ஐ.தே.க.வுடன் ஐ.ம.ச இணைந்தால் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்கலாம்
பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் வலியுறுத்தல்
(எம்.வை.எம்.சியாம்)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அதிகமான கட்சி தாவல்களை எதிர்பார்க்க முடியும். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சி இணைந்தால் ஸ்திரமான அரசாங்கமென்றை அமைக்கலாம். இதுவே பலரது எதிர்பார்ப்பாகும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
தேர்தலொன்றுக்கு முகம்கொடுக்க கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவது குறித்து பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அதிகமான கட்சி தாவல்களை எதிர்பார்க்க முடியும் என நினைக்கிறேன். நாட்டின் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அதிகமாக வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். இவ்வாறு அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கினால் யாராலும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். இந்நிலையில் இரண்டாவது விருப்பு வாக்குகளுக்கு செல்ல வேண்டி ஏற்படும். பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி தாவல்களை குறைவாகவே எதிர்பார்க்கலாம்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். நானும் அதையே விரும்புகிறேன். இருப்பினும் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதை தடுக்கும் வகையில் இரு கட்சிகளிலும் சில குழுவினர் செயற்படுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பயணித்தால் மாத்திரமே ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். அத்தோடு நீண்ட நாட்களுக்கு நாட்டில் குழப்பமில்லாத ஆட்சியை நடத்தி செல்லலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பலர் ஆதரவாக செயற்படுகிறார்கள்.ஒரு சிலர் தமது கட்சி இல்லாமல் போய் விடும் என அச்சத்தில் இருக்கின்றனர். எவ்வாறாயினும் அந்த கட்சிக்குள் குழப்ப நிலை ஒன்று காணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் நிச்சயம் அவர்களில் பலர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவர்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுமாயின் பொதுஜன பெரமுன கூட்டணியிலிருந்து தானாகவே விலகிக்கொள்ளும்.
ரணில் விக்கிரமசிங்க நன்கு அனுபவமிக்க முதிர்ச்சியான தலைவர். சகல துறைகளிலும் அவருக்கு நிபுணத்துவம் இருக்கிறது. எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இளம் துடிப்புள்ள அரசியல்வாதி. மக்களுக்கு தானாக முன்வந்து சேவை செய்யக்கூடிய ஆளுமைமிக்கவர்.
எனவே இந்த இரண்டு பேரும் ஒரு நிலைப்பாட்டின் கீழ் வருவார்கள் என்றால் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும். இவர்களுக்கு இடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து பின்னர் பொது தேர்தலில் நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டும். மேலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் நாட்டின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸ பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.- Vidivelli