உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சிரேஷ்ட குறியீட்டு அதிகாரி எம்.ஜே.எம். நௌசாத் கடந்த வாரம் தனது 46 ஆவது வயதில் காலமானார்.
கெக்கிராவையைப் பிறப்பிடமாகக் கொண்டு, அக்குறணையில் வசித்து வந்த இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரது தொலைபேசி இலக்கம், இவரது கையடக்கத் தொலைபேசியில் இருந்ததாக கூறியே அவர் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவின் அனுமதியுடன் கைது செய்யப்பட்டிருந்த அவர், பாராளுமன்றத்துக்கு படைகள் சகிதம் பாரிய குற்றவாளி போன்று அழைத்து வரப்பட்டதுடன் அதனை ஊடகங்களும் ஒளிபரப்பியிருந்தன. இவர் பயன்படுத்திய கணினி உபகரணங்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
தொடர்ச்சியான தடுத்து வைப்பு மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக இவர் கடுமையாக உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாததன் காரணமாக, சில வாரங்களுக்கு முன்னரே நீதிமன்றினால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இலவசமாக வழக்குகளில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிரபராதியென நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அவர் இவ்வாறு மரணித்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா கடந்த வியாழக்கிழமை அக்குறணை 9 ஆம் கட்டை பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில் பாராளுமன்ற ஊழியர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.- Vidivelli