அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று, நவம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32 ஆவது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.
காசா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சிமாநாட்டை நடாத்துமாறு பலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து திங்கட் கிழமையன்று தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையைப் பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார்.
கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் அவசரமாக கூடுகிறது.
கெய்ரோவில் நடைபெற்ற இவ்வுச்சி மாநாட்டின் போது இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் நிலவரம் பரபரப்பான விவாதமாக இருந்தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன. ஜேர்மனி மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளுடன் ஐ.நா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற இருப்பதன் காரணமாக ரியாத் நகரைச் சூழ பாதுகாப்பை பலப்படுத்தப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மற்றும் காசா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாட வெளியுறவு அமைச்சர்களும் கூடவுள்ளனர். – Vidivelli