பலஸ்தீனை இலக்கு வைக்கும் மேற்குலக ஊடகங்களின் கூட்டுப் பிரச்சாரம்.
வலுக்கும் மாற்று ஊடகங்களின் குரல்.
கலாநிதி. எம்.சீ. ரஸ்மின்
ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து வரலாற்று ரீதியாக இஸ்ரேலில் இனவெறிக்கு முகங்கொடுத்து வந்த பலஸ்தீன மக்கள் இப்போது புதிய ஒரு சர்வதேச சவாலை சந்தித்து வருகின்றனர். அதுதான், ஐரோப்பிய ஊடகங்களும் அரசாங்கங்களும் இஸ்ரேலின் மிலேச்சனத்தை நியாயப்படுத்தும் வகையில் மேற்கொள்ளும் பக்கச்சார்பான அறிக்கையிடல், இணையவழிப் பிரசாரம் (Cyber Propaganda) என்பனவாகும்.
தவறாக செய்தி கட்டமைத்தல் (Framing), போலிச் செய்திகள், ஊடகப் பக்கச்சார்பு, உண்மையை திரிபுபடுத்திக் காட்டுதல், உண்மையை திசைதிருப்புதல் என்பன பாரியள்வில் வெளிவருகின்றன. ஒருபுறம் அமெரிக்காவில் மேற்கிளம்பும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவான யூதர்களின் குரல், மேற்குலகில் சமூக ஊடகங்களில் வலம்வரும் பலஸ்தீன் மைய ஊடக உரையாடல்களும் குறிப்பிடத்தக்க அவதானத்தைப் பெற்று வருகின்றன. எனினும், ஹமாஸின் தாக்குதலை, அதனை உதிரியான ஒரு சம்பவமாகச் சித்தரித்து உண்மையை திரிபுபடுத்திக் காட்டும் மேற்குலக ஊடகங்களின் ஆதிக்கத்தை அவற்றால் இதுவரை இலகுவில் ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்தியாவிலும் இலங்கையிலும் வெளிவரும் நூற்றுக்கணக்கான சமூக ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள் பெரும்பாலும் தமிழ் பேசுகின்ற வாசகர்களை உணர்ச்சி வசப்படுத்தும் போக்கினை கொண்டிருக்கின்றன. ஆனால், மேற்குலகின் ஊடக ஆதிபத்தியம் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழிச் சமூகத்தை திருப்திப்படுத்துவதை விட இஸ்ரேலுக்கு ஆதரவான பாரிய ராஜதந்திர அலையை உருவாக்குவதே இவற்றின் இலக்காகும்.
எனவே, மேற்குலக பிரதான நிலை ஊடகங்களினதும் இணையவழி ஊடகங்களினதும் வியாபகத்தை விளங்கிக் கொள்வது முக்கியமானதாகும். 2020ஆம் ஆண்டு வெளியான சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட சமூக ஊடகங்களின் கையாளுதல் (Global Inventry of Organized Social Media Manipulation) எனும் அறிக்கை பல விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்த அறிக்கையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஒக்ஸ்போர்ட் இணையத்தள நிறுவனமும் வெளியிட்டுள்ளன. இதன்படி பல நாடுகளில் இணையத்தள இராணுவ முயற்சிகள் இடம்பெறுகின்றன. 81 நாடுகளில் அரசியலை மையமாகக் கொண்ட பிரசாரங்கள், போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது. சமூக வலைத்தள நிறுவனங்கள் இது தொடர்பில் பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி அரசியல் விளம்பரங்கள் மற்றும் இணையவழி இராணுவ நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டு வருவதை வெளிக்காட்டியுள்ளன. அதேவேளை, சுமார் 48 நாடுகளில் இணையவழி பிரசார நடவடிக்கைகளுக்கான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 65 இற்கும் அதிகமான பாரிய தனியார் நிறுவனங்கள் இணையவழி பிரசாரங்களை ஒரு வர்த்தக சேவையாகவே வழங்கி வருகின்றன. இவற்றுக்கு தகுதியான, இணையவழி பிரசார உத்திகளை கற்றுத்தேறிய பிரசாரக்காரர்களை சேர்ப்பதற்கு மாத்திரம் 2009ஆம் ஆண்டிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. எனவே இது உலகச் செல்நெறியாக இருக்கின்ற போது இஸ்ரேலும் அமெரிக்காவும் எத்தகைய பிரச்சார உத்திகளை மேற்குலகை இலக்கு வைத்து மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸின் பெயரில் பல போலிப் பிரசாரங்களை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கட்டமைத்து வருகின்றது. த கார்டியன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் ஹமாஸ் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 வயது பிரான்ஸ் – இஸ்ரேலிய யுவதியின் தாய் செம் (Schem) தனது மகள் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது மகளின் உயிருக்கு ஆபத்து நடக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனும் இதனை கண்டித்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் பணயக்கைதிகளை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரும் செம் எனும் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஹமாஸ் சுமார் 1200க்கும் அதிகமானவர்களை கொலை செய்து சுமார் 200 பேரை கைதிகளாக தடுத்து வைத்தமையைத் தொடர்ந்து இத்தகைய பல செய்திகள் வெளிவந்தன. அத்தோடு, இஸ்ரேலிய இராணுவம் காஸாவின் இயக்கத்தை முடக்கி, வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. காஸாவில் உள்ள சுமார் 5800 பேரின் உயிரைப் பறித்தது. இரண்டு மில்லியன் பலஸ்தீனர்கள் காஸாவில் செல்ல இடமின்றி, உண்ண உணவின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்போது மேற்குலகத் தலைவர்கள் படிப்படியாக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பை விடுக்கின்றனர்.
இதற்கிடையில், எக்ஸ் தளத்தின் தரவுகளின் படி இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு சுமார் 30 இணையவழி விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இவற்றை சுமார் நான்கு மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். தரவுகளின்படி இவை 25 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளன. அத்தோடு, பிரசல்ஸ், பரிஸ், மியுனிக், நெதர்லாந்தின் ஹேக் போன்ற நகரங்களை இலக்குவைத்து வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்கள் யாவும் ஹமாஸை ஒரு மிலேச்சத்தனமான பயங்கரவாத இயக்கமாகக் காட்டியுள்ளன. ஹமாஸை ஐ.எஸ். இயக்கத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளன. ஹமாஸின் தாக்குதலின் பரிமாணத்தை, வகையை, கொடூரத்தைக் காண்பிக்க முயன்றுள்ளன. எக்ஸ் தளத்தில் வெளியான மற்றுமொரு வீடியோ இவ்விரு இயங்கங்களையும் பொதுமைப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. ‘உலகம் ஹமாஸை அழிக்கும்’ என்பதாக வீடியோ முடிவடைகிறது.
யூடியுப் தளத்தில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு 75 கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பர வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இவ்வீடியோக்கள் பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை கூகுளின் வெளிப்படை அறிக்கையூடாகவும் அறிந்துகொள்ள முடியும். இதிலொரு வீடியோ ‘பாபேரியர்கள் இதன் பிரதிகளைக் காணமாட்டார்கள், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் கண்டுகொள்வார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீடியோக்களில் சிறுவர்களின், பெண்களின், யுவதிகளின் பரிதவிப்புகள் காட்டப்பட்டுள்ளன..
இத்தகைய வீடியோக்கள் யாவும் மேற்குலகத்தை இலக்கு வைத்து, இஸ்ரேல் தனது யுத்தத்தையும் மிலேச்சத்தனத்தையும் தொடர்வதற்கான சர்வதேச ஆதரவை திரட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வீடியோக்களை மில்லியன்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இவற்றில் இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதையும், தன் தேசத்தின் பாதிக்கப்பட்ட மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை, இத்தகைய கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு கூகுள் நிறுவனம் 30 கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை நீக்கியுள்ளது. இதில் பகடி என்னவென்றால், இவ்வாறு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வீடியோக்கள் பல இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் யூடியுப் தளத்தில் சில எச்சரிக்கைகளுடன் இன்றும் பார்வைக்காக உள்ளன. இன்றும் எக்ஸ் தளம் இவ்வீடியோக்களை நீக்கியதாகத் தெரியவில்லை. இவ்வாறான கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பர வீடியோக்கள் பேஸ்புக், இன்ஸ்டகிராம், லிங்க்டின் மற்றும் டிக்டொக்கில் இடம்பெறவில்லை எனத் தெரிகின்றது. எனினும், அவையும் போலிச் செய்திகளின் விளைகளமாகவே உள்ளன.
இஸ்ரேல் சர்வதேச ஆதரவை திரட்டி, வெளிநாட்டு ஊடகங்களில் தன்மீதான கதையாடல்களை தனக்குச் சார்பாக திசை திருப்புவதற்கான உத்தியாக இவற்றைச் செய்து வருகின்றது.
இதற்கிடையில் மேற்குலகின் ஊடகக் கதை சொல்லல் முறை ஒருதலைப்பட்சமான, வரலாற்றை இருட்டடிப்புச் செய்வதாக, ஹமாஸின் தாக்குதலை முன்னிறுத்திய இஸ்ரேலிய மக்களின் பாதிப்புகளை மாத்திரம் மேலோங்கிக் காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த நிலைப்பாடு எதிர்ப்புக்கு முகங்கொடுத்து வருகின்றது. சர்வதேச மாற்று ஊடகங்கள் இவற்றை நிராகரித்து வருகின்றன. மேற்குலகின் குறிப்பாக பெரும்பாலான பிரிட்டன் ஊடகங்களின் செய்திக் கதைகள் யாவும் இஸ்ரேலின் பக்கத்தை மாத்திரம் காட்டுவதாக உள்ளன. இஸ்ரேலியர்களின் உயிர்கள் பலஸ்தீனர்களின் உயிர்களை விட அந்தஸ்தில் கூடியதாகக் காட்டுகின்றன.
பிரபல சீஎன்என் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பரீட் சகரிய்யாவின் நேர்காணல்கள் சிலவற்றைப் பார்க்கக் கிடைத்தது. தன்னை ஒரு நடுநிலை பேணும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் காட்டும் அவர் பலஸ்தீன மக்களின் வரலாற்றுத் துயரை தொட்டும் தொடாமலும் பேசுவதையும் ஹமாஸின் தாக்குதலை முன்னிறுத்தி அச்சம்பவமே இன்றைய காஸா மக்களின் நிலைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டு வருகின்றார். இஸ்ரேலிய மக்களின் – குழந்தைகளின் உயிரை மிலேச்சத்தனமாக கொன்று தீர்த்ததை பாபேரியர்கள் என்றுதான் கருதமுடியும் என்கின்றார்.
சிறுவர்களை பழி தீர்ப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்க அதிபரும் ‘நான் ஒருபோதும் தலைவெட்டப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை பார்வையிடுவேன் என்று நம்பவில்லை’ என்றார். பரவலாக வெளியிடப்பட்ட இணையவழி புகைப்படங்களின் பிரதிபலிப்பாக இது அமைகின்றது. எனினும், இதுவரை எந்தவொரு தரவுச் சரிபார்ப்பு நிறுவனமும் (Fact – Checking) இவ்வீடியோக்களின் உண்மைத் தன்மை பற்றி உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக இவை ஹமாஸின் ஆரம்பத் தாக்குதல் காட்சிகள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஜேர்மனி அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெறும் டிடப்ளிவ் (Deutsche Welle) ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் ‘இஸ்ரேலில் குழந்தைகளை ஹமாஸ் கொன்றதாக வெளிவரும் செய்திகள் பல போலியானவை, சில உண்மையானவை’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்டதாக வெளியிடப்பட்ட தாக்குதல் வீடியோக் காட்சிகள் பல போலியானவை. இவற்றில் சில 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Arma 3 எனப்படுகின்ற கணணி விளையாட்டின் பாகங்களாகும். இத்தகைய பெரும்பாலான போலி வீடியோக்கள் எக்ஸ் தளத்திலேயே வெளிவந்துள்ளன. இவற்றில் பலவற்றை மில்லியன்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர். ஆரம்ப தாக்குதல்களின் போது ஹமாஸ் இயக்கத்தினர் பரஸூட் வழியாக இஸ்ரேலுக்குள் பிரவேசிப்பதாக வெளியான பல வீடியோக்கள் தென்கொரிய பரஸூட் விபத்துகளின் போது எடுக்கப்பட்டவை என அறியப்பட்டுள்ளன.
துருக்கி ஜனாதிபதி எர்துகான் காஸாவில் இடம்பெறும் மிருகத்தனமான தாக்குதலை சகல தரப்பினரும் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் நாங்கள் அதனை நிறுத்த வேண்டிவரும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இதில் வரும் ‘அவ்வாறு நிறுத்தாவிட்டால் நாங்கள் அதனை நிறுத்தவேண்டி வரும்’ என்பது திரிபுபடுத்தப்பட்டதாகும். ரஸ்ய ஜனாதிபதி புட்டின் வரப் போகிறார். கிளம்பிவிட்டார். ஹமாஸையும் காஸா மக்களையும் ஆதரித்து இஸ்ரேலியர்களை எச்சரிக்கின்றார் என்பதாக வந்த வீடியோவும் இத்தகைய போலியானதென டி டப்ளியூ செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இனி மீண்டும் மேற்குலகின் பிரதான நிலை ஊடகங்களின் பக்கச்சார்ப்பு நிலைபற்றி நோக்கலாம். கடந்த 10 தினங்களாக உக்ரேன் மீது ரஷ்யா தொடுக்கும் யுத்தத்தை சர்வதேசப் போர்க்குற்றம் எனக் குறிப்பிடும் பெரும்பாலான மேற்கு ஊடகங்கள் மிலேச்சத்தனமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை அவ்வாறு அதே கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. மாறாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் குறிப்பிட்டது போல சுய பாதுகாப்பு நடவடிக்கையாகவே காட்டுகின்றனர். சில மேற்கு ஊடகங்கள் சுமார் 70 ஆயிரம் போர்க்குற்றங்களை ரஷ்யா புரிந்துள்ளதாக குறிப்பிட்டனர். மனித உரிமைகளை கணித்து எழுதிய பெரும்பாலான அத்தகைய ஊடகங்கள் இஸ்ரேலின் தாக்குதலை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தாக்குதலாக காட்டிவருகின்றன. ஹமாஸின் தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் 200 பலஸ்தீனர்களைக் கொலை செய்தது. பெரும்பாலான மேற்கு ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை. அச்சம்பவம் சர்வதேச செய்திகளில் முக்கியம் பெறவில்லை.
காஸாவின் இரண்டு மில்லியன் மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு யுத்தத்தில் இஸ்ரேலுக்கு உள்ள பொறுப்புக்கூற வேண்டிய நிலைபற்றி அனேகமான மேற்குலக ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரில் பூரண பாதுகாப்பில் இருக்கும் இஸ்ரேலிய மக்கள் அனுபவிக்கின்ற அடிப்படை உரிமை மீறல்கள் மற்றும் கடந்த 7 தசாப்தங்களாக அனுபவிக்கின்ற பலஸ்தீனியர்களின் இருப்புக்கான போராட்டத்தின் வரலாறு என்பனவற்றை மேற்கு ஊடகங்கள் மிகவும் சாதகமாக இருட்டடிப்புச் செய்து வருகின்றன. மேற்கு ஊடகங்கள் இப்பிரச்சினையை புலனாய்வு செய்ய சமத்துவமான முறையில் தமது வளங்களைப் பிரயோகிக்கவும் இல்லை.
சர்வதேச உலகமும் பிரிட்டன் காலனித்துவமும் பெரும்பான்மையினராக வாழ்ந்துவந்த பலஸ்தீன மக்களின் வாழ்விடங்களை இடமில்லாமல் செய்தமையை சர்வதேச ஊடகங்கள் செய்திகளின் தொடக்கப் புள்ளியாக கொள்வதில்லை. எனினும், இறுதியாக ஹமாஸ் நடத்திய தாக்குதல் சம்பவத்திலிருந்தே தமது செய்திகளை கட்டமைக்கின்றன. இஸ்ரேலிய காலனித்துவ அதிகாரத்தின் காட்டுமிராண்டித்தனம் பற்றி எதிர்வினா தொடுக்கப்படுகின்ற போதேல்லாம் மேற்குலக ஊடகங்கள் ஹமாஸின் தாக்குதலை ஒரு துரும்பாகப் பயன்படுத்தி வருகின்றன. பலஸ்தீனியர்களை அடிமைகளாகவும் இரத்த வெறி பிடித்தவர்களாகவும் யூத மக்களை கொன்ற பழி தீர்க்கும் மூர்க்கத்தனம் கொண்டவர்களாகவுமே காட்டுகின்றன.
சில பிரிட்டன் ஊடகங்கள் 24 மணி நேரத்தில் இரண்டு மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என இஸ்ரேல் குறிப்பிட்டதை மனித நேய உணர்வாகக் காட்டுகின்றன. ஆனால், அது எவ்வாறு சாத்தியப்படும் என்பதை எந்த ஊடகமும் விளக்கவில்லை. இஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாஹூவின் பகிரங்க போர் பிரகடனத்தின் பாரதூரத்தையும் அவரது கருத்துகளுக்கு ஆதரவாக மேற்குலகில் கிளம்பிய அரச தலைவர்களது நியாயமற்ற ஆதரவையும் பெரும்பாலான மேற்குலக ஊடகங்கள் இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்பாக கருதவில்லை. ‘‘பழுப்பு நிற உடல்கள் எரிக்கத் தகுதியானவை ; வெள்ளை நிற உடல்கள் வாழத் தகுதியானவை’’ என்பதே பெரும்பாலான ஊடகங்களின் கட்டமைப்பாக உள்ளன.
சுமார் 241 போர் மற்றும் இடைமறிக்கும் விமானங்களையும் 153 பயிற்சி விமானங்களையும் சுமார் 170,000 செயலில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவ வீரர்களையும் கொண்ட உலகில் நான்காவது சக்தி வாய்ந்த பாதுகாப்பு பலத்தைக் கொண்ட இஸ்ரேலை பாதிக்கப்பட்ட தரப்பாக சித்தரிக்கின்றமை மேற்குலகின் ஊடக கதையாடல் வஞ்சகத்தை எடுத்துக்காட்டுகின்றது.
2019ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின்படி 20.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்ட இஸ்ரேலில் ஆக்கிரமிப்பு படையை தனது கதையாடலுக்கு ஏற்ப, ஒரு நலிவடைந்த தேசமான பலஸ்தீனத்தின் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட தேசமாக காட்டுவது மேற்குலகின் ஊடக பாசாங்குத் தனத்தையே காட்டுகின்றது.
அம்னெஸ்ரி இன்டர்நேஷனல் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் பதிவு செய்து வருகின்றது. அதன் ஆய்வாளர் புதேன் ஹசன் ஏபீசி நேரடிச் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘காஸாவிலிருந்து பலஸ்தீனியர்களை வெளியேறச் சொல்வது எந்த விதத்திலும் சாத்தியமான ஒன்றல்ல. ஒரு மாதமானாலும் அதனைச் செய்ய முடியாது. பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் தெற்கை நோக்கிச் செல்வது சாத்தியப்படாது. பலஸ்தீனியர்கள் மீண்டும் திரும்பி வர முடியுமா எனும் உத்தரவாதமில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டுவது நியயமற்றது’’ என்றார்.
சீஎன்என் செய்தியாளரை எதிர்த்துப் பேசிய எகிப்து நாட்டு இணையத்தள நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரஹ்மா செய்ன் கேட்கும் சில கேள்விகள் அவதானத்துக்குரியன. ‘‘உங்கள் வெளிநாட்டுக் கொள்கை எங்கே? சுதந்திரப் பேச்சை ஆதரிக்கும் உங்கள் நாட்டின் மெளனமே எம் மீதான ஆக்கிரமிப்பாகும். அரபு தேசத்தை தவறாக பிரதிநிதித்துவம் செய்யும் உங்களால்தான் இந்த நிலை. நீங்கள் தான் கதையாடலை கையில் வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் தான் ஐ.நா.வின் சொந்தக்காரர். நீங்கள் தான் ஹொலிவூட்டின் சொந்தக்காரர். நீங்கள்தான் ஊதுகுழல்களை வைத்திருக்கின்றீர்கள். இவற்றில் எங்கள் குரல் எங்கே?’’ என்பது அவரது கேள்விகளாகும்.
மேற்குலக ஊடகங்களின் மற்றுமொரு போக்கு இஸ்ரேலின் இன வெறித் தாக்குதல்களை, இன அழிப்பை, மற்றும் யுத்த மீறல்களை ஹமாசின் தாக்குதல்களுடன் சமப்படுத்தி பேசுவதாகும். அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் செய்ததும் தப்பு – இவர்கள் செய்ததும் தப்பு என்பது இவர்களது நிலைப்பாடு. சமநிலையாளர்கள், புறவயப்பட்ட ஊடகவியலாளர்கள் எனக் கருதும் பலர் இந்த நோக்கு நிலையைக் கொண்டவர்கள். இது மிகவும் நீதியை , சமாதானத்தை, பலஸ்தீனர்களின் உரிமையை, அவர்களது போராட்டங்களின் மதிப்பை அசட்டை செய்யும் ஒரு நிலைப்பாடாகும். இதனாலேயே பீபீசி, சீஎன்என், ஸ்கைநியுஸ் போன்ற ஊடகங்கள் பிரிட்டனுக்கான பலஸ்தீனியத் தூதுவரை நேர்கண்ட போதெல்லாம் கேட்ட முதன்மையான கேள்வி நீங்கள் ஹமாசின் தாக்குதலை நிராகரிக்கின்றீர்களா என்பதாகும்.
அக்கேள்விக்கு பலஸ்தீனத் தூதுவர் ஹூஷாம் சம்லத் வழங்கிய பதில் மேற்கு ஊடகங்களுக்கு வழங்கிய சாட்டையடியாகவும் துவேச-, ஆதிக்க-மூர்க்கம் கொண்ட காலனித்துவ ஊடகங்களை எவ்வாறு அபகரிப்புக்கு, இன வெறிக்கு உட்பட்டவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமுமாகும்.
அவர், தான் ஹமாஸின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளாத போதும், அதனை அவர் வெளிப்படுத்தவில்லை. அதற்காக அவர் எடுத்துக்காட்டும் தர்க்கம் ‘‘இந்தக் கேள்வியை பல தடவை கேட்கின்றார்கள். எல்லோரும் கேட்கின்றார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஹமாஸின் தாக்குதலை நாம் ஆமோதிப்பதில்லை என்று. ஆனாலும், மீண்டும் மீண்டும் கேட்கின்றார்கள். ஆனால் இதே கேள்வியை உண்மையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிடம் யாரும் கேட்பதில்லை. கேள்வி நியாயமானது – ஆனால், நோக்கம் தவறானது. இத்தகைய கேள்விகளை தெரிவு செய்வது இஸ்ரேலுக்கு சாதகமாக செய்தியை கட்டமைப்பதற்காகும். அடக்குபவரின் ஸ்தானத்திலிருந்து, அடக்கப்படுபவர்களை இலக்கு வைத்து மேற்கின் அவதானத்தை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது மேற்குலக ஊடகம்.
ஹமாஸ் தாக்குதல் எப்போது இடம்பெறுகின்றதோ அப்போது மத்திரம் மேற்குலக ஊடகங்கள் ஹமாஸை முதன்மைப்படுத்திய வினாக்களை மேற்கிளப்புகின்றன. மொத்தச் செய்திகளின் போக்கும் அதனை ஒட்டியதாகவே உள்ளன. பெரும்பாலான நேர்காணல்கள் பலஸ்தீனிய மக்களின் வேதனைக்குரலை அலட்சியம் செய்கின்றன. சுதந்திரமாக நடமாட, வாக்களிக்க, வேலை செய்ய, வாழ, சொத்துக்களை வைத்திருக்க உரிமை மறுக்கப்படுவதை முதன்மைப்படுத்தியதாக அமைவதில்லை. அமெரிக்காவில் வாழும் அரசியல் விமர்சகர் ஓமர் பதன் தனது எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்திய ஒரு விடயம் மேற்கு ஊடகங்களின் வஞ்சகத் தனத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வரலாற்றில் முதலில் பலஸ்தீனம் அபகரிக்கப்பட்டது, ஆக்கிரமிப்பட்டது. இரண்டாவது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தி, தண்டித்து மக்களை வெளியேற்றி ஊடுருவியது. மூன்றாவது பலஸ்தீனம் வன்முறை மூலம் பதில் வழங்கியது. நான்காவது இஸ்ரேல் படுகொலை மூலம் பதிலளித்தது. இந்த வரிசையில் மூன்றாவது இடம்பெற்றதை மாத்திரம் முன்நிறுத்தி அறிக்கையிட்டால் அது தவறான வழிக்கு இட்டுச்செல்வதாகும்.
மேற்கின் ஊடக கட்டமைப்பை காத்திரமாக எதிர்கொண்ட மற்றுமொரு சம்பவம் சீஎன்என் நேர்காணல் ஒன்றில் இடம்பெற்றது. அரபு ஊடகவியலாளர் முஹம்மத் அல்காரிடம் சீஎன்என் ஊடகவியலாளர் ‘‘உங்களுக்கு ஆதரவாக உலகம் பூராகவும் நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனுமதிக்கின்றீர்களா’’ எனக் கேட்டார்.
அதற்கு அவர் ‘‘எனதும் என் குடும்பத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகளையும் வன்முறையையும் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா’’ எனக் கேட்டார். சீஎன்என் செய்தியாளர் சற்று மெளனமானார். மீண்டும் ஆசுவாசப்பட்டு கேள்வி கேட்ட சீஎன்என் செய்தியாளருக்கு இனப் பேரழிப்புக்கு எதிரான போராட்டங்கள் அவ்வாறு அமையக்கூடும் என்றார்.
இஸ்ரேலில் என்ன நடக்கின்றது? ஹமாஸின் தாக்குதல் நியாயமானதா? இஸ்ரேலிய சிறுவர்கள் கொல்லப்படுவது நியாயமானதா? என தெரிவு செய்யப்பட்ட வினாக்களைத் தொடுப்பதை காலனித்துவ ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவே கருத வேண்டியுள்ளது. இத்தகைய போக்கினை பிரதான விவாதத்தை திட்டமிட்டு திசை திருப்பும் செயற்பாடாக கருத வேண்டியுள்ளது. இந்தப் பிரதிபலிப்பே மேற்குலகின் கொள்கையாக்கங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது. அதனாலேயே, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் டொமினிக் ரொப் இருபது பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டபோது ‘‘ஐக்கிய இராச்சியம் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜெருசலத்திலும் காசாவிலும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். சகல தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும்’’ எனக் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். பலஸ்தீன் உயிர்கள் பறிக்கப்படும்போது பட்டும்படாமலும் வருத்தம் தெரிவிக்கும் இத்தகைய போக்கு மேற்குலக ஊடகங்களின் கதையாடலுடன் மிகவும் பொருந்திச் செல்கின்றது.
பீபீசி போன்ற ஊடகங்களின் இஸ்ரேலிய ஆதரவு அறிக்கையிடல் ஊடகத்தில் புறவயப்பட்ட நிலை (Objectivity) என்பதை முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கின்றது. பீபீசி தொகுப்பாளர் இஸ்ரேலை ‘அடக்குமுறை நாடு’ என்றும், ‘இனவெறி கொண்ட நாடு’ என்றும் சொல்வது நியாயமானதா என்றார். இதற்குப் பதிலளித்த அம்னெஸ்டி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கல்மார்ட் “ அது உண்மைதான். இஸ்ரேல் ஒரு இனவெறி கொண்ட நாடு’’ என்றார். பீபீசி தொகுப்பாளர் இஸ்ரேலை சுத்தப்படுத்த எடுத்த பிரயத்தனம் பீபீசி போன்ற ஊடகங்களின் பக்கஞ்சாராமையை கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் Novara Media வின் செய்தி விவரணங்கள் பல பீபீசியின் இரட்டை வேடத்தை படம்பிடித்துக் காட்டிவருகின்றன. – Vidivelli