2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமை ஒருவாறு கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுப்புகழ்மிக்க தீர்ப்பைத் தொடர்ந்தே, ஜனாதிபதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் தீர்மானத்துக்கு வந்தார். இந் நிலையில் நேற்றைய தினம் 28 பேர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 45 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகவும் 30 பேர் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்த தேசிய அரசாங்கம் என்பதாலேயே அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் தற்போது ஐக்கிய தேசிய முன்னணி தனித்து அரசாங்கம் அமைத்துள்ளதால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்ட போதிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல. அந்த வகையில் பிரதமரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து, மீண்டும் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான பனிப் போர் தொடரவே செய்கிறது. அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி தனது விருப்பங்களையே முன்னிலைப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களுக்கும் தனது கட்சியிலிருந்து சென்றவர்களுக்கும் அமைச்சப் பதவி வழங்கமாட்டேன் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.
அதுமாத்திரமன்றி, பிரதமராக ரணில் பதவியேற்ற பின்னர், ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி.க்கள் மத்தியில் ஜனாதிபதி ஆற்றிய உரையும் காரசாரமானதாகும். அவர் எந்தளவு தூரம் பிரதமருடனும் ஏனைய ஐ.தே.முன்னணி உறுப்பினர்களுடனும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளார் என்பதை அந்த உரை வெளிப்படுத்தியது.
இந் நிலையில்தான் அடுத்த ஒன்றரை வருட காலத்திற்கு பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியாதுள்ள நிலையில், அதுவரை இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இழுபறி நிலையிலேயே தொடரும் அபாயம் தெரிகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் தனது செயற்பாடுகளுக்கு பிரதமர் ரணில் தடையாக இருந்ததாக ஜனாதிபதி குற்றம்சாட்டியதுபோல, இனி வரும் காலங்களில் தனது செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி தடையாக உள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டும் நிலை வரும். அதற்கான சாத்தியங்கள் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளன.
அரசியல் நெருக்கடி நீடித்த 51 நாட்களில் நாட்டின் அரச இயந்திரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. பொருளாதாரமும் சுற்றுலாத் துறையும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. நாட்டின் நற்பெயருக்கும் சர்வதேசத்தில் களங்கம் ஏற்பட்டது. அந்த வகையில் இவற்றைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் நாட்டின் முன்னேற்றத்தை மையப்படுத்தியதாக தூர நோக்குடன் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இவற்றைச் செய்ய வேண்டுமாயின் இவ்விரு தரப்புகளுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வு அவசியமாகும்.
மறுபுறம், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும். பாராளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிக்கும் கலாசாரத்தை அவர்கள் கைக்கொண்டுள்ளனர். இது பாராளுமன்றம் மீதான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. எனவேதான் மஹிந்த அணியினர் நாட்டின் அரசாங்க இயந்திரத்தை சுமுகமாக நடாத்திச் செல்வதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இறுதியாக, தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முழுமையாக தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டன. இது வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும். ஜனநாயகத்தை மீறிய தரப்பினரிடம் பணத்துக்காக, பதவிக்காக சோரம்போகாது நாட்டைப் பாதுகாக்க சிறுபான்மையினர் வழங்கிய உதவிக்கு பிரதமர் நன்றிக் கடன்பட்டுள்ளார். அந்த வகையில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வும் குறிப்பாக இனிவரும் காலங்களில் இன, மத ரீதியிலான அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும் முன்வர வேண்டும்.
-Vidivelli