1990 ஆம் ஆண்டில் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த வாரத்துடன் சரியாக 33 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
வடக்கிலுள்ள முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என்பதை சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர். அகதிகளாக்கப்பட்டவர்கள் என்றோ உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்த முடியாது. முஸ்லிம்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த வரலாற்றுத் துயரத்தினை இனச்சுத்திகரிப்பு என்றே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்திற்கு தமிழர்களாக உள்ள பொதுமக்கள் காரணம் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். குறித்த காலப்பகுதியில் உத்தியோகபூர்வமாகவோ அல்லது முறையற்ற விதத்திலோ அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் இந்த வரலாற்றுத் துயரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஆவர். 1983 தமிழ் மக்களுக்கு ஒரு கறுப்பு ஆண்டு என்பதைப்போல 1990 முஸ்லிம்களுக்கு ஒரு கறுப்பு ஆண்டாகும். 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட சகல தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு தீர்வை நோக்கிப் பயணிப்பதே காலத்தின் தேவையாகும்.
புதிய தலைமுறை அறியாத பல துயரங்களை கடந்தே வடக்கின் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். பணம், நகை என சகல சொத்துக்களையும் சூறையாடி வெறுங்கையோடு அனுப்பப்பட்டார்கள். அரசாங்கம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற சின்னஞ்சிறிய உலர் உணவுப்பொதியில் தங்கி வாழும் நிலைமைதான் அனைவருக்கும் இருந்தது. பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என அனைவருமே வார்த்தை வடிவம் கொடுக்க முடியாத அளவுக்கு சிரமப்பட்டார்கள் என்பவற்றை மறக்கவே முடியாது. தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும் பலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் போது 1990 இல் வட புல முஸ்லிம்களும் எவ்வாறு இந்த அகதி வாழ்க்கையை அனுபவித்திருப்பார்கள் என்ற காட்சிகள் மனக்கண் முன் வந்து போகின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பலவந்த வெளியேற்றம் இடம்பெற்று 31 ஆண்டுகள் கடந்த பிறகும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தம்மை மீளக்கட்டியெழுப்ப முடியாத நிலையில் பிறரில் தங்கியிருக்க வேண்டிய நிலையிலேயே வாழ்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மீள்குடியேறுகின்ற முஸ்லிம்கள் மிதக்கும் சமூகமாகவே வாழ்கிறார்கள். அதாவது புத்தளத்தில் கொஞ்ச நாள் யாழ்ப்பாணத்தில் கொஞ்ச நாள் என்றே அவர்களுடைய வாழ்க்கை நகர்கிறது.
மீள்குடியேறிய முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு செல்கின்றபோது அங்குள்ள அதிகாரிகளினால் வெறுப்புப்பேச்சுகளை சந்திப்பது வழமையான ஒன்றாக ஆகியுள்ளது. கடும் நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே தம்மை மீளவும் பதிவு செய்து அப் பகுதியில் வாழ வேண்டியுள்ளது. இவ்வாறு அனுதினமும் சிரமத்துடன் வாழ்கிறார்கள் எனும்போது மீள்குடியேற்றம் அர்த்தமற்றதாக மாறிவிடும்.
வீடுகளை மீளக்கட்டி மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு வழங்குகின்ற திட்டங்களில் பாரிய பின்னடைவு இருக்கிறது. நிலத்துக்கான ஆவணங்கள் எதுவுமே கைவசம் இல்லாத நிலையில் அரசாங்கம் அவர்களிடம் ஆவணங்களை கோருவதும் திட்டங்களை இழுத்தடிப்பு செய்வதும் வேடிக்கையான ஒன்றாகும்.
மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நிலங்களுக்கான பட்டயங்கள் இல்லாமையால் அங்கே நீருக்காக கிணறு தோண்டுதல், மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்களுக்கு பாரிய சிரமங்கள் இருக்கின்றன. மேலும் இராணுவமயமாக்கலால் காணிகளை தமிழர்கள் மாத்திரமின்றி முஸ்லிம்களும் இழந்துள்ளார்கள்.எனினும் வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகத்தனமும் ஒரு காரணமாகும்.
வடக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் கண்டுகொள்வதில்லை. இளம் வயது திருமணங்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் போன்ற விடயங்கள் மீளக்குடியேறிய சமூகத்திலும் மலிந்து விட்டன. சிறந்த கல்வியும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
எனவேதான் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இம்மக்களின் துயர் துடைப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை நோக்கி நகர்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியது முஸ்லிம் தரப்பின் கடமையாகும். இன்றேல் இன்றுபோல் என்றும் மறக்கப்பட்ட சமூகமாகவே வடக்கு முஸ்லிம் சமூகம் இருந்துவிடும்.- Vidivelli