(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனில் மக்கள் படுகொலைகளை நிறுத்துங்கள். இரு நாடுகளும் செய்வது தவறு. யுத்தத்தை உடன் நிறுத்துங்கள். அப்பாவி மனித உயிர்கள் பலியெடுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு நாட்டிலும் சாந்தியும் சமாதானமுமே நிலவ வேண்டும் என பௌத்த தகவல் மத்திய நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலு கல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பு சர்வதேச பௌத்த சம்மேளனம் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைதிப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ‘யுத்தம் வேண்டாம் அனைத்து மக்களுக்கும் பலஸ்தீனுக்கும் அமைதியைக் கொடுங்கள்’ என்ற தொனிப் பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அமைதிப் போராட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஜனாஸா நலன்புரி சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.
அங்குலு கல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இரு நாடுகளும் செய்வது தவறு. யுத்தம் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இலங்கையும் பௌத்தமும் சமாதானத்தையே வலியுறுத்துகிறது என்றார்.
உலமா சபை செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பௌத்த சங்கம் இவ்வாறான அமைதிப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்தமையையிட்டு உலமா சபை பாராட்டுகிறது. காஸாவில் மனித படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பாவி மக்களை படுகொலை செய்வது நிறுத்தப்பட வேண்டும். இலங்கையும் உலமா சபையும் நியாயத்தின் பக்கமே இருக்கும். மனித நேயத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென ஐ.நா.வில் 120 நாடுகள் வாக்களித்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளாமை அனுமதிக்கப்பட முடியாது. யுத்தத்தை நிறுத்துவதற்கு உலக தலைவர்கள் ஒன்று சேர வேண்டும்.
குழந்தைகளும் பெண்களும் வயோதிபர்களுமென காஸாவில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவது சர்வதேச சட்டத்துக்கு அப்பாற்பட்டதாகும் உலக தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றார்.- Vidivelli