தர்ஹா நகர் றம்ஸியா ஹம்ஸா
இன்று நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை மூளைசாலிகளின் வெளியேற்றமாகும். பாரிய பொருளாதார பிரச்சினையைப் போன்றே மற்றுமொரு பாரிய பிரச்சினை தான் மூளைசாலிகளின் வெளியேற்றம் ஆகும். கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு சென்று தொழில் புரிவதற்காக சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறையை வழங்க அரசு தீர்மானித்தது. இதன் பின்னரே சகல அரச துறைகளிலும் உள்ள உத்தியோகத்தர்களினதும் வெளிநாடு செல்லும் வீதம் அதிகரித்தது எனலாம்.
மற்றும் இவ்வாறு வெளியேறிக் கொண்டிருப்பவர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், விமானிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர்கள் விரிவுரையாளர்கள், கணக்கியலாளர்கள், தொழில் நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள்என இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறு நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் வெளியேற்றத்தினால் வரும் இடைவெளிகளை நிரப்புவது என்பது முடியுமான காரியமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதனால் நாடு கடும் நெருக்கடிகளை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட அரசாங்கம் எந்த மாற்று நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அண்மையில் ஏற்பட்ட கொவிட் தொற்று, ஆட்சியாளர்களினால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள், நாடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இத்துடன் நேரடியாக அவர்களின் ஊதியத்தில் விதிக்கப்பட்ட தனியாள் வரி, அவர்களுக்கான விஷேட கொடுப்பனவுகள் இல்லாமலாக்கப்பட்டமை, அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருந்த வசதி வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டமை போன்றனவும் அவர்களின் வெளியேற்றத்திற்கான காரணங்களாகக் கூறலாம். மூளைசாலிகளின் வெளியேற்றத்தின் தாக்கத்தை அரச தனியார் என்று வேறு பிரிக்க முடியாது. எந்தவொரு நாடும் இழந்த பொருளாதாரத்திலிருந்து மீண்டும் மீள நிதி மாத்திரமன்றி மனித மூலதனமும் அத்தியாவசியமாகும். இதே வேளை பல்வேறு தொழில் வல்லுனர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையால் ஏற்றுமதித் துறை பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாக தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை சுட்டிக்காட்டுகின்றது.
இன்றைய இளைஞர் யுவதிகளும் கூட தத்தமது உயர்கல்வியை தாய் நாட்டில் தொடர்வதை விட்டு விட்டு வெளிநாடுகளை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மனிதவள பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாது. அது மட்டுமன்றி நாட்டின் எதிர்காலமே இளையோர்களின் கையில் தங்கியிருக்கும் போது அந்த இளம் சந்ததிகளே நாட்டை விட்டு வெளியேறும் போது நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே!
இனி சுகாதாரத் துைறயிலுள்ள நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் வெளியேற்றத்தினால் நாடு சொல்லொணாத் துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் இதய நோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சிறுவர்களுக்கான சத்திரசிகிச்சைப் பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு, புற்று நோய் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் நோயாளர்கள் பாரிய சிக்கலை எதிர் நோக்குவதாக வைத்திய சங்கங்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துைறயில் நிபுணத்தும் வாய்ந்தவர்கள் மட்டுமன்றி வைத்தியர்கள், தாதியர்கள் என அனைத்துத் துறையினருமே வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் பிரதிபலன் என்ன என்பதை இன்று நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதால் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் போல் தகுதியுள்ள விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதனாலும் நாட்டின் கல்வித் துறையும் பாரிய எதிர்மறையான தாக்கத்தை எதிர்நோக்கிக் கொண்டுதான் உள்ளது.
இன்று விரிவுரையாளர்களின் வெளியேற்றத்தினால் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களும் சமமான பாதிப்புக்களையே எதிர் நோக்குகின்றன.
கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் சிறந்த எதிர்கால சந்ததியினரை எதிர்பார்க்க முடியாது. உயர்கல்வித்துறை மட்டுமன்றி பாடசாலை ஆசிரியர்களிலும் கணிசமானோர் வெளியேறி விட்டனர். கடந்த காலங்களில் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கு பற்றாக்குறை ஏற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களில் வினாத்தாள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவோரினது எண்ணிக்கையிலும் பற்றாக்குறை ஏற்படலாம். பரீட்சை விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட தாமதமே இன்று பாரீட்சை பெறுபேறுகளின் வெளியீட்டில் தாமதம். இன்னும் ஜி.சீ.ஈ.சாதாரணதர பரீட்சை (2022) பெறுபேறு வெளியிடப்படவில்லை. இதனால் உயர்கல்வி கற்பதில் தாமதம். சில மாணவர்கள் வெளிநாட்டுப் புலமைப் பரிசில்களுக்குக் கூட விண்ணப்பிக்கத் தகுதி அற்றவர்களாகிறார்கள். காரணம் பெறுபேறு வெளியீட்டின் தாமதத்தினால் ஏற்படும் வயது வித்தியாசமே. இதனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாதவர்களாக மனம் நொந்து போய் இருக்கிறார்கள்.
இரண்டாம் மூன்றாம் கல்விநிலை மட்டுமன்றி ஆரம்பநிலைக் கல்வியும் கூட இன்று கேள்விக்குறியாகிவிட்டது.
எந்தவொரு நாட்டிலும் நற்பிரஜைகளை உருவாக்குவது ஆரம்பக் கல்விக்கூடமான பாடசாலைக் கல்வியே. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது. பாடசாலைக் கல்வி சீர்கெட்டுப் போனால் ஒழுக்கமும் சீர்கெட்டுப் போகும். சிறுவர்கள் சீர்கெட்டால் எதிர்கால சமுதாயம் சீர்கெட்டுப் போகும். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்களாவர். நாடு வளம் பெற வேண்டுமானால் அறிவாற்றல் மிக்க மனித வளம் இன்றியமையாததாகும்.
ஒரு பக்கம் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றைய பக்கம் வல்லரசு நாடுகள் இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன. மூளைசாலிகளின் வெளியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைப்பதற்கான திட்டங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.- Vidivelli