உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச சகோதரர்களும் அவர்களின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளும்தான் காரணம் என உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. அதேபோன்றுதான் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டமைக்காக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராஸிக் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பும் மிக முக்கியமானதாகும். ரம்ஸி ராஸிக்கை கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறுப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ள நீதிமன்றம் அவருக்கு நஷ்டயீடு வழங்குமாறு பொலிசாருக்கும் அரசாங்கத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. இவ்விரு தீர்ப்புகளும் நாட்டில் சமகால சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக நோக்கப்படுகின்றன.
உண்மையில் கடந்த பல வருடங்களாக ஆட்சியிலிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் நாடு பல்வேறு வழிகளிலும் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமாக இருந்தனர் என்பது வெளிப்படையானதாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் தேவைக்கதிகமாக வெளிநாடுகளிடம் கடன் பெற்று அதில் கணிசமான தொகையில் ஊழல் மோசடிகளைச் செய்து நாட்டை வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியவர்கள் இவர்களே என்பது உலகறிந்த உண்மை. இந்நிலையில்தான் பொறுமையிழந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடி இவர்களை வீட்டுக்கு அனுப்பினர். எனினும் இவர்கள் தமது பதவிகளை மாத்திரம் இழந்தார்களே தவிர நாட்டை இந்தளவு தூரம் சீரழித்தமைக்கு பொறுப்புச் சொல்லும் எந்தவிதமான கடப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில்தான் சிவில் செயற்பாட்டாளர்களும் சில நிறுவனங்களும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இத்தீர்ப்பில் பெயர்குறிப்பிட்ட ராஜபக்சாக்களுக்கோ அல்லது அவர்களோடு இணைந்து தவறான கொள்கைகளை இயற்றிய உயரதிகாரிகளுக்கோ எந்தவித தண்டனைகளும் விதிக்கப்படவில்லை. அதேபோன்று நஷ்டயீடுகளைச் செலுத்துமாறும் பணிக்கவில்லை. மாறாக மனுதாரர்களுக்கு வழக்குத் தொடர்ந்ததால் ஏற்பட்ட செலவாக ஒன்றரை இலட்சம் ரூபாவை வழக்கு கட்டணமாக செலுத்துமாறே உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற போதிலும் எதிர்பார்க்கப்பட்ட தண்டனைகளை அல்லது உத்தரவுகளை உயர்நீதிமன்றம் வழங்காமை ஏமாற்றமளிப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த வகையில் இத் தீர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி இதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைககளை எடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆராய வேண்டியது அவசியம் என வலியுறுத்த விரும்புகிறோம்.
அதேபோன்றுதான் ரம்ஸி ராஸிக் விவகாரத்தில் ஐசிசிபிஆர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சாட்டையடி வழங்கியுள்ளது என்றே கூற வேண்டும். கடந்த காலங்களில் சிங்கள சிறுகதை எழுத்தாளர் ஷக்திக சத்குமார மஹியங்கனையில் தர்மச்சக்கர ஆடை அணிந்ததாக பொய்க் குற்றச்சாட்டின் கீழ கைது செய்யப்பட்ட மஸாஹினா எனும் முஸ்லிம் பெண் உட்பட பலருக்கு எதிராக இந்த சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இச் சட்டம் பற்றிய சரியான புரிதலின்றி கடந்த பல வருடங்களாக பொலிசார் செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரம்ஸி ராசிக்கை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை தமது சொந்தப் பணத்திலிருந்து நஷ்டயீடு செலுத்துமாறும் அதற்கு மேலதிகமாக அரசாங்கம் 1 மில்லியன் ரூபா நஷ்டயீடு செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இத் தீர்ப்பின் பிரதியை பொலிஸ் மா அதிபர் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது. அந்த வகையில் இத் தீர்ப்பானது எதிர்காலத்தில் இச்சட்டத்தை பொலிசார் துஷ்பிரயோகம் செய்யாதிருக்க பெரிதும் துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை. இது விடயத்தில் தனது அடிப்படை உரிமைக்காக போராடிய சகோதரர் ரம்ஸி ராஸிக் மற்றும் அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிய அனைவரும் பாராட்டுக்குரியர்கள். மேற்படி இரு தீர்ப்புகளும் நாட்டின் நீதித்துறை மீதான நமது நம்பிக்கையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதற்கு நல்ல உதாரணமாகும்.
- Vidivelli