கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
அல்-நக்பா என்ற அரபு வார்த்தைக்கு அழிவி என்று தமிழிலே பொருள். 1948ல் இஸ்ரவேலின் பயங்கரவாதக் குழுக்களாலும் இராணுவப் படையினாலும் பலஸ்தீன மக்களுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களும் கொலைகளும் சுமார் 750,000 அரபு மக்களை தமது கிராமங்களையும் இல்லங்களையும் விட்டு வெளியேற்றப்பட்டு அவர்களை அகதிகளாக லெபனானிலும் எகிப்திலும் பலஸ்தீனின் இதர பகுதிகளிலும் தஞ்சம்புக வைத்தன. அந்த நிகழ்வே அல்-நக்பா என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று அரபு வசந்தம் என்பது 2011ல் எகிப்தின் கைரோவில் (அல்-காஹிராவில்) ஆரம்பமாகி அரபு நாடுகளெங்கும் பரவிய ஜனநாயகப் போராட்டத்தை குறிக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி இப்போது காசாவை குண்டு வீசித் தகர்த்து குழந்தைகளும் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து அதனை ஒரு மயானபூமியாக்கி இறுதியில் காசாவையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள இஸ்ரவேல் நடத்தும் இனச்சுத்திகரிப்புப் போரின் விளைவுகளைப்பற்றி வாசகர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடந்த மாதம் ஏழாம் திகதி ஹமாஸ் விடுதலை இயக்கம் இஸ்ரவேலை நோக்கி வீசிய ரொக்கற் வெடிகணைகள் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய உயிர்களைப் பலி கொண்டன என்பதை மறுக்கவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. எந்த ஓர் உயிரையும் திட்டமிட்டுக் கொலைசெய்வதை மனிதாபிமானமுள்ள எவரும் வரவேற்க முடியாது. ஆனால் அந்த நிகழ்வுதான் இன்றைய போரை ஆரம்பித்தது என்று இஸ்ரவேல் கூறுவதை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஆமோதித்து இஸ்ரவேலுக்கு தன்னைப்பதுகாக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் அது விரும்பியவாறு காசா மக்களை கொன்று குவிப்பதற்கும் காசாவை ஒரு மயான பூமியாக்கி அந்த நிலத்தை இஸ்ரவேலுடன் இணைப்பதற்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதை ஹிட்லரை உருவாக்கிய அதே மேற்கு நாகரிகத்தின் இன்னோர் அசிங்கம் எனக் கருதலாம்.
அதைத்தான் ஐ. நாவின் செயலாளர் நாயகமும் சில தினங்களுக்குமுன் ஹமாஸின் வெடிகணைகளுக்குப் பின்னணியாக காசாவில் ஐம்பத்தாறு வருடகால இஸ்ரவேலின் அடக்குமுறையும் அதனால் அம்மக்களின் மூச்சுவிடமுடியாத திணறலும் உண்டு என்ற கருத்தை ஐ. நா. சபையில் வெளியிட்டுச் சர்ச்சைக்குள்ளானார். ஆனால் அதுதான் உண்மை என்பதை மறுக்க முடியாது. இதற்கிடையில் இன்னுமோர் உண்மையையும் மறந்துவிடக்கூடாது. அதாவது ஹமாஸ் இஸ்ரவேலின் உளவுத்துறை மோஸாத்தின் ஒரு படைப்பு. பலஸ்தீன அதிகாரி நாயகம் மஹ்மூத் அப்பாஸ் பலஸ்தீன அரசு ஒன்றை நிறுவ எடுத்த முயற்சிகளை முறியடிப்பதற்காக அவருக்கு ஓர் எதிரியாக மோஸாத்தினால் உருவாக்கப்பட்டதே ஹமாஸ் இயக்கம். ஆனால் அரபு நாடுகள் பலஸ்தீனப் பிரச்சினையை அம்போ எனக் கைவிட்டு இஸ்ரவேலுடன் நல்லுறவை ஏற்படுத்த அமெரிக்காவின் அனுசரணையுடன் முயலுகின்ற ஒரு சூழலில், அரபாத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கமும் அப்பாஸின் தலைமையில் ஊழல்கள் நிறைந்த ஒன்றாக மாறவே பலஸ்தீனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து காசா மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இயக்கமே ஹமாஸ். வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோன்று இன்று அது இஸ்ரவேலின் பரம எதிரியாக மாறியதால் இஸ்ரவேல் தான் பெற்ற குழந்தையையும் அதனை வளர்ப்போரையும் பூண்டோடு அழிப்பதற்காகப் போர் தொடுத்துள்ளது. இந்த வரலாற்றை இன்றைக்கு இஸ்ரவேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் தந்திரமாக மூடிமறைப்பதேனோ?
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு முன்னரும் பல முறை ஹமாஸ் ரொக்கற் வெடிகணைகளை தெல் அவிவ் நகரை நோக்கி வீசியுள்ளது. அவை ஒவ்வொன்றும் இஸ்ரவேலின் அடக்குமுறைக்கு எதிராக பலஸ்தீன விடுதலையை முன்வைத்து நடத்தப்பபட்ட வன்செயல்கள். இன்றைக்கு இஸ்ரவேல் அவிழ்த்துவிட்டிருக்கும் கொலை பாதகங்களையும் திட்டமிட்ட அழிவுகளையும் கைகொட்டி வரவேற்கும் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் காசாமக்கள்மேல் ஒக்டோபருக்கு முன்னர் வருடக்கணக்காக இஸ்ரவேல் செய்த கொலைகளையும் அட்டுழியங்களையும் கண்டும் காணாததுபோல் இருந்ததேன்? அதற்குக் காரணம் இஸ்ரவேல் முற்றாகப் பலஸ்தீனத்தை தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை அவர்கள் ஆதரிப்பதனாலேயே. அமெரிக்க கிறித்தவர்களுள் ஒரு சாரார் இஸ்ரவேல் முழு பலஸ்தீனத்தையும் கைப்பற்றி ஆண்டபினனர்தான் நபி ஈசா மீண்டும் பூவுலகுக்கு வருவார் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. ஒரு பக்கத்தில் பலஸ்தீனத்தை இரண்டு அரசுகளைக் கொண்ட பிரதேசமாக ஆக்குவதே எங்களின் நோக்கம் என்று உலகை ஏமாற்றிக் கொண்டு மறுபக்கத்தில் அந்த முழுப்பிரதேசத்தையும் இஸ்ரவேல்; ஆளவிரும்புவதை ஆமோதித்து அது பூர்த்தியாகுவதற்கு அவர்கள் போடும் நாடகத்தின் இன்னொரு காட்சியையே இப்பொழுது நடைபெறும் போரிலும் காண்கிறோம்.
மனிதாபிமானம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் (யூதர்கள் உட்பட) உலகின் பல பாகங்களிலுமிருந்து உடனடியாக இப்போரை நிறுத்தும்படியும் காசா மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும்படியும் கோரிக்கை விடுக்க, அதற்குப் பதிலாக, போரை நிறுத்த மாட்டோம் என்று பிரதமர் நெத்தன்யாகு கூறியிருப்பதை அமெரிக்காவும் அதன் சகாக்களும் சரிகாண்பதை எந்தப் போர் தர்மத்தில் சேர்ப்பதோ? ஒட்டுமொத்தத்தில் காசாமக்களை முற்றாகத் துரத்தியடித்தோ கொன்று குவித்தோ அந்த நிலத்தை முற்றாகக் கைப்பற்றுவதே இந்தப் போரின் அந்தரங்கம். ஆனாலும் காசாவின் இனச்சுத்திகரிப்பை பிரதமர் நெத்தன்யாகு ஒரு மதக் கடமை என வலியுறுத்தி அதற்கு பைபிளிலிருந்து ஆதாரங்களை காட்டியிருப்பது கவனிக்கற்பாலது.
நெத்தன்யாகு இந்தப் போரை “இஸ்ரவேலின் இரண்டாவது விடுதலைப் போர்” என அழைத்திருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். முதலாவது விடுதலைப்போர் 1948ல் நடைபெற்றது என்பதையும் அதன் விளைவாக முதலாவது அழிவி இடம்பெற்றது என்பதையும் ஏற்கனவே அறிந்தோம். அதேபோன்று இரண்டாவது விடுதலைப் போரும் இரண்டாவது அழிவியில் முடிவடையும் என்பதை இக்கட்டுரை திடமாக நம்புகிறது. காசா மக்களை அதன் வடக்கிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத் தலைவன் கட்டளையிட்டிருப்பது அந்த அழிவியின் முதலாவது கட்டமெனக் கருதலாம்.
ஆனால் முதலாவது அழிவிபோல் அல்லாது இரண்டாவது அழிவி கோடிக்கணக்கான அரபு மக்களை வெயியேற்றும் என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில், ஏறக்குறைய இரண்டுகோடி மக்களை உள்ளடக்கிய பகுதி காசா. இன்று காசா, நாளை மேற்குக்கரை என்றவாறு முழு பலஸ்தீனமுமே ஒரு நாள் அகன்ற இஸ்ரவேலாகும் என்பதை இக்கட்டுரை ஹேஷ்யம் கூறுகிறது. முஸ்லிம் மக்களின் மூன்றாவது வணக்கஸ்தலமாகிய அல்-அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளம் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் இஸ்ரவேல் நடத்திய தோண்டுதல்களால் நலிவடைந்துள்ளமையையும் வாசகர்கள் மறந்துவிடக்கூடாது. இரண்டாவது அழிவி ஏற்பட்டால் அதன் அடுத்த விளைவு என்ன என்பதை இனி அலசுவோம்.
இந்தப் போரில் இஸ்ரவேல் அதன் நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றி வெற்றிகண்டால் அது முதற்கண் 19 அரபு நாடுகளின் கையாலாகாத நிலையையும் அதற்கடுத்து ஐ. நா. பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் 48 முஸ்லிம் நாடுகளின் பலஹீனத்தையும் அதற்கும் மேலாக உலக சனத்தொகையில் கால்வாசியளவு வளர்ந்துள்ள முஸ்லிம் உலகின் பரிதாப நிலையையும் அவ்வவற்றின் நிர்வாண கோலத்தில் இஸ்ரவேலின் வெற்றி படம்பிடித்துக் காட்டும். மொத்தம் 48 முஸ்லிம் நாடுகள் ஐ. நா. சபையிலிருந்தும்; அவை தமது எண்ணிக்கையை ராஜதந்திரத்துடன் உபயோகித்திருந்தால் எத்தனையோ அழிவுகளை தடுத்திருக்கலாம். உதாரணமாக, 2002ல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கை குண்டுவீசித் தகர்க்க உலக நாடுகளின் சம்மதம் கேட்டு ஐ. நா. சபையில் உரையாற்ற எழுந்தபோது அத்தனை முஸ்லிம் நாடுகளும் அமைதியாக வெளிநடப்புச் செய்திருந்தால் ஜனாதிபதி அவரது போர் நடவடிக்கையைச் சற்றுப் பின்போட்டாவது இருந்திருக்கமாட்டாரா? ஆனால் முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை என்பது கிடையவே கிடையாது. மதவாரியாகவும் இனவாரியாகவும் குழுவாரியாகவும் பிளவுபட அந்தப்பிளவை வல்லரசுகள் தமது ஏகாதிபத்தியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மிகத் தந்திரமாகப் பயன்படுத்துகின்றன. அதனாலேதான் பலஸ்தீனமும் அரபு நாட்டு அரசுகளின் கைகளைவிட்டும் விலகி ஹமாஸ்போன்ற போராட்டக் குழுக்களின் கைகளிற் சிக்கி இன்று இஸ்ரவேலின் குண்டுவீச்சுக்கு ஆளாகி அழிகின்றது. ஆனால் இரண்டாவது அழிவியின் கோலத்தை சாதாரண அரபு மக்கள் நேரிலே பார்க்கும்போது அவர்களின் மனோ நிலை எவ்வாறு மாறுமோ? அந்த மாற்றம் இரண்டாவது அரபு வசந்தத்துக்கு வழிவகுக்காதா? இந்தக் கேள்விக்கான விடையைச் சற்று ஆழமாக நோக்குவோம்.
அரபு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்ககுமிடையே விரிந்த இடைவெளியுண்டு. ஏனெனில் இந்த ஆடசியாளர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. மன்னர்களும் சுல்தான்களும் அமீர்களும் இராணுவத் தலைவர்களும் என்று குடும்ப வாரியாகவும் படைபலம் மூலமாகவும் ஆட்சிசெய்யும் சர்வாதிகாரிகள். ஆவர்களின் ஆட்சியைப்பாதுகாக்கப் படைபலமும் வல்லரசுகளின் தயவும் இருந்தால் போதும் என்பதே அந்த ஆட்சியாளர்களின் அரசியல் சூத்திரம். அதனால் அவர்களது ஆட்சியின்மேல் மக்களது வெறுப்பு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிபட்டதன் விளைவுதான் 2011ல் ஏற்பட்ட அரபு வசந்தம். அந்தப் புரட்சியை சில நாடுகள் படைகொண்டு முறியடித்தன. எண்ணெய் வள நாடுகளோ பணத்தை வீசி அடக்கின. ஆனால் மக்களின் வெறுப்பு இன்னும் புகைந்துகொண்டே இருக்கிறது. இன்று இஸ்ரவேல் பலஸ்தீனத்தில் நடத்தும் கொலைவெறி ஆட்டத்தையும் அதைத்தடுக்க வலுவிழந்து நிற்கும் அரபுநாட்டுத் தலைவர்களையும் அரபு மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக முஸ்லிம்களும் ஏமாற்றத்துடன் அவதானித்தவண்ணம் இருக்கின்றனர். இஸ்ரவேலுடனான பொருளாதார வர்த்தக ராஜரீகத் தொடர்புகளை அரபு நாடுகள் துண்டிக்க வேண்டுமென மக்கள் விரும்ப ஆட்சியாளர்களோ அமெரிக்காவுடனும் இஸ்ரவேலுடனும் தேன்நிலவு கொண்டாட விளைகின்றனர். கேவலம், ஒரு சிறிய நாடான பொலிவியாவுக்குள்ள துணிவும் இவர்களுக்குக் கிடையாதா?
ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகையின் பின்னர் தெய்வ அருளுக்காக முஸ்லிம்கள் கண்ணீருடன் கையேந்தியவண்ணம் இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை குத்பாக்களும் பலஸ்தீன மக்கள் படும் பரிதாபத்தைப்பற்றியே பிரஸ்தாபிக்கின்றன. வாரமுடிவு நாட்களில் உலகெங்கும் பலஸ்தீன மக்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சூழலில் தங்களது நாடுகளின் ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்படாதவரை பலஸ்தீனப் பிரச்சினைக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் ஈடேற்றத்துக்கும் வழிபிறக்காது என்ற எண்ணம் அரபு மக்களிடையே தோன்றாதா? காசாவிலிருந்து ஆரம்பமாகும் இரண்டாவது அழிவியை அவர்கள் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் புதினத் தாள்களிலும் கண்டும் கேட்டும் வாசித்தும் அறியும்போது அது இன்னுமொரு அரபு வசந்தத்துக்கு வழிவகுக்காதா? அந்த வசந்தம் ஏற்கனவே பிறந்த வசந்தம்போல் அமைதியானதாக இருக்குமென்று யாராலும் உறுதி கூற முடியுமா?
எந்த இனமும் தன்னைத்தானே மாற்றாதவரை இறைவனும் மாற்ற மாட்டான் என்ற திருமறையின் போதனையை இன்னும் முஸ்லிம்கள் உதாசீனம் செய்தால் அது நபி பெருமானாருக்கு அவர்கள் செய்யும் துரோகம் என்றே இக்கட்டுரை கருதுகின்றது.
“எந்த இனத்தின் இள உள்ளம் எஃகாய்மாறி இருந்திடுமோ
அந்த இனத்துக்கேன் வாளும் அதனைத் தாங்கும் கோழைகளும்?”
(அல்லாமா இக்பால்)
-Vidivelli