எம்.எப்.அய்னா
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மதரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்கள், பொய்யானது எனவும் அது எதுவும் நேரடியாக தன் கண்களால் காணாதவற்றை அடிப்படையாக கொண்டது எனவும் ஒப்புக்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை (19) புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விடயம் பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசாரணையின் போது மன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந் நிலையில் கடந்த மார்ச் 24, 27, ஜூலை 14ஆம் திகதிகளில் நடந்த விசாரணைகளின் போது 2 ஆம் சாட்சியாளராக அல் சுஹைரியா மதரஸாவின் முன்னாள் மாணவனான, 19 வயதுடைய மொஹம்மட் பெளஸான் சாட்சியமளித்திருந்த்தார்.
அவரது சாட்சியத்தை அரசின் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம நெறிப்படுத்தியிருந்த நிலையில் முதல் பிரதிவாதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவினால் குறுக்கு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி 2 ஆவது பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்.
கடந்த தவணையின் போது, பாத்திமா ஜிப்ரியா, சாரா ஜெஸ்மின் என இரு பெண்கள் மதரஸா பாடசாலைக்கு வந்த்து போதனைகளை செய்ததாக கூறினீர்கள் அல்லவா? அந்த இரு பெண்கள் மட்டுமா போதனை செய்ய மதரஸாவுக்கு வந்தார்கள் என சட்டத்தரணி சமிந்த அத்துகோரள முதல் கேள்வியை தொடுத்தார்.
அதற்கு பதிலளித்த சாட்சியாளர், அன்று நான் சொன்னது பொய். நான் அவர்களைக் காணவில்லை என தெரிவித்தார்.
ஜிப்ரியா, சாரா ஜெஸ்மின் ஆகியோர் அங்கு வந்து சில விளையாட்டுக்களை சொல்லிக்கொடுத்ததாக கூறினீர்கள் அல்லவா? என மீண்டும் கேட்ட போது, அது உண்மை இல்லை. நான் பொய் கூறினேன் என சாட்சியாளர் மீளவும் பதிலளித்தார்.
அதன்பின்னர் பிரதான சாட்சியத்தில் குறித்த சாட்சியாளர் குறிப்பிட்ட, அல் சுஹைரியா மத்ரசாவுக்கு சஹ்ரான் ஹஸீம் வந்தமை, மத்ரஸாவில் புரொஜெக்டர் உதவியுடன் காட்சிகள் காண்பிக்கப்பட்டமை, சஹ்ரானின் சகோதரர் என கருதப்படும் ரில்வான் அல்லது ரிஸ்வான் எனும் நபர் வருகை தந்தமை போன்ற அனைத்து விடயங்களும் பொய்யானவை எனவும் தான் முதல் சாட்சியாளர் மலிக்கின் கூற்றுப்படி சில விடயங்களை அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தில் கூட தான் பொய் கூறியதாகவும், சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை கூண்டில் அடைப்பதாக அச்சுறுத்தியதால் அதனை தெரிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
சி.ஐ.டி. விசாரணையின் போது, சில புகைப்படங்களை அவர்கள் காட்டிய போது, அதில் இருந்தவர்களை தான் அறிந்திருக்கவில்லை எனவும் அவர்களின் பெயர்களை சி.ஐ.டி. அதிகாரிகளே சொல்லித் தந்ததாகவும் சாட்சியாளர் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்து கூறினார்.
அத்துடன் கடந்த 2020 மே 12 ஆம் திகதி கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளிக்க வேண்டும் என தான் ஒரு போதும் கோரவில்லை எனவும் அதற்கான தேவை தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ இருக்கவில்லை எனவும் அது சி.ஐ.டி.யின் தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்த சாட்சியாளர், சி.ஐ.டி.யினர் தனக்காக பெண் சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் நீதிவானிடம் வழங்கிய இரகசிய வாக்கு மூலத்தில், சஹ்ரான் மத்ரஸாவுக்கு வந்ததாகவோ, அவர் கிறிஸ்தவர்கள் எமது பள்ளிகளை அழிக்கின்றார்கள் நாம் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று போதனை செய்ததாகவோ, குண்டு வெடிப்பு சார் விடயங்களை ரில்வான் அல்லது ரிஸ்வான் வருகை தந்து போதனை செய்ததாகவோ, தெரிவிக்காமைக்கான காரணம் அவ்வாறு மத்ரஸாவில் நடக்காமையா? என சட்டத்தரணி சமிந்த அத்துகோரள கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சாட்சியாளர் ஆம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதனாலேயே நான் அவற்றை நீதிவானிடம் கூறவில்லை என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. – Vidivelli