ஏ.ஆர்.எ.பரீல்
‘‘பலஸ்தீனில் மனித படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பலஸ்தீனில் அமைதியும், சமாதானமும் நிலைநாட்டப்படல் வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் கொழும்பில் அமைதி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘வீ.ஆர்.வன்’ அமைப்பின் ஏற்பாட்டில் யுத்தம் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் இந்த அமைதி மாநாடு கொழும்பில் செவ்வாய்க் கிழமை மாலை ஹைட்பார்க் மைதானத்தில் இடம் பெற்றது.
இம்மாநாட்டில் பெருந்திரளான மக்கள் இன மத பேதமின்றி கலந்து கொண்டிருந்தனர். கணிசமாக அளவு பெண்களும் பங்கு கொண்டனர். சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்தியதுடன் அவர்கள் பலஸ்தீனில் இடம்பெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்தனர்.
கட்சி பேதங்களின்றி அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்தினர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்கிரமரத்ன, சம்பிக்க ரணவக்க, நளீன் பண்டார மற்றும் ஏ.எச்.எம். பௌஸி, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பலஸ்தீன நற்புறவு சங்கத்தின் தலைவருமான பிமல் ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் ஆளுனர் அஸாத் சாலி உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லாஹ் செய்ட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அடை மழைக்கு மத்தியில் பெருந்திரளான மக்கள் மாநாட்டின் இறுதிவரை கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
மாநாட்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய படைகளால் காஸாவில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மௌன அஞ்சலியும் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிரிசேன
மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையும் உயிரிழப்புகளையும் நினைவுகூர்ந்தார். தான் யுத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவார்கள். இது பெரும் வேதனையளிக்கிறது. இந்த யுத்தம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்கிறது. யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பலஸ்தீனத்தில் அமைதியும் சமாதானமும் நிலைநாட்டப்படல் வேண்டும். இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது மாத்திரம் மனித உரிமைகளைத் திணிக்காமல் அதனை உலகின் பலம்பொருந்திய நாடுகள் மீதும் பிரயோகிக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ
இஸ்ரேல் ஐ.நா.சபை உத்தரவிட்ட யுத்த நிறுத்தத்தை மறுத்துள்ளமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பலஸ்தீனத்தில் மனிதாபிமானத்திற்கு இடமளிக்கப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு யுத்தமாக அமையக் கூடாது. கலந்துரையாடல் மூலமே தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனதுரையில் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், முழு காஸாவையும் நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் இலக்கினை நாம் எதிர்க்கிறோம். ஒரு குழுவுக்காக முழு பலஸ்தீனத்தின் அப்பாவி மக்களையும் அழிப்பது அரச பயங்கரவாதமாகும்.
சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்களை அழித்து அதனையே இலக்காகக் கொண்டுள்ள இஸ்ரேல், மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீம்
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மனித படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. ஏகாபத்தியவாதிகள் இந்த பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டு வரும் மக்களை பயங்கரவாதத்தினுள் தள்ளுவதே இவர்களின் இலக்கு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் இதுவே யதார்த்தம். சியோனிஸ சக்திகள் என்றோ முறியடிக்கப்படும். ஏகாபத்திய சக்திகள் ஒருநாள் இதற்கு பதிலளித்தாக வேண்டும். அவர்கள் சரவதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள். பலஸ்தீனத்துக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன்
பலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பெண்கள், சிறுவர்கள் என்று பாராது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இது தொடர்கிறது. உலக நாடுகள் கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் இதற்கு தீர்வு கிட்டவில்லை.
இலங்கையில் நாம் இன மத பேதமின்றி பலஸ்தீனர்களுக்காக ஒன்றுபட்டுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த அடாவடித்தனம் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா.சபை இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்
விஜித ஹேரத்
இஸ்ரேல்- பலஸ்தீனத்துக்கு இடையிலான யுத்தத்தை நிறுத்துவதில் ஐ.நா.சபை தோல்வியடைந்திருக்கிறது. இந்த யுத்தம் நீடிக்கும் நிலையில் ஐ.நா.சபைக்குப் பதிலாக மாற்றுக்கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர்
ஹம்தல்லாஹ் செய்ட்
பலஸ்தீன மக்களுக்காக இலங்கை மக்களும் அரசியல்வாதிகளும் எவ்வித பேதமுமின்றி ஒன்றுபட்டு ஆதரவு வழங்கி வருவது எமக்கு பலம் சேர்த்துள்ளது. எமக்கு எதிரான தடைகளை தகர்த்து நாம் எமது சுதந்திரத்தைப் பெற்றே தீர்வோம் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லாஹ் செய்ட் தெரிவித்தார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கூடாரத்துக்குள் காத்திருந்து நிகழ்வின் இறுதிவரை பங்கேற்றனர். பலஸ்தீனின் விடுதலைக்கான கொடிகளை பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஏந்தியிருந்தனர்.
பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் போர் நிறுத்தம் என்பவற்றை வலியுறுத்தி பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்பிரகடனம் கொழும்பில் உள்ள ஐ.நா.சபை காரியாலயத்தில் கையளிக்கப்பட்டது. சமாதானத்தை வலியுறுத்தி மாநாட்டில் வெண் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.- Vidivelli