீதி­மன்றம் ஓர­ள­வுக்கு இலகு போக்­கினை காண்­பித்­தி­ருக்­கலாம்.

எனினும் இங்கு, முத­லா­வது பிர­தி­வாதி சிரேஷ்ட‌ அதி­கா­ரி­க­ளுடன் கலந்­தா­லோ­சிக்­கவும், சட்ட மா அதி­பரின் சட்ட ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­ளவும், அதன் பிறகு மெய்­நிகர் மனு­தா­ரரை (ரம்ஸி ராசிக்) கைது செய்­ய­லாமா வேண்­டாமா என்­பதை முடிவு செய்­யவும் போது­மான அவ­காசம் இருந்­தது.
பொறுப்­பான சட்ட அமு­லாக்க அதி­கா­ரி­யாக செயல்­ப­டு­வ­தற்குப் பதி­லாக, முத­லா­வது பிர­தி­வாதி தண்­டனைச் சட்டக் கோவையின் பிரிவு 120, சிவில் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் பிரிவு 3(1) மற்றும் கணினி குற்றச் சட்­டத்தின் பிரிவு 6(1) ஆகி­ய­வற்றை ஆயு­தங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். மெய்­நிகர் மனு­தா­ரரை (ரம்ஸி ராசிக்) கைது செய்து, அவரை 5 மாதங்கள் மற்றும் 1 வாரம் வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தமை தண்­ட­னைக்கு சம­மா­ன­தாகும்.

குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ள­மா­னது, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை நேர­டி­யாக அணு­கக்­கூ­டிய இலங்கைப் பொலிஸில் ஸ்தாபிக்­கப்­பட்ட, நன்கு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட, கட்­ட­மைக்­கப்­பட்ட மற்றும் நிபு­ணத்­துவம் வாய்ந்த திணைக்­களம் என்­பதை இந்த நீதி­மன்றம் கவ­னத்தில் கொள்­கி­றது. எனவே, முத­லா­வது பிர­தி­வா­திக்கு அரசின் சட்ட ஆலோ­ச­கர்கள், சிஐ­டியின் மூத்த அதி­கா­ரிகள் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் என பலரை அணுக முடி­யு­மான சந்­தர்ப்பம் தாரா­ள­மாக இருந்­தது.

முத­லா­வது பிர­தி­வாதி இந்த வழக்கில் தாக்கல் செய்த சத்­தியக் கட­தா­சியில் , தனது உயர் அதி­கா­ரி­களின் அறி­வு­றுத்­த­லின்­படி செயல்­பட்­ட­தாக கூற­வில்லை. சட்ட ஆலோ­ச­னை­யின்­படி செயல்­பட்­ட­தா­கவும் கூற­வில்லை. எனவே, மெய்­நிகர் மனு­தா­ரரின் (ராம்சி ராசிக்) அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­ட­தற்கு முத­லா­வது பிர­தி­வாதி முதன்மை பொறுப்­பு­தா­ரி­யாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். ரம்சி ராசிக்கின் அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தற்­கான பொறுப்பு முத­லா­வது பிர­தி­வா­தி­யுடன் முடி­வ­டை­யாது, ஆனால் ரம்சி ராசிகை கைது செய்­வதில் அவ­ரது நடத்தை தொடங்­கு­கி­றது.

மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மான விடயம் என்­ன­வென்றால், போது­மான கார­ண­மின்­றியும் ஒரு­வரின் அடிப்­படை உரி­மை­களை மீறும் வண்­ணமும் நபர்­களைக் கைது செய்­தமை தொடர்பில், மனுக்­களை ஏற்­றுக்­கொள்ளும் பொது­வான இட­மாக இந்த நீதி­மன்றம் மாறி­விட்­டது.

இத்­த­கைய கைதுகள் பெரும்­பாலும் சட்­டத்­திற்குப் புறம்­பாக தடுப்புக் காவல் கால எல்­லை­களை கொண்­டி­ருக்­கின்­றன‌. இது­போன்ற பல சட்­ட­வி­ரோதக் கைது­களை உன்­னிப்­பாக அவ­தா­னிக்கும் போது, காவல்­துறை அதி­கா­ரிகள் தங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட விருப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­காமல், ஒரு குறிப்­பிட்ட வழியில் செயல்­பட அதி­காரம் படைத்­த­வர்­களால் வற்­பு­றுத்­தப்­பட்ட நிலை­மைகள் வெளிப்­ப­டு­கின்­றன.

இந்த நீதி­மன்­றத்தின் முன் உள்ள‌ சாட்­சி­யங்கள் படி, அதி­கா­ரத்தில் உள்ள சில நபர்கள் இந்த கைது தொடர்பில் வழி­காட்­டிய நிலை­மையை காட்­டு­கி­றது. ஆனால் மனு­தா­ரரால் முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் பற்­றாக்­குறை மற்றும் முத­லா­வது பிர­தி­வா­தியின் நிலைப்­பாட்டைக் கவ­னத்தில் கொள்­ளும்­போது, அதற்­கான உறு­தி­யான தீர்­மா­னத்­துடன் எந்த முடி­வுக்கும் வர முடி­யாது.
சட்­டத்தால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தை தவிர்த்து, அர­சியல், நிர்­வாக அதி­காரம் படைத்தோர் பொலி­சா­ருக்கு வழக்கு அல்­லது எந்­த­வொரு விடயம் தொடர்­பிலும் ஆலோ­சனை வழங்­கு­வதில் இருந்து தவிர்ந்­தி­ருக்க வேண்டும் என்­பதை நான் அவ­தா­னிக்­கின்றேன்.

பொலிஸ் அதி­கா­ரிகள் போன்ற சட்ட அமு­லாக்க அதி­கா­ரிகள், சுதந்­தி­ர­மாக, பார­பட்­ச­மின்றி, நடுநிலை­யாக‌ தங்கள் கட­மை­களைச் செய்ய சுதந்­தி­ர­மாக இருக்க வேண்டும். அவர்கள் சட்­டத்­திற்கு இணங்கிச் செயல்­ப­டவும், சட்­டப்­பூர்­வ­மாக தங்­க­ளுக்கு வழங்கப்பட்­டுள்ள ‘விருப்பு தீர்­மான’ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தவும் வேண்டும்.

நீதி­மன்ற உத்­த­ர­வுகள் :
(இ) அர­சி­ய­ல­மைப்பின் 12(1), 13(1), 13(2) மற்றும் 14(1)(அ) ஆகிய உறுப்­பு­ரைகள் ஊடாக‌ உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டுள்ள மெய்­நிகர் மனு­தா­ரரின் (ரம்சி ராசிக்) அடிப்­படை உரி­மை­களை முத­லா­வது பிர­தி­வாதி மீறி­யுள்ளார்.
(ii) மெய்­நிகர் மனு­தா­ரரின் ( ரம்சி ராசிக்) மேற்­கு­றிப்­பிட்ட அடிப்­படை உரி­மை­களை மீறும் போது, முத­லா­வ‌து பிர­தி­வாதி, ஒரு பொலிஸ் அதி­கா­ரி­யா­கவும், சிஐடி அதி­கா­ரி­யா­கவும், அவ­ரது அலு­வ­ல­கத்தில் செயற்­பட்­டுள்ளார். எனவே, மெய்­நிகர் மனு­தா­ரரின் (ரம்சி ராசிக்) மேற்­கூ­றிய அடிப்­படை உரி­மை­களை 1வது பிர­தி­வா­தியால் மீறப்­பட்­ட­தற்­கான பொறுப்பை 2வது பிர­தி­வா­தி­யான‌ சிஐடி பணிப்­பா­ளரும் அரசும் ஏற்க வேண்டும். ஏனெனில், உரிமை மீறலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என உறுதி செய்யப்பட்டால் அன்றி, தமது அலுவலகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து ஊழியர்களின் செயல்களுக்கும் அரசு பொறுப்பாகும்.
(iii) முதலாவது பிரதிவாதி இந்தத் தீர்ப்பின் ஒரு மாதத்திற்குள் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து மெய்நிகர் மனுதாரருக்கு (ரம்சி ராசிக்) 30,000/= ரூபாவை செலுத்த வேண்டும்.
(இவ்) இரண்டாவது பிரதிவாதி தனது தனிப்பட்ட நிதியிலிருந்து மெய்நிகர் மனுதாரருக்கு( ரம்சி ராசிக்) 30,000/= ரூபாவை செலுத்த வேண்டும்.
(v) அரசு மெய்நிகர் மனுதாரருக்கு ( ரம்சி ராசிக்) ஒரு மில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.
(vii) 6வது பிரதிவாதி, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் இந்தத் தீர்ப்பில் உள்ள கொள்கைகளின் சுருக்கத்தை பொலிஸ் மா அதிபருக்கு வழங்க வேண்டும். பின்னர் அது அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மா அதிபரால் ஆலோசனையாக வழங்கப்படல் வேண்டும். அவை பொலிஸ் அதிகாரிகளால் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படல் வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணைகளுக்கு மனுதாரருக்கு ஏற்பட்ட செலவை அரசு வழங்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.