(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் பதவி வகிக்கும் 65 காதி நீதிபதிகளும் வருடாந்தம் 15000 வழக்குகளைக் கையாள்கிறார்கள். கௌரவமான பதவி வகிக்கும் இவர்களுக்கு மாதாந்தம் சிறியதொரு தொகையே கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கொடுப்பனவினை எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும்படி காதி நீதிபதிகளின் போரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காதி நீதிபதிகளின் போரத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.எம். பௌஸ் மற்றும் உப தலைவர் இப்ஹாம் யெஹ்யா என்போர் கையொப்பமிட்டு இக்கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காதி நீதிபதிகள் ஒவ்வொரு மூன்று வருட காலத்திற்கும் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையின் பின்பு நியமிக்கப்படுகிறார்கள். இப்பதவிக்கு மாதாந்த கொடுப்பனவாக காதி நீதிபதிக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாவும், ஏனைய நீதிமன்ற பணிகளுக்காக ஆறுஆயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாவும் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் காதி நீதிபதிகள் பணிபுரிவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தக் கொடுப்பனவு இக்காலகட்டத்தில் எவ்வகையிலும் நியாயமானதல்ல. மிகவும் குறைவான கொடுப்பனவே வழங்கப்படுவதால் இப்பதவிக்கு விண்ணப்பிப்பதிலும் தகுதியானவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 64 காதி நீதிவான் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் இப்பதவிக்கு மொத்தமாக 150 விண்ணப்பதாரிகளே விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்து இப்பதவிக்கு விண்ணப்பிப்பதில் அநேகர் ஆர்வம் காட்டுவதில்லை என்பது உறுதியாகிறது.
காதி நீதிபதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை. சில பகுதிகளிலே காதி நீதிபதிகளுக்கு நீதிமன்ற வளாகங்களில் இடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான காதி நீதிமன்றங்களின் அமர்வுகள் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், பொது மண்டங்களிலே இடம்பெறுகின்றன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
எனவே, காதிநீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மிகவும் குறைந்தளவிலான கொடுப்பனவினை எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்தில் அதிகரித்துவழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli