அல் அக்ஸா, பலஸ்தீன் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பொறுப்பு
மக்களை அறிவூட்டுதல் காலத்தின் அவசியத் தேவை
மின்ஸார் இப்றாஹீம்
இஸ்லாத்தில் முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களாவர். அவர்கள் மொழி, பிரதேச, நிற வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், கல்வி அறிவிலும் சொத்து செல்வங்களிலும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தாலும் எங்கு வாழ்ந்த போதிலும் இறை விசுவாசிகளான முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், முஸ்லிம்களை ஒரு உடம்புக்கு உவமைப்படுத்திக் குறிப்பிட்டார்கள். உடம்பில் ஒரு பகுதியில் வலி, காயம் ஏற்பட்டால் அதன் தாக்கத்தையும், பாதிப்பையும் முழு உடலும் உணரும், வெளிப்படுத்தும் என்றார்கள். அதேபோன்று முஸ்லிம் சகோதரத்துவத்தை ஒரு கட்டடத்தின் தூண்களுக்கும் அன்னார் ஒப்பிட்டுள்ளார்கள். அக்கட்டிடத்தில் ஏதாவதொரு தூணில் அசைவு அல்லது தாக்கம் ஏற்பட்டால் முழுக்கட்டடமும் அதன் தாக்கத்தை உணரும் என்றார்கள்.
உண்மையில் முஸ்லிம்களின் ஒற்றுமையும் சகோதரத்துவமும் இவ்வாறு தான் இருக்க வேண்டும். அது தான் இஸ்லாத்தின் வழிகாட்டல். நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் அவ்வாறு தான் இருந்தார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்நிலைமையில் கடுமையான பலவீனத்தையும் கவனக் குறைவையும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக பலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. அதன் விளைவாக கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் 3500க்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளாவர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடூரத் தாக்குதல்களினால் காஸாவில் இரத்தம் ஆறாக ஒடுகிறது. காஸாவே சாம்பல் மேடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள பள்ளிவாசல்கள், பொதுக்கட்டடங்கள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் என அனைத்துமே தாக்கி அழிக்கப்படுகிறன. தரைமட்டமாக்கப்படுகின்றன.
இந்த மனிதாபிமானமற்ற யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் 120 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யுத்தத்திற்கு எதிராக உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இருந்தும் அவை எதனையும் பொருட்படுத்தாத இஸ்ரேல் மனிதாபிமானமற்ற யுத்தத்தை தொடரவே செய்கிறது.
இவ்வாறு மிக மோசமான யுத்தத்திற்கு பலஸ்தீன், காஸா மக்கள் முகம் கொடுத்துள்ள போதிலும் அது தொடர்பில் எவ்வித கவலையற்றவர்களாகவே இந்நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு பலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினை என்றால் என்ன? பைத்துல் முகத்திஸின் முக்கியத்துவம் என்ன? பலஸ்தீனின் பெறுமதி யாது? என்பன தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லாதவர்களாகவே உள்ளனர். இது பெரும் வேதனைக்கும் கவலைக்கும் உரிய நிலைமையாகும்.
அதனால் பலஸ்தீன், அல் அக்ஸா, காஸா என்பன குறித்த உண்மையான அறிவை இந்நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த ஊடகமாக மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தலாம். அதற்கான வழிகாட்டல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கையைப் பொறுத்த வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு உள்ளது.
பலஸ்தீனமும் அல் அக்ஸா அமைந்திருக்கும் பூமியும் அல்லாஹ்வினால் ஆசீர்வதிக்கப்பட்டதாகும். அங்கு பல இறைத்தூதர்கள் வாழ்ந்துள்ளார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அல்லாஹ்தஆலா நம் உயிரிலும் மேலான நபி (ஸல்) அவர்களை மக்காவில் இருந்து இஸ்ரா பயணம் மூலம் பலஸ்தீன் ஜெரூஸலத்திலுள்ள அல் அக்ஸாவுக்கு அழைத்து சென்றான். அங்கு இறைத்தூதர்களுக்கு இமாமத் செய்த நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து தான் அல்லாஹ்வை சந்திப்பதற்கான விண்ணுலக யாத்திரையை மேற்கொண்டார்கள். அத்தோடு அல்லாஹ் மக்களுக்காக வழங்கிய ஐவேளைத் தொழுகையை பெற்றுக்கொண்டு அன்னார் அல் அக்ஸாவுக்கு தான் வந்தார்கள். அதன் பின்பே மக்கா சென்றார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் நபி (ஸல்) அவர்களை மக்காவில் இருந்தே நேரே தம்மிடம் அழைத்திருக்கலாம். அதனை அவன் செய்யவில்லை. மக்காவில் இருந்து பைத்துல் முகத்திஸுக்கு அழைத்து வந்து அங்கிருந்து தான் தன்னிடம் அழைத்தான். அத்தோடு 16,17 மாதங்கள் அல் அக்ஸாவை தொழுகைக்கான கிப்லாவாகவும் அவன் அங்கீகரித்திருந்தான். இதன் ஊடாக முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகவும் அல் அக்ஸா திகழுகிறது.
இவ்வாறு பலஸ்தீனும் அல் அக்ஸாவும் முஸ்லிம்களுடன் பின்னி பிணைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு மகத்துவம் பெற்ற பலஸ்தீனும் அல் அக்ஸாவும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1900 களில் முன்னெடுக்கப்பட்ட சதி சூழச்சிகளின் ஊடாக சியோனிஸ யூதர்களின் பிடிக்குள் சிக்குண்டுள்ளது. அதனை மீட்டெடுப்பதற்கான போராட்டம் கடந்த 7, 8 தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றது. அதன் விளைவாகவே இவ்வாறான சொல்லண்ணா துன்பங்களுக்கு பலஸ்தீன மக்கள் முகம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வினால் ஆசீர்வதிக்கப்பட்ட அல் அக்ஸாவும் பலஸ்தீனும் அந்த மக்களுக்கு மாத்திரம் உரித்துடையது அல்ல.
அதனால் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள காட்டுமிராண்டித்தன யுத்தம் முடிவுக்கு வரவும் அல் அக்ஸா மீட்சி பெற்றிடவும் பலஸ்தீன மக்களுக்கு அமைதி, நிம்மதி கிடைக்கப்பெற்றிடவும் இறைவனிடம் பிரார்த்திப்பது இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் கடமையேயாகும். மனித நேயத்தின் அடிப்படையிலும் சகோதரர்கள் என்ற அடிப்படையிலும் அல் அக்ஸா எமது மூன்றாவது புனித தலம் என்ற அடிப்படையில் அதன் விடுதலைக்காகவும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டல்களை வழங்குவது உலமா சபையின் பொறுப்பு என உறுதிபடக்கூறலாம். – Vidivelli