காசாவில் நெத்தன்யாகுவின் இஸ்ரவேல் படைகள் மேற்கொண்டுள்ள இனச்சுத்திகரிப்பையும், கொலைகளையும், அழிவுகளையும், அவற்றுள் குறிப்பாக, பச்சிளம் பாலகரின் உயிரற்ற சடலங்களையும் அவற்றைக் கட்டியணைத்துக் கதறும் தாய்க்குலத்தையும் காணொளிகள் காட்டும்போது எந்தக் கல்நெஞ்சமும் இளகாதிருக்க முடியாது. போருக்கும் சில வரையறைகளை சர்வதேசம் விதித்துள்ளது. அவற்றையெல்லாம் மீறி நெத்தன்யாகுவின் படைகள் செயற்படுவதை கண்டும் காணாததுபோல் இருந்துகொண்டு அப்போருக்கு வெளிப்படையாகவே ஆதரவளிக்கும் அமெரிக்காவையும் அதன் அடிவருடிகளையும் இறைகூட மன்னிக்காது. ஹிட்லரின் மறுபிறவியோ நெத்தன்யாகு என்று கருதும் அளவுக்கு அவரின் கொடூரங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவை மிகக்கொடிய ஷைத்தான் என்று 1979 இல் ஆயதுல்லாஹ் குமேனி வருணித்தமை பலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்த ஷைத்தானே இன்று புதிய மத்திய கிழக்கு ஒழுங்கு என்ற ஒரு புதிய வேதத்தைப் போதிக்கிறது. அதைப்பற்றிப் பின்னர் விளக்குவோம்.
ஹமாஸ் போராளிகள் ஒக்டோபர் ஏழில் ஏற்படுத்திய இரத்தக்களரியைப்பற்றி விபரிக்கையில் அது ஒரு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை என்பதை எனது முன்னொரு கட்டுரை எடுத்துக்காட்டியது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைப்பற்றி ஊடகங்கள் மூலம் வாசகர்கள் அறிந்திருப்பர். எனவே அவற்றையெல்லாம் மீண்டும் விபரிக்க இக்கட்டுரை விரும்பவில்லை. ஆனால் அவை தொடர்பாக வெளியுலகு எவ்வாறு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்பதையும் அதன் தாக்கங்களைப்பற்றிய சில உண்மைகளையும் வாசகர்களுடன் இச்சந்தர்ப்பத்திற் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலாவதாக அமெரிக்காவின் நாடகம். இஸ்ரவேலுக்குத் தன்னைப் பாதுகாக்கும் உரிமை உண்டு என ஆரம்பித்து, ஹமாஸை ஓர் அப்பழுக்கற்ற பயங்கரவாதத் தீங்கு என வருணித்து, அதை ஒழிக்கும்வரை இஸ்ரவேல் தனது போரை நிறுத்த முடியாது என முடிவுசெய்து, இப்போது அப்போர் சம்பாதித்த உலக வெறுப்பைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலங்களுக்கு மட்டும் காசா மக்கள் முடியுமானால் தப்பியோடுவதற்கும் முடியாதவர்களுக்குச் சொற்ப வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளது. அவ்வாறானால் எஞ்சிய 20 மணித்தியாலங்களுக்கும் காசாவை நிர்மூலமாக்குவதற்கு இஸ்ரவேலுக்கு ஜோ பைடன் பூரண அனுமதி வழங்கியுள்ளார் என்பது புலனாகவில்லையா? காசா குழந்தைகளின் மயானபூமி என ஐ. நாவின் செயலாளர் நாயகம் கூறியுள்ளமை இன்னும் வெள்ளை மாளிகைக்குக் கேட்கவில்லை போலும். இதுவரை பதின்மூவாயிரம் மனித உயிர்களை இஸ்ரவேல் இராணுவம் பலிகொண்டுள்ளது என்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் வழங்கியுள்ளன. இருந்தும் உடனடியான போர் நிறுத்தத்தை ஆதரிக்க அமெரிக்கா தயாரில்லை. இதனிடையில், பிரஞ்சு நாட்டின் தலைவனும் சிறுவர்களை மட்டும் கொல்ல வேண்டாம், அதைத் தவிர்த்து இஸ்ரவேல் எதுவும் செய்யலாம் என்றவாறு அறிக்கை விடுத்துள்ளார். இவர்கள் எல்லாரினதும் கைகளிலும் பலஸ்தீன மக்களின் இரத்தம் படிந்துள்ளது. இவர்கள் இஸ்ரவேலுக்கு வழங்கிய ஆயுதங்களும் ஆதரவுமே இன்று காசாவை நிர்மூலமாக்கியுள்ளது.
இரண்டாவதாக அரபு நாடுகளின் கையறுநிலை. இதைப்பற்றியும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விபரித்துள்ளோம். இந்தப் பரிதாபத்துக்கு முக்கியமான ஒரு காரணம் இந்த நாடுகளின் அரசுகள் எல்லாமே அமெரிக்காவின் தயவில் இயங்குவது. மக்களின் வாக்குகளால் ஜனநாயக அடிப்படையில் இவை இயங்குமாயின் சுல்தான்களும் அமீர்களும் அரசர்களும் இளவரசர்களும் ஆட்சியில் இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் அவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம். காரணம் அரபு நாடுகளின் எண்ணெய்யும் எரிவாயுவும் தடையின்றி அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் கிடைக்க வேண்டுமாயின் அமெரிக்காவின் புதிய மத்திய கிழக்கு ஒழுங்கு நிலைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தப் பழமைவாதிகளின் ஆட்சி இன்றியமையாதது. 2011 இல் அரபு வசந்தம் என்ற அரசியற் பூகம்பம் கைரோவில் வெடித்ததும் அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு அதில் அமெரிக்கா வெற்றி கண்டதும் அமெரிக்க ஒழுங்கை நிலைநாட்டவே. இந்த ஒழுங்கின் இன்னோர் அங்கம்தான் 2020 செப்டம்பர் 15 இல் இஸ்ரவேலுக்கும் பஹ்ரைன் உட்பட ஏழு ஐக்கிய அரபு அமீரகங்களுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட இப்றாகிம் இணக்கப்பாடுகள். அதன் ஒரே குறிக்கோள் இந்த அமீரகங்களுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே சிநேக உறவு ஏற்படவேண்டும் என்பதே. இப்போது சவூதி அரேபியாவும் இஸ்ரவேலுடன் சினேக உறவு கொண்டாட ஆயத்தமாகியுள்ளது. ஆதலால் இவர்கள் இப்போது நடைபெறும் போரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படுவர் என எதிர்பார்ப்பது தவறு. அவர்கள் அந்தப் பிரச்சினையைக் கைகழுவிவிட்டனர் என்று கூறுவதே பொருத்தம். இருந்தும் பெருகிவரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நட்புறவில் வெடிப்புகள் ஏற்படலாம்.
இருந்தும் இப்போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. மனிதாபிமானமும் சுதந்திர வேட்கையும் சமாதானமும் விரும்பும் கோடிக்கணக்கான மக்கள் இப்போரை உடனடியாக நிறுத்துமாறுகோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் யூத மக்களுக்கு எதிராகவோ இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவோ அல்லாது பக்கச்சார்பின்றி பலஸ்தீன மக்களும் யூதமக்களும் தங்கள் தங்கள் நாட்டில் சுதந்திரமாகவும் இறைமையுடனும் சமாதானமாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடனும் நெத்தன்யாகுவின் மூர்க்கத்தனமான போர் வெறிக்கெதிராகவும் நடைபெறுகின்றன.
உதாரணமாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாகவும், லண்டனில் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஆஸ்திரேலியாவின் எல்லா தலைநகரங்களிலும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் இனமத பேதமின்றி இணைந்து இவ்வார்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இந்தப் பின்னணியில் இலங்கையில் முஸ்லிம்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைப்பற்றி ஒரு சில கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
முஸ்லிம்கள் தனியாக ஏறாவூரிலும் கல்முனையிலும் கிண்ணியாவிலும் காத்தான்குடியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதால் அது உலக கவனத்தை ஈர்க்கப் போவதில்லை. மூலைக்குள் ஆர்ப்பாட்டம் நடாத்தி யாது பயன்? அவ்வார்ப்பாட்டங்கள் தலைநகரிலே அமெரிக்க தூதரகத்தின் முன்பாகவோ இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பாகவோ அரபு நாடுகளின் தூதரகங்களின் முன்பாகவோ சகல இன மக்களும் கலந்த ஆர்ப்பாட்டங்களாக அமைதல் வேண்டும்.
இதுவரை இலங்கை முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளை தேசிய ரீதியிலோ சர்வதேச ரீதியிலோ மற்றைய இனங்களுடன் சேர்ந்து முன்வைக்காமல் தமக்குள்ளாகவே குண்டாஞ் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோன்று அவற்றுக்குத் தீர்வுகாண முற்பட்டதால் அவர்களின் எந்தப் பிரச்சினையும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை என்று கூறலாம். அதேபோன்று மற்றைய இனங்கள் தேசிய மட்டத்தில் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் போராடும்போதும் முஸ்லிம்கள் ஓரத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். இந்தப் பழக்கதோஷமே பலஸ்தீன ஆர்ப்பாட்டங்களிலும் பிரதிபலித்துள்ளன.
முஸ்லிம்களுக்னெ இரண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவும் இயங்குகின்றது. இவர்களின் தலைமையில் ஏன் பலஸ்தீனுக்கான ஒரு தேசியமட்ட ஆர்ப்பாட்டத்தை சகோதர இனங்களின் ஆதரவுடன் ஒழுங்கு செய்ய முடியாது? ஒரு புறத்தில் பலஸ்தீன மக்கள் விடயத்தில் சர்வதேசத்தின் இரட்டை வேடத்தைப்பற்றி ஜனாதிபதி பேசுகிறார். மறுபுறத்தில் பலஸ்தீனப் பிரச்சினைக்கு இரட்டை அரசுத் தீர்வையே இலங்கையும் ஆதரிக்கிறதென்ற அர்த்தமற்ற ஒரு பல்லவியை வெளிநாட்டு அமைச்சர் பாடுகிறார். ஜனாதிபதியோ முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகப் பேசுகிறார். அமைச்சரோ மேற்கு நாடுகளின் பொருளாதார ஆதரவைக் காப்பாற்றிக்கொள்ளவும் இஸ்ரவேலின் நட்பைக் காப்பாற்றவும் பேசுகிறார். ஆனால் இஸ்ரவேலின் ஐம்பத்தாறு வருட அடக்குமுறைக்குள் அகப்பட்டு அதிலிருந்து விடுதலைகாணப் போராடும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அவர்கள் எந்தக் குரலும் இதுவரை கொடுக்கவில்லை. உதாரணமாக, இஸ்ரவேல் தனது 75ஆவது வருட வைபவத்தை கொழும்பிலே கொண்டாடும்போது அதில் கலந்துகொண்ட இலங்கை வெளிநாட்டமைச்சர் ஒரு முஸ்லிமாக இருந்தும் அவரது உரையில் பலஸ்தீன மக்களின் பிரச்சினையைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது இலங்கை அரசின் நாடகத்தை வெளிப்படுத்தவில்லையா?
எனவேதான் முஸ்லிம்கள் தேசியமட்டத்தில் காசாவில் இஸ்ரவேல் திட்டமிட்டு நடத்தும் இனச்சுத்திகரிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென இக்கட்டுரை வலியுறுத்துகிறது.- Vidivelli