இஸட்.ஏ. ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,
புத்தளம் வலயக் கல்வி அலுவலகம்
இலங்கையின் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, பதினையாயிரம் குடு ம்பங்களை உள்ளடக்கிய, சுமார் 75,000 முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் காலப்பகுதியில் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் புத்தளம் மண்ணில் தஞ்சம் புகுந்தனர். முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த நிகழ்வும் அதனுடன் தொடர்புபட்ட பல சம்பவங்களும் இன்றும் நீங்கா நினைவுகளாயுள்ளன. அவர்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட மாதம் “கறுப்பு ஒக்டோபர்” எனவும் இறுதி வாரம், “தேசிய துக்க வாரம்”, “அகதிகள் வாரம்” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் அதிபராக திருமதி பவ்சியா மஜீத் சேவையாற்றியபோது, அவர் வெளியூர் மாணவிகளுக்கென விடுதி ஒன்றை அங்கு ஆரம்பித்தார். அவர்களுக்கு பொருளியல் கற்பிக்குமாறு என்னை வேண்டிக்கொண்டார். அங்கிருந்த மாடிக்கட்டிடமொன்றின் மேல் மாடியில், ஒரு நாள் மாலைவேளை கற்பித்துக்கொண்டிருக்கும்போது அனுராதபுர வீதி வழியாக லொறிகளில் வடக்கு முஸ்லிம்கள் புத்தளம் நோக்கி வந்துகொண்டிருந்தது இன்றும் நினைவிலுள்ளது. அக்காலப்பகுதியில் கல்பிட்டி, அல் அக்ஸா மகா வித்தியாலயத்திலும் வார இறுதியில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தினேன். கல்பிட்டி சென்றபோது, அப்போதுதான் மன்னாரில் இருந்து வள்ளங்களில் வந்திறங்கிய மக்கள் வீதி ஓரங்களில் குழுமி நின்றனர். நான் கற்ற அல் அக்ஸா பாடசாலை மக்களால் நிரம்பி வழிந்தது.
அணிந்திருக்கும் ஆடைகள் தவிர வேறுஏதுமின்றி, தமது பிள்ளைகுட்டிகளுடன், வரையறுக்கப்பட்ட பிரதேசமொன்றுக்குள், ஒரு குறுகிய காலப்பகுதிக்குள், பல்லாயிரக்கணக்கானோர் வந்திறங்கினால் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை சற்று கற்பனைசெய்து பாருங்கள். புத்தளம் மக்கள் அனுபவ வாயிலாக இதனை நன்கு உணர்ந்துவைத்துள்ளனர். ஆனால் இந்நிலைமையை சமாளிப்பதற்கு புத்தளம் அன்று தயங்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் அவர்களை இணைந்திருந்தது. ‘மனிதம்’ அவர்களிடம் மேலோங்கியிருந்தது. வந்தோரை அரவணைத்து உதவும் முயற்சியில் மறுகணமே ஒன்றிணைந்தனர்.
புத்தளத்தில் 2000 ஆண்டு காலப்பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் (NGO) இருந்தன. ஆனால் இடப்பெயர்வின் ஆரம்பத்தில் அரச உதவிகளோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தயவோ இடம்பெயர்ந்துவந்த மக்களுக்குக் கிட்டவில்லை. புத்தளம் பிரதேச மக்கள், வந்தோரை தமது சொந்த பந்தங்களாகக் கருதி அனுசரித்தனர். தமது வீடுகளிலும், பாடசாலைகளிலும், தோட்டங்களிலும், பள்ளிவாசல் வளவுகளிலும் அவர்களைத் தங்கவைத்தனர். தேவையான அனைத்தையும் பகிர்ந்துகொண்டனர். தனிநபர்கள் உட்பட பள்ளிவாசல் நிருவாகமும் சமூக சேவை அமைப்புக்களும் இதில் முன்னின்று உழைத்தன. அனுமதிக்காகக் காத்திராமல் உணர்ச்சி மேலீட்டால் பொதுக் கட்டிடங்களின் பூட்டுகளை உடைத்து அவர்களை அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்த சம்பவங்களும் இடம்பெற்றன.
இடம்பெயர்ந்து வந்தோருக்கு உதவும் முதலாவது கூட்டு முயற்சியாக, புத்தளம் நகரில் பெரிய பள்ளிவாசல் களத்தில் குதித்தது. அதற்குப் பின்னணியாக 1980 இல் தாபிக்கப்பட்ட, ‘புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம்’ (YMGA) செயற்பட்டது. YMGA யின் முயற்சியுடன் நகர பள்ளிவாசல் நிருவாகிகள், சமய இயக்கங்கள், வர்த்தகர்கள், பிரமுகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய முதலாவது ஆலோசனைக் கூட்டம் பெரியபள்ளியில் இடம்பெற்றது. அதன் பிரதிபலனாக ‘நிவாரணக் குழு’ ஒன் றும் அமைக்கப்பட்டது. வடபுலத்திலிருந்து வந்தோரைப் பராமரிக்கும் பொறுப்பை இக்குழு ஏற்று செயற்பட்டது.
உணவு, உடுதுணி உட்பட தேவையான பொருட்களை ஊருக்குள் சேகரிக்கும் பணி தொடங்கியது. அவை மத்ரஸதுல் காசிமிய்யாவிலும் எம்.எச்.எம். நவவி அவர்களின் வீட்டிலும் களஞ்சியப்படுத்தப்பட்டன. YMGA தாபக உறுப்பினர்களுடன் பெரியபள்ளி நிருவாகக் குழுவும் ஜம்இய்யதுல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், தப்லீக் அமைப்பின் பிரதிநிதியாக எஸ்.எம். பாரூக், ஜமாஅதே இஸ்லாமியின் பிரதிநிதியாக மர்ஹூம் நியாஸ் ஆகியோருடன் பொறியியலாளர் பி.ஐ.எம். ஜிப்ரி போன்றோரும் இப்பணியில் முன்னின்று செயற்பட்டனர்.
புத்தளம் பிரதேசத்துக்கு வந்தோர் ஆரம்பத்தில் நகரை அண்மித்து, வடக்கில் மன்னார் வீதியின் மருங்குகளிலும், அத்துடன் மணியகார வவுன் எனப்படும் கரம்பை, புழுதிவயல் தொடக்கம் விருதோடை, கடையாமோட்டை, கனமூலை, பெருக்குவட்டான், சமீரகம, கொத்தான்தீவு, புளிச்சாக்குளம் போன்ற அக்கரைப்பற்று பகுதியிலும் குடியமர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கல்பிட்டிக் குடாநாட்டில் செறிவாக தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர்.
வடமாகாண மக்கள், இடம்பெயர்ந்து வந்த புதிதில் தமது பூர்வீக மண்ணில் மீள் குடியேறப் பகீரதப் பிரயத்தனம் செய்தனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். இவ்விடயம் தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேசமயப்படுத்தப்படவும் வேண்டுமென பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1991 இல் கொழும்பு, வெள்ளவத்தை, ரோஹினி வீதியில் அமைந்துள்ள ‘இஸ்லாமிய கற்கை நிலையத்தில்’ (CIS) பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் இவ்விடயம் தொடர்பாக நிகழ்த்திய உரை, பின்னர் ‘We Want to go home’ என்ற தலைப்பில் ஒரு கையேடாக வெளியிடப்பட்டது.
1992 ஆம் ஆண்டின் இறுதியில் உருவாகிய வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO), ‘மீள்குடியற்றத்தை’ இலக்காகக்கொண்டு “எம்முடைய தாயகமும் வடக்கே” என்ற தொனிப்பொருளில் செயற்படத் தொடங்கியது. பேராசிரியர் எஸ். எச். ஹஸ்புல்லாஹ், மெளலவி பீ. ஏ. எஸ். சுபியான், பொறியியலாளர் ஏ. எல். புர்ஹானுத்தீன், கலாநிதி எம். எஸ். அனீஸ், எம். எம். அமீன், எஸ். எச். எம். றிஸ்னி போன்றோர் இவ்வமைப்பின் முன்னோடிகளாவர். 15.11. 1993 இல் றகீப் வரைந்த அட்டைப்படத்துடன் NMRO வின் ‘அகதி’ சஞ்சிகையின் முதல் இதழ் வெளிவந்தது. இடப்பெயர்வு தொடர்பான பல விடயங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டதுடன் ‘எண்ணக் குமுறல்களும்’ பதிவிடப்பட்டன.
தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த யுத்தம் இடம்பெயர்ந்திருந்த மக்களின் மீள் குடியேற்றக் கனவை எட்டாக் கனியாக்கியது. அதேவேளை, 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 80 ‘மீள் குடியேற்றக் கிராமங்கள்’ புத்தளம் பிரதேசத்தில் உருவாகின. 2006 இல் 141 நலன்புரி நிலையங்கள் இங்கு இருந்தன. குறித்த சொற்ப காலப்பகுதிக்குள் குடியேறிய பெருமளவு மக்களுடன், அப்பிரதேசத்துக்குரிய வரையறுக்கப்பட்ட வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் முரண்பாடுகளும் தோன்றின. இது இயல்பான ஒன்றே. இவ்வாறான விடயங்கள் இன்றும் சர்வதேச ரீதியில் நிகழ்ந்துகொண்டிருப்பதும் கண்கூடு. எனினும் புத்தளம் பிரதேசத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளே அதிகம் இருந்தன. இந்நிலையில் உபகார சமூகம் (Host Community) தமது வளங்களை இடம்பெயர்ந்தோருடன் பகிர்ந்து, இணக்கப்பாட்டுடன் வாழவேண்டிய சூழலை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யவேண்டுமென கலாநிதி ஹஸ்புல்லாஹ் தொலைபேசியில் வேண்டிக்கொண்டார். இது பற்றி என்னுடன் மேலும் கதைக்கவேண்டுமென, நேரிலும் வருகைதந்தார்.
1978 – 82 காலப்பகுதியில் நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும்போது, விரிவுரையாளர் ஹஸ்புல்லாஹ் அவர்களுக்கும் எனக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்தது. அவர் தனது முதுமாணிப் பட்டத்துக்கான (MA) சமூக, பொருளாதார ரீதியிலான ஆய்வுக்காக சில நகரங்களைத் தெரிவுசெய்திருந்தார். அதில் புத்தளமும் ஒன்று. இந்நிலையில் புத்தளம் நகரத்தைப் பார்வையிட வேண்டுமென அவர் வேண்டிக்கொண்டதற்கிணங்க 1981 காலப்பகுதியில் நாம் புத்தளம் வந்தோம். நான் அறிந்த வகையில் அதுவே அவரின் முதலாவது புத்தளம் விஜயமுமாகும். அவர் தனது முதுமாணிப் படிப்பின் நிமித்தம் கனடா சென்றபோது, அவர் தெரிவுசெய்த ஆய்வுத் தலைப்பின் ஒரு பகுதியை, இளங்கலைமாணிக்கான எனது தலைப்பாகத் தெரிவுசெய்யமாறு ஆலோசனைகூறி, பொருளியல்துறைப் பேராசிரியர் திரு மு. சின்னத்தம்பி அவர்களிடம் அதற்கான அனுமதியையும் பெற்றுத்தந்தார்.
திடீரென இரட்டிப்படைந்த சனத்தொகை காரணமாக புத்தளம் பிரதேசத்துக்குள் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி, போன்ற பிரச்சினைகளைக் கலந்துரையாட வேண்டுமெனவும், இரு சாராரும் நன்மை பெறக்கூடிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டுமெனவும், அதற்காகப் புத்தளம் உபகார சமூகத்துடன் (Host community) சிநேகபூர்வ கலந்துரையாடல் தொடரொன்றை நடத்தவேண்டுமெனவும் ஹஸ்புல்லாஹ் சேர் வேண்டிக்கொண்டதனை, புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் பெரியபள்ளிவாசல் போன்றவற்றுக்கும் பேராசிரியர் எம். எஸ். எம் அனஸ் அவர்களுக்கும் அறிவித்தேன். ஏற்கனவே பேராசிரியர்கள் அனஸ், ஹஸ்புல்லாஹ் ஆகியோர் இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடியுமிருந்தனர்.
வடமேல் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற தினமான 25.01.1994 அன்று உத்தியோகபூர்வமற்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் முறைமையாக செயற்படத்தொடங்கிய ‘புத்தளம் மக்கள் மன்றத்துடன்’ (PPF) இக்கலந்துரையாடலை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. 1999 ஒக்டோபர் 08 ஆம் திகதி, ஹஸ்புல்லாஹ் அவர்கள், எஸ். எச். எம். றிஸ்னி, ஏ. ஜீ. அனீஸ், எம். எச். மிஹ்லார் போன்றோருடன் எனது வீட்டுக்கு வந்தார். அன்று இரவு புத்தளம் மத்ரஸதுல் காஸிமிய்யாவில், அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் தலைமையில் மக்கள் மன்றப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது.
இதன் மற்றுமொரு சந்திப்பு 28. 04. 2000 அன்று இடம்பெற்றது. கலந்துரையாடல்கள், பல சுற்றுக்களாக இடம்பெற்றன. இடைக்கிடை வடபுலத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். புத்தளம் சார்பாக, மக்கள் மன்ற அங்கத்தவர்கள் உட்பட பல உள்ளூர் பிரமுகர்களும் பங்கேற்றனர். ‘யுத்தம் முடிவடைந்த பின் …’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களுடன் 29. 10. 2010 இல் காசிமிய்யாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்தோரின் வாழ்க்கையை நேரில் காண்பதெற்கென ராஜதந்திரிகளும், வெளிநாட்டு செல்வந்தர்களும், பரோபகாரிகளும் புத்தளம் பிரதேசத்துக்கு விஜயம்செய்வதுண்டு. ஆனால் சமாதான அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் போன்றோர் வருகைதரும்போது உள்ளூர் மக்களையும் சந்திக்கவேண்டும் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கவேண்டும் என்பதில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் உறுதியாக இருந்தார். அந்தவகையில் 17. 04. 2005 இல், இடம்பெயர்ந்தோரை சந்திக்க புத்தளம் வந்த நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹைமுடனான தனியான ஒரு சந்திப்பு ஒன்று, புத்தளம் பெரிய பள்ளிவாசலின் மேல் மாடியில் இடம்பெற்றது. அப்போது புத்தளம் பூர்வீக மக்கள் சார்பானதொரு அறிக்கை சொல்ஹைமுக்குக் கையளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் எஸ். எம். முபாரக் ஆற்றிய பங்கு அளப்பரியது. மேலும் National Peace Council உடனான சந்திப்பொன்றும் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வும் அவரது குழுவினரும் ஏற்பாடுசெய்த பல கருத்தரங்குகளில் புத்தளம் மக்கள் மன்றம் பங்கேற்றது. ‘சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பு (RAAF) 29. 09. 2001 இல் இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய கருத்தரங்கில், மக்கள் மன்ற பொதுச் செயலாளர் என்றவகையில் நானும் இணைச் செயலாளர் எஸ். ஆர். எம். முஹ்ஸியும் கலந்துகொண்டோம். ‘இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளின் நிலை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், ‘வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இழந்த அசையும் அசையா ஆதனங்கள்’ பற்றிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில், ‘உள்ளூர் – இடம்பெயர்ந்தோர் ஒன்றிணைந்து தமது உரிமைகளை வென்றெடுப்பதன் அவசியம்’ பற்றிய கருத்துக்களை நாம் முன்வைத்தோம். ‘புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்கான நிரந்தரத் தீர்வு’ என்ற தலைப்பில் UNHCR அமைப்பினால் Hotel Hilton இல் 17. 10. 2001 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மக்கள் மன்ற சார்பில் ஆசிரியர் எம். எம். முபாரக் ஆசிரியர் அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.
மக்கள் மன்றமும் மனிதவள அபிவிருத்தி, மனித உரிமை அமைப்பும் (OHRD) இணைந்து, உள்ளூர் – இடம்பெயர்த்தோர் நல்லுறவு தொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தின. இத்தகைய இரு கலந்துரையாடல்களுள் ஒன்று, 20. 04. 2001 அன்று மத்ரஸதுல் காஸிமிய்யாவிலும் மற்றொன்று 04. 05. 2001 இல் மக்கள் மன்றத்தின் மன்னார் வீதி காரியாலயத்திலும் இடம்பெற்றன. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணைக்குழு (UNHCR), மக்கள் மன்றம் என்பனவற்றுக்கு இடையில் உள்ளூர் – இடம்பெயர்ந்தோருக்கிடையிலான நல்லுறவு பற்றிய மற்றுமொரு சந்திப்பு 15. 06. 2001 இல் இடம்பெற்றது. இதில் UNHCR சார்பில் J ஹோல், கெமீலியா மெல்சன். எம். ஐ. எஸ். அஹ்மத், ஏ. விமல், திலக் சந்திரகாந்த் ஆகியோர் பங்குபற்றினர். இக்கலந்துரையாடல் நள்ளிரவுவரை நீடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர் கலந்துரையாடலொன்று 23. 10. 2001 இல் புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் மக்கள் மன்றப் பொருளாளர் எம். எச். ஏ. ரஷீத் பங்கேற்றார்.
இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளவும் தமது சொந்த இருப்பிடங்களில் குடியேறுவது தொடர்பாக இன விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் பெட்டி வீரக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்கள் மன்றத்தின் சார்பில் இஸட். ஏ. எம். றஸ்மி கலந்துகொண்டார். ‘தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம்களும்’ என்ற தொனிப்பொருளில் Muslim Peace Forum, மாளிகாவத்தை, இஸ்லாமிய மத்திய நிலையத்தில் 03. 02. 2001 இல் நடத்திய கருத்தரங்கில் மன்றத்தின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், இணைச் செயலாளர் எஸ். ஆர். எம். முஹ்ஸி ஆகியோர் பங்கேற்றனர்.
புத்தளம் பிரதேசத்தின் சமாதான முயற்சிகள் பற்றிய ஆய்வொன்றினை பிரித்தானிய உயர் ஸ்தானிகம் மேற்கொண்டது. இது தொடர்பான ஒரு கலந்துரையாடல் மத்ரஸதுல் காஸிமிய்யாவில் இடம்பெற்றது. கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். ஆர். டீ. முனீர் GQL திட்டத்தை சேர்ந்த பீ. கே. வித்தியானந்த ஆகியோர் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் மக்கள் மன்றப் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
புத்தளம் நகரிலும் கரம்பை, கல்பிட்டி, திகளி, சமீரகம, பள்ளிவாசல்துறை, புளிச்சாக்குளம், ஆலங்குடா போன்ற சில கிராமங்களிலும் விரும்பத்தகாத முறுகல் நிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பெரியபள்ளி, ஜம்மிய்யதுல் உலமா, மக்கள்மன்றம், அரசியல் தலைமைகள் போன்றன ஒன்றிணைந்து உடனடியாகக் கள விஜயங்களை மேற்கொண்டு அவை தொடராவண்ணம் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் பல. ஓரிரு சம்பவங்கள் முரண்பாட்டை உச்சமடையச்செய்ததையும் மறுக்கமுடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நியாயத்தின் பக்கம் நின்ற அனைத்துத் தரப்பினரும் பாராட்டுக்குரியோராவர். இவ்விரு சாராருக்குமான நல்லிணக்கம் பற்றி பல கொத்பாக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், மெளலவி எம். எச். எம். எம். முனீர் உட்பட பல உலமாக்கள் இதனைச் சிறப்புற செய்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்துக்குள் இருசாராருக்கும் இடையில் சமூக, பொருளாதார, கல்வி, தொழில்வாய்ப்பு , வீடமைப்பு, உட்கட்டமைப்பு உட்பட வளப்பகிர்வுகள் போன்றவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் உள்ளூர் இடம்பெயர்ந்தோர் உறவை வலுப்படுத்துவதிலும் புத்தளம் பெரியபள்ளிவாசல், மஜ்லிஸுஸ் சூரா, புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் மக்கள் மன்றம், புத்தளம் மாவட்ட புத்திஜீவிகள் ஒன்றியம், சமாதானத்துக்கும் கல்வி அபிவிருத்திக்குமான அமைப்பு (OPED) போன்றனவும் அரசியல் தலைமைகளும் முன்னின்றுழைத்தன. அத்துடன், சமூக அபிவிருத்திக்கான ஆய்வுச் செயலமைப்பு (RAAF) போன்றனவும் எம்முடன் இணைந்து செயற்பட்டன.
முஸ்லிம்கள் என்ற ரீதியில் இருசாராரும் ஒன்றுபட்டிருந்தாலும் ஒரு சில கலாசார, பண்பாட்டு வேறுபாடுகள்,பேச்சு வழக்கு, புரிந்துணர்வின்மை போன்றன, ஆரம்ப காலங்களில் கிராம மட்டங்களில் முரண்பாடுகள் ஏற்படக் காரணிகளாய் அமைந்தன. இப்பின்னணியிலேயே பெளதீக, மனித வளப்பகிர்வுகளின் போட்டித்தன்மையும், முறுகல் நிலைமைகளும் தோன்றின. இந்நிலையில் உள்ளூர் மக்களின் நலன்கள் பாதிக்கப்படாவண்ணம், இரு தரப்பினருக்கும் இடையிலான சகவாழ்வு சாத்தியப்பாடுகள் பற்றி விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள புத்தளம் பெரியபள்ளிவாசல் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 21.01. 2012, 13. 05. 2012, 07. 07. 2012 ஆகிய தினங்களில் இது தொடர்பான செயலமர்வுகள் இடம்பெற்றன. இதில் பிரதான வளவாளராக ‘முஸ்லிம் செயலக’ CEO, எம். மஹ்ரூப் கலந்துகொண்டார். 21.01. 2012 அன்று DC Pool இல் இடம்பெற்ற கூட்டத்துக்கு புத்தளம் பிரதேசத்திலுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் உட்படப் புத்தளம் பிரதேசப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் வெளிப்பாடாகவே 24. 08. 2016 இல் ‘வடமேல் மாகாண நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணிக்கு ‘புத்தளம் விருந்தோம்பல் சமூகத்தின் அபிலாசைகளும் முன்மொழிவுகளும்’ என்ற தலைப்பிலான ஆவணம் கையளிக்கப்பட்டது. புத்தளம் பெரியபள்ளி, புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா என்பன இணைந்து எஸ். ஆர். எம். முஸம்மில், எஸ். எம். எம். ரிபாய், எஸ். ஆர்.எம். முஹ்ஸி, எச். எம். உஸாமா அஹ்மத் ஆகியோரின் கையொப்பங்களுடன் அதனை சமர்ப்பித்தன. ‘Puttalam People’s Forum for Reconciliation and Coexistence’ (PPF 4 RC) என்ற ஓர் அமைப்பு உருவாகவும், புத்தளம் பிரதேசத்தின் வரலாறு, பாரம்பரியம், மரபுகள், மரபுரிமை, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன ஆவணப்படுத்தப்படல் வேண்டும் என்ற நோக்கில் 16. 02. 2011 இல் ‘puttalamonline.com’ இணையத்தளம் தோற்றம்பெறவும் இவ்வரலாற்றுப் பின்னணிகளே காரணமாகும்.உள்ளூர் – இடம்பெயர்ந்தோர் நல்லுறவு தொடர்பாக, பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் அவர்களுடனான பல கலந்துரையாடல்களை புத்தளம் மக்கள் மன்றம் நடத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தளத்திலும் கண்டியிலும் இவை இடம்பெற்றுள்ளன. சமூக நல்லிணக்கம், வளப்பகிர்வு, உரிமைகளை வென்றெடுத்தல் போன்ற கலந்துரையாடல்களில் ஜம்மியத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், பெரியபள்ளி நிருவாக சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் ஆகியோர் உட்பட எஸ். ஆர். எம். சலீம், எம். ஐ. ஏ. லத்தீப், இஸட். ஏ. எம் றஸ்மி , எம்.ஓ.ஜே.எம். நிஜாம்,எம். எஸ். அப்பாஸ், எம். எச். எம். பஸ்லுர் ரஹ்மான், எஸ். எம். எம். ரிபாய், ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல், ஹிஷாம் ஹுசைன் , எம். ஐ. ருஷ்தி, என். எம். நுஸ்பான், ரினாஸ் மொஹமட், ரஸ்மி ஷஹீத், எஸ். எல். எம். மின்சார், றிஸ்கான் ராசிக், எம். எம். எம். மிஹ்லார், நஸ்லியா காதர், இஸ்மாயில் ரிபானா போன்றோருடன் மற்றும் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
‘இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணலில் வடபுல முஸ்லிம்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட முடியாதவர்களோ அவ்வாறே, தற்போது இம்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் புத்தளம் மண்ணுக்குரியவர்களும், தீர்வுக்கான பேச்சுவார்தைகளில் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும். மேலும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான சந்தர்ப்பம் வரும்போது கணிசமான தொகையினர் தொடர்ந்தும் புத்தளத்தில் வாழப்போவது நிச்சயம். இந்நிலையில் அவர்களும் புத்தளம் மக்களாக அடையாளப்படுத்தப்படல் வேண்டும்’ என, புத்தளம் மக்கள் மன்றத்தால் 15. 05. 2002 இல் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களின் சனத்தொகை இன்று மூன்று இலட்சத்துக்கும் அதிகமாகும். அவர்களில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வவுனியா மாவட்டம் உட்பட வடபுலத்தில் வாழ்கின்றனர். சுமார் 40 சதவீதமானோர் தம்மை வாக்காளர்களாகப் புத்தளத்தில் பதிந்துள்ளனர். வடக்கில் பதிவை மேற்கொண்டபோதும், வசதி வாய்ப்புக்களின்மை காரணமாகத் தொடர்ந்தும் தமது வாழ்விடங்களாகப் புத்தளத்தைத் தேர்ந்தெடுத்தவர்களும் உள்ளனர். இவ்விரு பிரதேசங்களுக்கும் அடிக்கடி மாறிக்கொண்டிருப்போரும் இல்லாமலில்லை. பெளதீக, மனித வளப்பகிர்வுப் பிரச்சினை புத்தளப் பிரதேசம் தவிர்ந்த தென்னிலங்கையில் வாழ்வோருக்கிடையில் இல்லை.
இன்று இப்பிரதேசத்தில் வசிப்போர் பூர்வீக மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளனர். விருந்தோம்பல் சமூகத்துக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்குமான திருமண உறவுகளும் வலுப்பெற்று வருகின்றன. புதிய தலைமுறையினருக்கு, புத்தளம் மட்டுமே தெரியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை வறுமையின் விளிம்பில் வாழும் மக்கள் இரு தரப்பிலும் சரி சமமாக உள்ளனர். புத்தளம் பிரதேசத்துக்குள் 02.01.2007 இல் அமைக்கப்பட்ட ஐந்து பாடசாலைகளும் 17.01.2008 இல் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையும் மன்னார் கல்வி வலய நிருவாகத்துக்குள் இருந்து 01.01.2020 முதல் புத்தளம் கல்வி வலய நிருவாகத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வளப்பகிர்வு, தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ளல், வேலைவாய்ப்பு போன்ற எல்லா அம்சங்களிலும் அனைத்துத் தலைமைகளும் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் ணர்வுடன் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நாம் முஸ்லிம்கள். இஸ்லாம் எம்மை இணைத்துள்ளது. சாதிக்கவேண்டியவைகள் பல உள்ளன. வரலாற்றை அனுபவக் கற்கையாகக் கொண்டு செயலாற்றுவதன் மூலம் அவற்றை சாத்தியமாக்கலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் எமக்குத் துணைநிற்பானாக. – Vidivelli