ஏ.ஆர்.ஏ. பரீல்
கலாநிதி ரொஹான் குணரத்னவினால் எழுதி வெளியிடப்பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை) என்ற நூலில் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நூலின் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்து பிழைகளைத் திருத்தி ஆதாரபூர்வமான உண்மைகளுடன் மீண்டும் நூலை மீள வெளியிடுமாறும் நூலாசிரியரைக் கோரியுள்ளது. உண்மையான தகவல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தோடு தொடர்ந்தும் ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தையோ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையோ ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விடயத்தில் குற்றம் சுமத்த வேண்டாமெனவும் கோரியுள்ளது.
நூலாசிரியர் கலாநிதி ரொஹான் குணரத்னவுக்கு இது தொடர்பில் உலமா சபை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் தங்களால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட நூல் தொடர்பாக எமது அதிருப்தியையும் அதிலுள்ள போலியான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் எமது மறுப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களது நூலில் ஆதாரபூர்வமற்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஏராளமான கூற்றுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான அதிகாரபூர்வமில்லாத, போதுமான தெளிவில்லாத அனுமானத்தின் அடிப்படையிலான கூற்றுக்களை தங்களுடைய நூலுக்கு ஆதார மேற்கோள்களாகக் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கண்டனத்துக்குரியது.
அந்த வகையில் தங்களுடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான, கள சூழ்நிலைகளுக்கு முரணான, திரிபுபடுத்தப்பட்ட ஒரு சில பகுதிகளை நாம் குறிப்பிட்டுள்ளோம்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க ரீதியான ஒரு சபையே அன்றி சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அதிகாரம் கொண்ட நிறுவனமல்ல.
நூலின் 60 ஆவது பக்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மத விவகாரங்களை நாளாந்தம் மூலோபாய ரீதியாக நெறிப்படுத்தவில்லை.
விளக்கம்: சமூகத்தில் சில காலம் பகுதிகளில் இடம்பெற்ற சமூக மற்றும் மார்க்க ரீதியாக சம்பந்தப்பட்ட சில ரீதியாக சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே இக்கூற்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அது சார்ந்த சட்டவார்க்க அமுலாக்க நிறுவனங்களுக்கே உண்டு. இது ஜம் இய்யாவின் பொறுப்பு அல்ல.
நூலின் 203ஆவது பக்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிகமாக தீவிரமயமாக்கல் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டது.
அதே பக்கத்தில் அக்கூற்றுக்கு முன்னால் உள்ள கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது,
சிறிசேன நிர்வாகத்திற்கோ அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்துக்கோ குறித்த நிலைமையின் தீவிரத்தை போதுமானளவு புரிந்துகொள்வதற்குத் தேவையான அதிநவீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று இருந்ததாகத் தெரியவில்லை.
இங்கு மத வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தீவிரமயமாக்கல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அடையாளம் காணத் தவறிவிட்டீர்கள்.
மேலும் இப்புத்தகத்தில் நீங்கள் மத அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள செயற்பாடுகள், அதிகாரம், கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை வரையறுக்கத் தவறி விட்டீர்கள். இதில் பல இடங்களில் இதுபோன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள தரப்பினருடன் உலமா சபை தலையிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் இது காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
191ஆவது பக்கம், சஹ்ரானை கைது செய்ய ரிஸ்வி முப்தி காவல் துறைக்கு உதவியிருக்கலாம்.
உலமா மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் 2019 ஜனவரியில் ஹேமசிறி பர்னாண்டோவை சந்தித்து சஹ்ரானின் வெறுப்புப் பேச்சுகளுக்கான ஆதாரங்களை கையளித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தமை அனைவரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
உலமா சபை இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்குமிடையில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப மேற்கொண்ட பணிகள் உங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் கையொப்பமிட்டுள்ளார்.- Vidivelli