மௌலவி பி.ஏ.எஸ். சுபியான்
தலைவர், மக்கள் பணிமனை
வடக்கில் இருந்து 1990 ஒக்டோபரின் இறுதி வாரத்தில் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது நிலைகளை எண்ணித் தவித்து வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகிவிட்ட பொழுதிலும் இம் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இன்னும் நிம்மதியாகச் சென்று மீள்குடியேற முடியாமல் இருக்கின்றனர்.
மீள்குடியேற்றத்திற்காகச் சென்றவர்கள் 1/4 பகுதியினரே. மீள்குடியேற வந்த இம் மக்களுக்கும் அவர்களது பல்வேறு அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அவர்களும் இங்கும் அங்கும் வருவதும் போவதுமாக இருக்கின்றனர்.
இன்னும் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டு விட்டு எவ்வித ஏற்பாடுகளும் சொந்த மண்ணில் அரசினால் மேற்கொள்ளப்படாததினால் எதிர்பார்த்து காத்திருக்கும் பல குடும்பங்கள் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக 20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் அமர்வுகளில் பாராளுமன்றத்தில் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பாக கவன ஈர்ப்பு விவாதங்களை நடத்தும்படி வடபகுதி முஸ்லிம்கள் சார்பில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பின்வரும் விடயங்களை அறிவித்துள்ளோம். அவர்கள் நிச்சயமாக வட மாகாண முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புவார்கள் என முழுமையாக நம்புகின்றோம்.
1. வடக்கு முஸ்லிம்கள் சொந்த தாயக பூமியிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு இம்மாதம் 30ம் திகதியுடன் 33 வருடங்கள் முடிவடைந்து விட்டது.
2. இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது.
3. எனினும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் நிறைவடையவுமில்லை வெற்றியளிக்கவுமில்லை
4. வடக்கில் இதுவரையில் (2023) 1/4 ஒரு பகுதி முஸ்லிம்களே தங்களது சொந்த மண்ணில் மீள்குடியேறியுள்ளனர்.
5. மீள்குடியேறிய மக்களுக்கு இன்னும் அரசாங்கம் உறுதியளித்தபடி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிவைக்கத் தவறிவிட்டது.
6. இன்னும் மீள்குடியேறாமல் இருக்கும் 3/4 பகுதியினர் நாட்டின் நாலா பகுதிகளில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
7. இம் மக்களது வாழ்வுரிமை கல்வி, தொழில், அரச வேலைவாய்ப்பு இவர்களுக்கான சொந்த மண்ணில் இழந்த அசையும் அசையாத சொத்துக்களுக்கான நஷ்ட ஈடு, சொந்த மண்ணிலே இவர்களுக்கான காணி, வீடு, தொழில் வாய்ப்பு இப்படி எதுவுமே எதிர்பார்த்தபடி நடைபெறாமல் இம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
8. இந்த 33 வருட காலத்திற்குள் புதிய சந்ததியினர் இரு தலைமுறைக்கு தோன்றி விட்டனர். சனத்தொகை 3 மடங்கினால் பெருகி விட்டது.
9. இந்நிலையில் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் வட மாகாண முஸ்லிம்களைப் பற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
10. எனவே இலங்கை அரசு வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு இம் மக்களில் மீள்குடியேறிய மக்கள், இன்னும் மீள்குடியேறாத மக்கள் இவ்விரு சாராரின் தேவைகள் அபிலாஷைகளை கண்டறிந்து இதற்கான திட்டத்தை வகுத்து குறுகிய கால வேலைத்திட்டத்தை தயாரித்து இம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
எனவே இக் கோரிக்கை நிறைவேற எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித பேதங்களும் இன்றி வட பகுதி முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக குரல் எழுப்பி எமது பிரச்சினைகளை தேசிய சர்வதேச மயப்படுத்துவதற்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைப்பதற்கும் ஆவன செய்து உதவுமாறு வட மாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் கேட்டுக் கொள்கிறோம். – Vidivelli