இஸட்.ஏ. ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,
புத்தளம் வலயக் கல்வி அலுவலகம்
இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பக் கல்விக்கூடமாக ‘மக்தப்’ எனப்படும் ‘குத்தாப்கள்’ அமைந்திருந்தன. ஐவேளைத் தொழுகை இடம்பெறும் பள்ளிவாசல்களையொட்டியதாக இவை அமைக்கப்பட்டன. முஸ்லிம்களின் குடியேற்றத்துடன் பள்ளிவாசல்களும் தோற்றம்பெற்றன. கிராமங்கள் தோறும் அமைந்திருந்த குத்தாப்களில் காலை, உச்சி, மாலை என மூவேளைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அறபு மொழியில் அமைந்திருக்கும் குர்ஆனை ஓதுவதற்கு இங்கு கற்பிக்கப்பட்டதுடன் மார்க்கக் கல்வியும் அறபுத் தமிழ் இலக்கியங்களும் நடைமுறைப் பயிற்சியுடன் வழங்கப்பட்டன. அறபு அல்லாத கல்வியைக் கற்பது மார்க்கத்துக்கு முரணானது என்று கருதப்பட்ட காலமொன்றும் இருந்தது. நமது நாட்டு முஸ்லிம்கள் தமது உயர்கல்விக்காக ‘மத்ரஸா’க்களை நாடினர். இலங்கையில் மத்ரஸாக்களின் வரலாறு சுமார் 140 வருடங்களைக் கொண்டதாகும். மத்ரஸாக்களை நிறுவிய முன்னோடியாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) கருதப்படுகின்றார்.
மாறிவரும் உலகின் சிந்தனைப் போக்கிற்கும் அதன்விளைவாக உருவாகும் சவால்களுக்கும், மத்ரஸாக் கல்வியைப் பெறுவதன் மூலம் மட்டும் முகம் கொடுக்கமுடியாது என காலப்போக்கில் உணரப்பட்டது. அத்துடன், அங்கு இடம்பெறும் கற்றல் கற்பித்தல் முறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்களும் தோன்றின. ஆரம்பகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நவீன கல்விச் சிந்தனைகளை விதைத்தவர்களுள் அறிஞர் சித்திலெப்பை, ஐ. எல். எம். அஸீஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். 21.08.1892 இல் ‘அல் மத்ரஸதுஸ் ஸாஹிறா’ தோற்றம்பெற்றது. ‘மத்ரஸா’ என்ற நிலையிலிருந்து ‘ஜாமிஆ’ (கலா நிலையம்) என்ற சிந்தனையை விதைத்தவர் ஸாஹிறாக் கல்லூரி அதிபராக (1948 –-1961) இருந்த அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் ஆவார். 1941 இல் அஸீஸ் அவர்கள், ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற தலைப்பில் ‘முஸ்லிம் மித்திரனில்’எழுதிய கட்டுரை, 1963 இல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற அவரது நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்பெற்றது.
இலங்கையில் செல்வந்தராக மட்டுமன்றி கொடை வள்ளலாகவும் அனைவராலும் அறியப்பெற்றவர் பேருவளை, சீனன்கோட்டையை சேர்ந்த நளீம் ஹாஜியாராவார். மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியையும் போதிக்கும் கலாநிலையம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மனதிலும் உதித்தது. தனது சொத்து செல்வம் முழுவதனையும் அதற்காக அர்ப்பணிக்க ஹாஜியார் தயாராக இருந்தார். சீனன்கோட்டை தனவந்தர்கள், பிரமுகர்கள் அனைவரும் முழுமனதுடன் அவருக்கு உதவ முன்வந்தனர். அக்கால உலமாக்களினதும் அறிஞர்களினதும் நெருங்கிய நட்பும் நளீம் ஹாஜியாருக்குக் கிடைத்தது. 19.08.1973 ஞாயிறு அன்று ‘ஜாமிஆ நளீமிய்யா’, இலங்கையில் முஸ்லிம்கள் முதலாவது குடியேறிய பேருவளையில் தோற்றம்பெற்றது.
ஜாமிஆ நளீமிய்யாவின் அங்குரார்ப்பண தினத்தன்று, அதன் தாபகர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்கள் ஆற்றிய உரையில், “இதனை ஆரம்பிப்பதற்கு கல்வி அறிவு குறைந்த, ஆனால் பரிபூரண, உறுதியான, இறை நம்பிக்கை கொண்ட முப்பத்தி இரண்டு பேரடங்கிய குழுவொன்று முயற்சித்தது. இக்குழுவுடன் மார்க்கக் கல்வி கற்றோரும் உலகக் கல்வி கற்றோரும் இணைந்தனர். இவர்கள் எமக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, பாடத்திட்டத்தையும் வகுத்து எம்முடன் சேர்ந்து செயல்படுகின்றனர். எந்த சுய இலாபத்தையும் கருதாது அல்லாஹ்வுக்கவே அவர்கள் செயலாற்றுகின்றனர்” எனத்தெரிவித்தார்.
ஜாமிஆவின் உருவாக்கத்துக்கு நளீம் ஹாஜியாருடன் தோளோடு தோள்நின்ற சீனன்கோட்டை பிரமுகர்கள் சிலர் இன்றும் எம்மத்தியில் வாழ்கின்றனர். அவர்களுள் சீனன்கோட்டை பள்ளி சங்க தற்போதைய தலைவரும் நளீமிய்யா இஸ்லாமிய கலாபீட சங்கத்தின் முதலாவது கெளரவ பொருளாளருமான ஏ. எச். எம். முக்தார் ஹாஜியார், உப செயலாளரும் பொருளாளருமான எம். எச். எம். ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார், ஏ. ஆர். எம். சுலைமான் ஹாஜியார், ஏ. ரீ. எம். பாயிஸ் ஹாஜியார், ஏ. சி. எம். சல்மான் ஹாஜியார், ஏ. ஆர். எம். பாரூக் ஹாஜியார், எஸ். எம். பாஸி ஹாஜியார், சட்டத்தரணி எம். சி. எம். ஹம்ஸா போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். நளீமிய்யா இஸ்லாமிய கலாபீட சங்கத்தின் முதலாவது கெளரவ செயலாளர், மர்ஹூம் சீ.எல்.எம். அபுல்ஹசன் (ஜே.பீ.) ஆவார்.
1982 மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஜாமிஆ நளீமிய்யாவின் முதல் பட்டமளிப்பு விழாவின்போது உரையாற்றிய ஜாமிஆவின் தாபகரும் அதன் ஆயுட்காலத் தலைவருமான அல்ஹாஜ் எம். ஐ. எம். நளீம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். “இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய சன்மார்க்கக் கல்வியையும் ஏனைய உலகக் கல்விகளையும் ஒரே நேரத்தில் கற்றுத்தேர்ந்த, இஸ்லாமிய தஃவாவை சமுதாயத்தின் தேவைக்கேற்ற வகையில் போதிக்கக்கூடிய உலமாக்களை, இஸ்லாமிய அறிஞர்களை, சிந்தனையாளர்களைக்கொண்ட ஒரு பரம்பரையை உருவாக்க வேண்டும் என்ற ஒரு உதிப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ் எனது உள்ளத்தில் உருவாக்கினான். அதனை இஸ்லாமிய அறிஞர்கள், கல்விமான்கள், உலமாக்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் சமர்ப்பித்தேன். அக்குழு அமைப்பு, பாடத்திட்டம், பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தயாரித்தது. அதன்படி 1973 இல் ஜாமிஆ நளீமிய்யா அமைக்கப்பட்டது”.
நளீமிய்யாவை உருவாக்குவதில், உலமாக்கள் என்ற ரீதியில், தப்லீக் அமைப்பின் முக்கியஸ்தர் மஸ்ஊத் ஆலிம் ஸாஹிப், ஜமாஅதே இஸ்லாமி அமீர் ஏ. எல். எம். இப்ராஹீம், கலீபதுஷ் ஷாதுலி ஷாஹுல் ஹமீத் பஹ்ஜி, ஜாமிஆவின் தாபக அதிபர் மெளலவி தாஸின் (நத்வி, அல் அஸ்ஹரி), பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த எம். ஏ. எம். சுக்ரி போன்றோர் முக்கியமானவர்களாவர். இவர்களுள் ஆரம்பம் முதலே ஹாஜியாருடன் இணைந்திருந்தவர் மஸ்ஊத் ஆலிம் அவர்களாவார். சீனன்கோட்டையைச் சேர்ந்த கலீபதுஷ் ஷாதுலி மர்ஹூம் எம். ஐ. எம். மன்சூர் ஆலிம் அவர்களும் பரிபாலன சபையின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராவார்.
கல்விமான்கள் வரிசையில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், நீதவான் ஏ. எம். அமீன் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். மேலும் சீனன்கோட்டையை சேர்ந்தவர்களான ஏ. சி. ஏ. வதூத் ஹாஜியார் (Secretary, Ceylon Muslim Missionary Society), வைத்தியர் யூ.எல்.எம். பஷீர், சட்டத்தரணிகளான எம். சி. எம். ஹம்ஸா, ஏ. சீ. எம். ஏ. மசூத், ஏ. ஜே. எம். மசூத் ஆகியோருடன் ஜே. எம். எம். ராஜி (B.A ), உப அதிபர் ஏ. ஏ. எம். முஹம்மத் காசிம் போன்றோர் நளீமிய்யா இஸ்லாமிய கலாபீட பரிபாலன சபையின் ஆரம்பகால அங்கத்தவர்களாவர். இவர்களில் எம். சி. எம். ஹம்ஸா ஹாஜியார் தவிர்ந்த ஏனையோர் இறையடி எய்திவிட்டனர்.
அறிஞர் எ. எம். எ. அஸீஸ் அவர்கள் இஸ்லாமிய கலாநிலையம் ஒன்றுக்கான திட்டவரைபை ஏற்கனவே உருவாக்கியிருந்தார். அஸீஸ் காலத்து ஸாஹிறாவின் ஆசிரியரும், அவரின் நண்பரும், எழுத்தாளரும், நூலகருமான எஸ்.எம். கமாலுத்தீன், ஜாமிஆவின் முதலாவது நூலகர் ஏ. ஆர். ஏ. நூர் அமீன் போன்றோர் இதில் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். எனினும் இஸ்லாமியக் கல்வியையும் உலகக் கல்வியையும் ஒன்றிணைத்துக் கற்பிக்கும் விரிவான நடைமுறையொன்று அக்காலப் பகுதியில் இலங்கையின் எந்தவொரு முஸ்லிம் கல்வி நிறுவனத்திலும் இல்லாதிருந்தது.
சன்மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் இணைத்துக் கற்பிக்கும் கன்னி முயற்சியாகவும் பரீட்சார்த்த செயற்பாடாகவும் நளீமிய்யா கலாபீடம் தொடங்கப்படவிருந்த நிலையில், எ.எம்.எ. அஸீஸ் அவர்களின் ஆலோசனைக்கேற்ப, பாகிஸ்தான் சென்று அங்குள்ள கலாநிலையங்களின் அனுபவங்களைப் பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, மெளலவி யூ. எம். தாஸின், எம். எச். எம். ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார், ஏ. ஆர். எம். சுலைமான் ஹாஜியார், ஏ. ரீ. என். பாயிஸ் ஹாஜியார் ஆகிய ஐவர் கொண்ட குழு 1972 இல் பாகிஸ்தான் பயணமாகியது. அதற்காக அவர்கள் கராச்சி முதல் பெஷாவர் வரை சென்றனர். ஜாமிஆ நளீமிய்யாவின் ஆரம்பகாலப் பாடத்திட்டத்தினை உருவாக்குவதில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மெளலவி ஏ.எல்.எம். இப்ராஹிம் போன்றோரும் பெரும்பங்காற்றியுள்ளனர். ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்படும்போது நிரந்தர ஆசிரியர்கள் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் அதிபர் மெளலவி யூ. எம். தாஸின் (நத்வி), மற்றையவர் பிரதி அதிபர் மெளலவி ஏ. எம். சி. எம். புஹாரி (மன்பஈ) ஆகியோராவர்.
இவ்வருடம் ஜாமிஆ நளீமிய்யா தனது பொன்விழாவை கொண்டாடும் வேளையில், நளீமிய்யா இஸ்லாமிய கலாபீட சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் சிலரையும் நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும். அவர்களுள் உப தலைவர் சீ. எம். அப்துல் கபூர் ஹாஜியார், எம். எச். எம். ஹம்ஸா ஹாஜியார், எம். ராஸிக் யூசுப் ஹாஜியார், எம். எஸ். எம். யாகூத் ஹாஜியார், எம். ஐ. எம். கலீல் ஹாஜியார், எஸ். எம். ஹாஷிம் ஹாஜியார், எம். எச். எம். நூமான் ஹாஜியார், ஏ. ஏ. எம். ஹாரூன் ஹாஜியார், வை. எல். எம். அமீர் ஹாஜியார், ஏ. ஐ. எம். அன்வர் ஹாஜியார், ஏ. பீ. எம். ஹனிபா ஹாஜியார், ஏ. எம். எம். ரவூப் ஹாஜியார், ஏ. எம். எம். ஹனபி ஹாஜியார், எம். ஆர். எம். ஹம்ஸா ஹாஜியார், எம். எஸ். எம். மர்சூக் ஹாஜியார், வை. எல். எம். ஸாலிஹ் ஹாஜியார், எஸ். எம். அன்வர் ஹாஜியார், ஏ. ஏ. முஹம்மத் ஷஹீத் ஹாஜியார், சனூன் ஹாஜியார், எம். எஸ். எம். அனஸ் ஹாஜியார் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர்.
‘மக்தபி’ன் பரிணாம வளர்ச்சியே ‘ஜாமிஆ’வாகும். 1970 களில் விதைத்த வித்து இன்று விருட்சமாகப் படர்ந்து வியாபித்துள்ளது. அது தாண்டவேண்டிய மைல் கற்கள் இன்னுமுள்ளன. ஜாமிஆவுக்குள் ஒரு ‘சுவடிக்கூடம்’ அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும். எமது அடுத்த அடியை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு இது அவசியமாகும். ஜாமிஆவின் தாபகர் நளீம் ஹாஜியார் உட்பட அதற்கு வித்திட்டவர்கள் என்றென்றும் நினைவுகூரப்படவேண்டியவர்களாவர். ‘தாபகர்கள் தினம்’ ஒன்றின் மூலம் இதனை சாத்தியமாக்கலாம். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டுழைத்தவர்களுக்கும் நளீமிய்யா கலாபீடம் உருவாக நளீம் ஹாஜியாருடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா பேரருள் புரிவானாக. – Vidivelli