முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் : எம்.பி.களின் சிபாரிசுகளை உள்வாங்க தீர்மானித்தமைக்கு ஐ.நா. குழு விசனம்
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைவில் 17 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நாவின் மூன்று விசேட நிபுணர்கள் உட்பட மற்றும் நிபுணர்கள் குழுவொன்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சட்டம் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிபுணர்கள் குழு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை 2021ஆம் ஆண்டு நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு முன்வைத்துள்ள சிபாரிசுகளுக்கு அமையவே அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ள சிபாரிசுகளில் முஸ்லிம் பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு ஆண் பாதுகாவலரின் அனுமதி அவசியம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் பெண்களின் முழுமையான உரிமையினை மறுப்பதாகும்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்த ஏற்பாடுகள் தற்போது தாமதத்துக்குள்ளாகியுள்ளது. நீதியமைச்சர் சட்டத் திருத்த மூலத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ள சிபாரிசுகளின் அடிப்படையிலே வரைபு செய்வதை கவனத்தில் கொண்டுள்ளார். ஐ.நாவின் விசேட நிபுணர்கள் குழு இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
17 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள சிபாரிசுகளை உள்ளடக்கி சட்டத் திருத்த வரைபு தயாரிக்கப்பட்டால் அது சர்வதேச தரத்துக்கு மாறானதுடன் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு எதிரானதாகும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சட்ட வரைபு பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு எதிரானதுடன் அது இலங்கை அரசு சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இந்த சிபாரிசுகள் முஸ்லிம் பெண்கள் சர்வதேச ரீதியிலும் மற்றும் யாப்பின் அடிப்படையிலும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சம உரிமைகளை, அதாவது ஏனைய இலங்கைப் பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதாக அமைந்துள்ளது.
இலங்கையில் அனைத்து முஸ்லிம் அல்லாத பிரஜைகளின் திருமண வயதெல்லையான 18 வயதினை முஸ்லிம் பெண்களுக்கும் ஏற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 வயதுக்குக் குறைவான முஸ்லிம் பெண்களின் திருமணத்தையும் அனுமதிக்குமாறு சிபாரிசு செய்துள்ளார்கள்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் பதவி வகிக்கக் கூடாது என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் ஆண்களே முஸ்லிம் விவாக பதிவாளர்களாகவும் காதி நீதிவான்களாகவும் பதவி வகிக்கும் நிலை ஏற்படுகிறது. காதி நீதிமன்ற முறைமை எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படக் கூடாது. அம்முறைமை பேணப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.
திருமண பதிவின் போது திருமண அத்தாட்சிப் பத்திரத்தில் ‘வொலி’யாக கையொப்பமிட வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கையொப்பம் மணமகளின் விருப்பத்துக்கமைய பெற்றுக் கொள்ளலாம். அல்லது மணப் பெண்ணே கையொப்பமிட்டுக் கொள்ளலாம் என்பது சட்டத் திருத்த ஆலோசனைக் குழுவின் சிபாரிசாகும். புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையைப் பெற்று இச்சிபாரிசு முன் வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு விவாகரத்தின் போது கைக்கூலி மற்றும் ஏனைய திருமணத்தின் போது வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் திருப்பி மனைவிக்கு வழங்கப்பட வேண்டுமென்பதும் சிபாரிசாகும்.
விவாகரத்தின் போது பிள்ளைகளுக்கான தாபரிப்பு மற்றும் ஜீவனாம்சம் மற்றும் நஷ்டஈடு என்பன தொடர்பிலும் ஆலோசனைக் குழு சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. மேலும் முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாகவும் விவாகப் பதிவாளர்களாகவும் சமாதானத்தை ஏற்படுத்துபவர்களாகவும் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஆலோசனைக் குழு தெரிவித்திருந்தது.
சர்வதேச மனித உரிமைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் முஸ்லிம் விவாக, விவாகரத்தின் சட்டத் திருத்தங்களுக்கான சட்டமூல வரைபினை 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளுக்கமைய தயாரிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். இலங்கை சர்வதேச மனித உரிமைகளை மீறா வண்ணம் செயற்பட வேண்டுமெனவும் கோருகிறோம் எனவும் நிபுணத்துவ குழுவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli