இஸ்ரவேலை கும்பிடும் மேற்கும் மேற்கை கும்பிடும் அரபு நாடுகளும்

0 289

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஏன் இஸ்­ரவேல் இவ்­வ­ளவு துணிச்­ச­லுடன், சர்­வ­தேசப் போர் நிய­தி­க­ளையும் மீறிக்­கொண்டு மிரு­கத்­த­ன­மாகப் பலஸ்­தீ­னர்­களை கொன்று குவிக்­கி­றது? போருக்­குக்­கூட சர்­வ­தேச ரீதியில் சில விதிகள் இருக்­கின்­றன. உதா­ர­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களை தாக்­கு­வது மனி­தா­பி­மா­ன­மற்ற செயல் என்­பதும் அக்­கட்­டி­டங்­களைத் தாக்­கு­வதைத் தவிர்க்­க­ வேண்டும் என்­பதும் சர்­வ­தேச நியதி. ஆனால் அவை எது­வுமே இஸ்­ர­வே­லுக்கு விதி­வி­லக்­கல்ல என்­பதை காசாவில் அது நடத்தும் பேயாட்டம் தெளி­வாக்­கு­கி­றது. இந்த நிலையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி எடுத்த எடுப்­பி­லேயே ஹமாஸை கடைந்­தெ­டுக்­கப்­பட்ட ஒரு தீங்கு என வரு­ணித்து அதே மூச்சில் இஸ்­ர­வே­லுக்கு அமெ­ரிக்­காவின் பூரண ஆத­ரவு என்றும் உண்டு எனப் பறை­சாற்றி அதனை உறு­திப்­ப­டுத்­து­மாறு அமெ­ரிக்­காவின் வெளி­வி­வ­காரச் செய­லா­ளரை உட­ன­டி­யாக இஸ்­ர­வே­லுக்கு அனுப்பினார். அவரைத் தொடர்ந்து ஜனா­தி­ப­தியே அங்கு விரைந்து சென்று அந்­நாட்டின் பிர­த­ம­ரையும் அமைச்­சர்­க­ளையும் இரா­ணுவத் தலை­வர்­க­ளையும் சந்­தித்து அமெ­ரிக்­காவின் ஆத­ரவை மேலும் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

பின் ஏதோ சாட்­டுக்­காக வழி­யிலே அர­பு­நா­டு­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்து முகஸ்­து­திக்­காக இரண்டு ஆறுதல் வார்த்­தை­களை கூற நினைத்­ததை ராஜ­தந்­திரம் என்­பதா கபட நாடகம் என்­பதா? அவரைச் சந்­திக்க மஹ்மூத் அப்பாஸ் தலை­மையில் சில அரபுத் தலை­வர்கள் மறுக்­கவே உட­ன­டி­யாக பிரித்­தா­னியப் பிர­தமர் எகிப்­துக்கு விரைந்து அதன் தலைவர் அல்-­சி­சியைச் சந்­தித்துச் சில ஆறுதல் வார்த்­தை­களைக் கூறி­யபின் அதே வீச்சில் இஸ்­ர­வே­லுக்கும் சென்று நெத்­த­னி­யா­குவைச் சந்­தித்து பிரித்­தா­னி­யாவின் பூரண ஆத­ரவை தெரி­வித்­ததும் என்ன பம்­மாத்தோ? உண்­மையைச் சொல்­வ­தானால் அமெ­ரிக்­காவும் அதன் மேற்­கு­லக நேச நாடு­களும் இஸ்­ர­வேலின் பிடிக்­குள்ளே சிக்­கி­யுள்­ளன. குறிப்­பாக அமெ­ரிக்கா இஸ்­ர­வே­லர்­களின் பிடிக்குள் இருக்­கி­றது என்­பதை ஒரு முறை இஸ்­ர­வேலின் முன்னை நாள் தலைவர் இஸ்தாக் ராபினே வெளிப்­ப­டை­யாகக் கூறி­யுள்ளார். சுருக்­க­மாகச் சொன்னால் அமெ­ரிக்­காவும் மேற்­கு­லக நாடு­களும் இஸ்­ர­வேலை கும்­பி­டு­கின்ற ஒரு சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அந்த நிலையில் மேற்­கு­லகை அரபு நாடுகள் கும்­பி­டு­வதை எவ்­வாறு விளங்கிக் கொள்­வதோ? இதைத்தான் இக்­கட்­டுரை ஆராய விளை­கின்­றது.

முதலில் ஓர் உண்­மையை யாவரும் புரிந்­து­கொள்­ளுதல் வேண்டும். அதா­வது அமெ­ரிக்­காவின் அர­சியல் தலை­வர்­களோ ஐரேப்­பாவின் அர­சியல் தலை­வர்­களோ பிரித்­தா­னி­யாவின் அல்­லது அவுஸ்­தி­ரே­லி­யாவின் அர­சியல் தலை­வர்­களோ யூத­ மக்­க­ளையும் இஸ்­ர­வே­லையும் பகைத்­துக்­கொண்டு ஆட்­சியில் அமர முடி­யாது. இதுவே இஸ்­ர­வேலின் தலைக்­க­னத்­துக்கு முக்­கிய காரணம். இந்த நிலையை இஸ்­ர­வே­லுக்குக் கிடைத்த ஒரு மகத்­தான வெற்­றி­யென்றும் கூறலாம். இது எப்­படி ஏற்­பட்­டது என்­பதை விளங்கிக் கொண்டால் பலஸ்­தீனம் கால­வோட்­டத்தில் இஸ்­ர­வேலின் முற்­று­கைக்­குள்­ளாகி அங்கே அர­பு­ மக்கள் அடி­மை­க­ளா­கவே வாழ­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டுவர் என்­ப­தையும் புரிந்து கொள்­ளலாம். அந்த நிலையில் பலஸ்­தீனம் என்ற ஒரு நாடே இருக்­குமா என்­பதும் சந்­தேகம். யூத­ மக்­க­ளுக்கு ஐரோப்பா பல நூற்­றாண்­டு­க­ளாக இழைத்த அநீ­திக்கும் கொடு­மை­க­ளுக்குப் பிரா­யச்­சித்தம் தேடும் முக­மாக இப்­போது பலஸ்­தீ­னத்­தையும் அதன் அரபு மக்­க­ளையும் இஸ்­ர­வே­லுக்குப் பலி­கொ­டுக்க நினைத்­துள்­ளன

“நில­மில்­லாத மக்­க­ளுக்கு
மக்­க­ளில்­லாத நிலம்”
இஸ்­ரயீல் சங்வில் என்ற யூத எழுத்­தாளன் அறி­மு­கப்­ப­டுத்­திய மேற்­கூ­றிய சுலோ­கமே பின்னர் சியோ­னி­சர்­களின் பிரச்­சாரச் சூத்­தி­ர­மாகி இறு­தியில் 1948 இல் பலஸ்­தீ­னத்தை இரு கூறாக்கி இஸ்­ரவேல் என்ற ஒரு நாட்டை பிரித்­தா­னி­யரின் சூழ்ச்­சி­யோடு உல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அப்­பொ­ழுது அங்கு வாழ்ந்த பலஸ்­தீன மக்­க­ளைப்­பற்றி இஸ்­ர­வேலின் முத­லா­வது ஜனா­தி­பதி செய்ம் வைச்­ம­னிடம் ஒருவர் வின­வி­ய­போது அவர், “அங்கே பிர­யோ­ச­ன­மற்ற சில ஆயி­ரக்­க­ணக்­கான நீக்­ரோக்கள் வாழ்­கின்­றார்கள்” என்று கூறி­ய­தாகப் பதி­ல­ளித்த தகவல் ஒன்­றுண்டு. ஆபி­ரிக்கக் குடி­களை வெறும் காட்­டு­மி­ராண்­டிகள் என்று கரு­திய ஐரோப்­பியர் பலஸ்­தீன மக்­க­ளையும் அவ்­வாறு விப­ரித்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. இஸ்­ர­வேலின் இன்­றையப் பிர­தமர் நெத்­த­ன்யா­குவும் காஸாவில் வாழும் மக்­களை ஆங்­கி­லத்தில் சவேஜஸ் (காட்­டு­மி­ராண்­டிகள்) என்று அண்­மையில் வரு­ணித்­தமை அதே மனப்­பான்­மையை எடுத்­துக்­காட்­ட­வில்­லையா? நாலா­யிரம் ஆண்­டு­க­ளாக ஒரு மகத்­தான நாக­ரி­கத்தின் சந்­த­தி­க­ளாக வாழும் பலஸ்­தீ­னர்­களைப் பூண்­டோடு அழிப்­ப­தற்கும் அது முடி­யா­த­பட்­சத்தில் அவர்­களில் பெரும்­பா­லா­னோரை துரத்­தி­ய­டித்­தபின் எஞ்­சி­ய­வர்­களை அடி­மை­க­ளாக்கி அவர்­களின் நிலத்தை இஸ்­ர­வே­லுடன் இணைப்­ப­தற்கும் அமெ­ரிக்­கா­வி­னதும் மேற்கு நாடு­க­ளி­னதும் ஒத்­தா­சை­யுடன் அரங்­கேறும் இந்த நாட­கத்தைப் பார்த்து ஒப்­பா­ரி­வைக்கும் அர­பு­மக்­களின் தலை­வர்கள் அதே அமெ­ரிக்­கா­வுக்கும் மேற்கு நாடு­க­ளுக்கும் கும்­பி­டு­போட்டு வாழ்­வதை என்­ன­வென்று வரு­ணிப்­பதோ?

இஸ்­ர­வேலின் சாதனை
இஸ்­ரவேல் என்ற ஒரு நாடு கிடைத்­த­வுடன் உலகிலுள்ள யூத இனத்­தவர் எல்­லா­ருமே அங்­கு­சென்று குடி­யே­ற­வில்லை. இன்­றைய உலகின் யூத­மக்­களில் 46 சத­வீ­த­மா­னோரே அங்கு வாழ்­கின்­றனர். ஆகவே பெரும்­பான்­மை­யான யூதர்கள் இஸ்­ர­வே­லுக்குள் குடி­யேறும் உரிமை இருந்தும் வெளி­நா­டு­க­ளி­லேதான் வாழ்­கின்­றனர். அவர்­களுள் 40 சத­வீ­த­மானோர் அமெ­ரிக்­கா­விலும் எஞ்­சிய 14 சத­வீ­தத்­தினர் ஏனைய ஐரோப்­பிய நாடு­க­ளிலும் வதி­கின்­றனர். ஆனால் அந்த நாடு­களின் அர­சி­ய­லிலும் அவற்றின் செய்தி ஊட­கங்­க­ளிலும் கல்வி நிலை­யங்­க­ளிலும் நிறைந்த செல்­வாக்­குள்ள ஓர் இன­மாக அவர்கள் வாழ்­வ­துதான் இஸ்­ர­வே­லுக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம். அதை இஸ்­ர­வேலின் திட்­ட­மிட்ட ஒரு சாதனை என்றும் கூறலாம். உதா­ர­ண­மாக, அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பேரா­சி­ரி­யர்­க­ளாகப் பணி­யாற்றும் எவ­ரா­வது இஸ்­ர­வே­லுக்கு எதி­ரான ஆய்வுகளை வெளி­யிட்டால் அவர்­களின் பதவி உயர்­வுக்கு ஏன் அவர்­களின் பத­விக்கே அது இடைஞ்­ச­லாகும். அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் அந்த நிலை உண்டு. அதே­போன்று அங்­குள்ள ஊட­கங்­க­ளையும் யூதர்கள் தமது கைப்­பி­டிக்குள் வைத்­துள்­ளனர். அத­னா­லேதான் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இஸ்­ரவேல் செய்யும் பாத­கங்கள் மூடி­ம­றைக்­கப்­பட்டு பலஸ்­தீனப் போரா­ளிகள் செய்யும் வன்­செ­யல்கள் பூதா­க­ரப்­படுத்தப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செல்­வாக்கே அமெ­ரிக்­கா­வையும் ஐரோப்­பிய அர­சு­க­ளையும் இஸ்­ர­வே­லுக்குச் சார்­பாக இயங்க வைக்­கின்­றது. அந்தச் செல்­வாக்­குதான் அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளையும் இஸ்­ர­வே­லுக்குக் கும்­பி­டு­போ­டவும் வைத்­துள்­ளது. இத­னுடன் அரபு நாடு­களை ஒப்­பி­டும்­போது ஏற்­படும் வேத­னையை இனி விளக்­குவோம்.

அரபு நாடு­களின் ஒப்­பாரி
எந்­தவோர் இனமும் தன்­னைத்­தானே மாற்றிக் கொள்­ளா­த­வரை இறை­வனும் அதனை மாற்­ற­மாட்டான் என்­பது புனித குர்­ஆனின் போதனை. இறைவன் யாரையும் ஆட்­டு­ப­வ­னல்ல. மாறாக ஆடு­பவன் உதவி கேட்­கும்­போது அதனை வழங்­கு­பவன் இறைவன். எனவே ஆட்டம் மனி­தனின் உற்­பத்தி. அதற்­கான அறிவை இறைவன் மனி­த­னுக்கு வழங்­கி­யுள்ளான். எனவே ஆட்­டு­விப்­பவன் இறை­வ­னல்ல. மாறாக ஆடு­பவன் கேட்­கும்­போது உதவி வழங்­கு­ப­வனே இறைவன். நபிகள் பெரு­மா­னாரின் வாழ்க்கை முழு­வதும் இந்த உண்­மைக்கு ஒப்­பற்ற ஓர் எடுத்­துக்­காட்டு. அவ­ருக்குப் பிறகு அந்தப் போத­னையின் தத்­து­வத்தைச் சரி­யாக விளங்­கிக்­கொண்டு தமது உலக வாழ்க்­கை­யையும் இலட்­சி­யத்­தையும் மாற்­றி­ய­மைத்­த­த­னா­லேதான் அன்­றைய முஸ்­லிம்கள் உலகின் ஒப்­பற்ற ஒரு வல்­ல­ரசின் பிர­ஜை­க­ளாகி ஒரு மகோன்­னத நாக­ரி­கத்­தையும் படைத்து மற்­ற­வர்­க­ளையும் முஸ்லிம் உல­கைப்­பார்த்து வியக்க வைத்­தனர். என்­றைக்கு இறை­வனை ஆட்­டு­ப­வ­னாகக் கருதி தாம் அவனால் ஆட்­டப்­ப­டு­ப­வர்கள் மட்­டுமே என்று குர்­ஆனின் தத்­து­வத்தை தலை­கீ­ழாக விளங்கத் தொடங்­கி­னரோ அன்று தொடங்­கி­யது முஸ்­லிம்­களின் வீழ்ச்சி. இது ஒரு சோக­மான வர­லாறு. அதை விப­ரிப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல. ஆனால் அந்த வீழ்ச்­சியின் ஓர் அடை­யா­ளமே இன்று அமெ­ரிக்­கா­வுக்கும் மேற்­கு­ல­குக்கும் அர­புத்­த­லை­வர்கள் கும்­பி­டு­போ­டு­வது.

அது ஒரு­பு­ற­மி­ருக்க இன்­றைய அரபு நாடு­களின் ஆட்­சித்­த­லை­வர்­களுள் பொது­வாக எல்­லா­ருமே மக்­களால் தெரி­யப்­பட்­ட­வர்­க­ளல்ல. சில நாடு­களில் பெய­ருக்­காகத் தேர்­தல்கள் நடை­பெற்­றாலும் அவை ஜன­நா­யக அடிப்­ப­டையில் மக்­களால் சுதந்­தி­ர­மாகத் தெரி­யப்­பட்ட தலை­வர்­களை உரு­வாக்­க­வில்லை. ஆதலால் அத்­த­லை­வர்­க­ளுக்கு வெளி­நா­டு­களின் அதிலும் குறிப்­பாக அமெ­ரிக்­காவின் ஆத­ரவு தேவை. அமெ­ரிக்­காவைப் பகைத்­துக்­கொண்டு எந்த அர­பு ­நாட்டுத் தலை­வனும் நிலைத்­தி­ருக்க முடி­யாது. அன்­றைய சதாம் ஹுஸைனும் முஅம்மர் கதா­பியும் இதற்குச் சிறந்த எடுத்­துக்­காட்­டுகள். எகிப்தின் அரபு வசந்தம் தோற்­ற­தற்குக் காரணம் அமெ­ரிக்கா பழ­மை­வா­தி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­யதே. சுமார் 800 உயிர்­களைக் கொன்று அல்-­சிசி பத­விக்­கு வந்­ததும் அமெ­ரிக்­காவின் ஆத­ர­வி­னா­லேயே. எனவே அமெ­ரிக்கா சொல்­வ­தற்­கெல்லாம் தலை­யாட்டும் பொம்­மை­க­ளையே அரபு நாடுகள் தலை­வர்­க­ளாகக் கொண்­டுள்­ளன. பலஸ்­தீனப் பிரச்­சி­னையில் சாதா­ரண அரபு மக்­களின் நிலைப்­பாடு வேறு. அர­புத்­த­லை­வர்­களின் நிலைப்­பாடோ வேறு. அமெ­ரிக்கா இஸ்­ர­வே­லுக்குக் கும்­பி­டு­போட அமெ­ரிக்­கா­வுக்கு அர­புத்­த­லை­வர்கள் கும்­பி­டு­போ­டு­வதன் அந்­த­ரங்கம் இதுதான்.

மேற்கின் பொது­ஜன அபிப்­பி­ரா­யமும் அரபு நாடு­களும்
மேற்கு நாடு­களின் பொது­ஜன அபிப்­பி­ரா­யத்தை தனக்குச் சார்­பாக இஸ்­ரவேல் சம்­பா­தித்­துள்­ள­துபோல் அரபு நாடுகள் சம்­பா­திக்­க­வில்லை. குறிப்­பாக அம­ரிக்­காவின் ஊட­கத்­து­றை­யிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் மற்றும் அந்­நாட்டின் கேந்­திர ஸ்தாப­னங்­க­ளிலும் எவ்­வாறு யூத­மக்கள் தமது செல்­வாக்கைப் பதித்­துள்­ளனர் என்­பதை மேலே குறிப்­பிட்டோம். அதிலே ஒரு துளி­யைக்­கூட அரபு நாடுகள் சம்­பா­திக்­க­வில்லை. ஏனெனில் அதன் முக்­கி­யத்­து­வத்தை அரபு நாட்டுத் தலை­வர்கள் உண­ரத்­த­வ­றி­ய­மையே. உதா­ர­ண­மாக, 1980களில் லண்­டனின் பிர­பல புதி­னப்­பத்­தி­ரிகை நிறு­வ­ன­மொன்று விற்­ப­னைக்கு வந்­தது. அந்த நிறு­வ­னத்தை வாங்கி அப்­பத்­தி­ரி­கையை முஸ்­லிம்கள் தொடர்ந்து வெளி­யிட வேண்டும் என்ற நோக்கில் பல புத்­தி­ஜீ­விகள் எண்­ணெய்­வள நாடொன்றை அணுகி வலி­யு­றுத்­தினர். அந்த நாட்டுத் தலை­மைத்­து­வத்­துக்கு அதன் முக்­கி­யத்­துவம் விளங்­கா­ததால் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது. இவ்­வா­றான ஒரு நிலைப்­பாடு அரபு நாடு­க­ளி­டையே நில­வும்­போது எப்­படி மேற்கு நாடு­களின் பொது­ஜன அபிப்­பி­ரா­யத்தை தம்­வ­சப்­ப­டுத்­தலாம்?

மேற்­கு­லகின் மதத் தலை­வர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் புத்­தி­ஜீ­வி­களும் பொது அரங்­கு­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒரு கருத்து மேற்கின் நாக­ரிகம் யூத-­கி­றித்­தவ விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் உரு­வா­னது என்­ப­தாகும். ஆனால் யூதர்­களும் கிறித்­த­வர்­களும் முஸ்­லிம்­களும் நபி இபு­றா­ஹீமின் வழித்­தோன்­றல்கள். அவ்­வா­றாயின் ஏன் அந்த நாக­ரி­கத்தை ஆபி­ர­காமின் விழு­மி­யங்­களால் உரு­வா­ன­தென அழைக்க முடி­யாது? இக்­கேள்­வியை பல மகா­நா­டு­களில் இக்­கட்­டு­ரை­யாளர் எழுப்­பி­யுள்ளார். மௌனமே அக்­கேள்­விக்கு விடை­யா­னது. எந்த அள­வுக்கு முஸ்லிம் உலகை மேற்கு தள்­ளி­வைத்­துள்­ளது என்­ப­தற்கு இதை­வி­டவும் ஒரு சான்று வேண்­டுமா? ஒட்­டு­மொத்­தத்தில் மேற்கு நாடு­களின் பொது­ஜன அபிப்­பி­ரா­யத்தை தமக்கு ஆத­ர­வாகத் திருப்­பும்­வரை அந்த நாடு­களின் தலை­வர்­களை கும்­பிட்டு வாழ்­வ­தை­விட வேறு வழி இல்லை. இது ஒரு துர­திஸ்டம். இந்த அவ­லமே இன்று பலஸ்­தீனப் பிரச்­சி­னை­யிலும் அரபு நாட்டுத் தலை­வர்­களின் கையறு நிலையை உணர்த்­து­கின்­றது.

மீண்டும் ஓர் அல்-­ந­கபா அல்­லது அழிவி
1948 போரில் இஸ்­ர­வேலின் பயங்­க­ர­வா­திகள் பலஸ்­தீன மக்­களை துரத்­தி­ய­டித்­ததை முத­லா­வது நகபா அல்­லது அழிவி என வர­லாறு பெய­ரிட்­டுள்­ளது. இப்­போது காசாவில் நடக்கும் இனச்­சுத்­தி­க­ரிப்பு அவர்­களின் இரண்­டா­வது அழி­வியை தோற்­று­வித்­துள்­ளது. அமெ­ரிக்­காவும் அதன் மேற்கு நேச­நா­டு­களும் இரண்டாவது அழிவிக்குப் பூரண ஆதரவு. ஏதோ பலஸ்தீனர்கள்மேல் கருணை காட்டுவதாக உலகத்தை ஏமாற்ற 20 பொதிவண்டிகளில் உணவும் மருந்துவகைகளும் குடிநீரும் அனுப்பியுள்ளார்களாம். இது எந்த மூலைக்குப் போதுமோ? காசா மக்களின் மொத்தத் தேவையின் 2 சதவீதமே இந்தப் பெருங்கொடை. இது என்ன பம்மாத்தோ? அதேவேளை இஸ்ரவேலினதும் உக்ரெய்னினதும் பாதுகாப்புக்காக 105 பில்லியன் டொலர்களை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகிறது. அதுமட்டுமா? 2020 வரை இஸ்ரவேல் மட்டும் 146 பில்லியன் டொலர்களை அமெரிக்க நிதியுதவியாகப் பெற்றுக் கொண்டுள்ளது. இது அமெரிக்க வரியிறுப்பாளர்களின் பணம். அமெரிக்கா எவ்வாறு இஸ்ரவேலின் வலைக்குள் சிக்கியுள்ளது என்பதற்கு இதைவிடவும் ஒரு சான்று வேண்டுமா?

மக்­களின் ஆத­ர­வில்­லாமல் அர­சோச்சும் அரபு நாடு­களின் தலை­மைத்­து­வங்கள் நிலைத்­தி­ருக்­கு­மட்டும் அத்­த­லை­மைகள் அமெ­ரிக்­கா­வுக்குக் கும்­பி­டு­போட்டுக் கொண்டே இருக்கும். அதனால் காசா முத­லிலும் முழு பலஸ்­தீ­னமும் பின்­னரும் அகன்ற இஸ்­ர­வே­லாக மாறு­வதை தவிர்க்க முடி­யாது. அவ்­வாறு மாறும்­போது அங்கே பலஸ்­தீ­னர்கள் இருக்­க­மாட்­டார்கள். ஏதோ உலகைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்­களில் ஒரு சிறு பகு­தி­யினர் அங்கு வாழ நேரிட்டால் அவர்கள் இஸ்­ர­வேலின் அப்­பார்தைற் என்ற ஒரு இன­வெறி ஆட்­சி­யி­லேதான் வாழ்­வார்கள். ஆகவே பலஸ்­தீ­னத்­துக்­கான போராட்டம் வெற்­றி­பெற வேண்­டு­மானால் அது வேறொரு வடிவம் பெற­வேண்டும். அது என்ன வடிவம் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே இக்கட்டுரை விட்டுவைக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.