கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முகவுரை
“நிலம் இல்லாத மக்களுக்கு மக்கள் இல்லாத நிலம் வேண்டும்” என்ற உண்மையும் பொய்யும் கலந்த ஒரு கோஷத்தை முன்வைத்து ஆரம்பமாகிய சியோனிசர்களின் நாடு தேடும் படலம் பிரித்தாளும் பிரித்தானியரின் ஆட்சிக்குள் அன்று சிக்கிக் கிடந்த அரபு மக்களின் பலஸ்தீனத்தைப் பங்குபோட்டு இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை 1948ல் வென்றெடுக்க வழிகோலியது. அந்த நாடு சியோனிசர்கள் கேட்டதுபோன்று மக்கள் இல்லாத ஒரு நிலமல்ல. மாறாக, அங்கே இஸ்லாமியரும் கிறித்தவர்களும் யூதர்களும் சிநேக உறவுடன் வாழ்ந்த ஒரு பிரதேசம். அந்தப் பலஸ்தீன நாட்டுக்கு சுமார் நாலாயிரம் வருட வரலாறுண்டு. அந்த வரலாற்றை பூரணமாகப் படிக்க விரும்புபவர்கள் நூர் மசல்கா என்ற வரலாற்றறிஞர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ள பலஸ்தீனம் என்ற நூலையாவது வாசிக்க வேண்டும். சியோனிசர்களின் பிரச்சாரம் எவ்வாறு பலஸ்தீனத்தின் உண்மையான வரலாற்றை மூடிமறைத்து வெறும் கட்டுக்கதைகளையும் கற்பனைச் சம்பவங்களையும் கலந்த ஒரு புனைகதையை வரலாறென உலகை நம்பச் செய்துள்ளது என்பதை மசல்காவின் நூல் ஆதாரங்களுடன் விளக்குகின்றது. அவற்றையெல்லாம் விபரிப்பதற்கு இக்கட்டுரை இடமளிக்காது. ஆகவே இன்று காசாவில் நடைபெறும் இஸ்ரவேலின் இனச்சுத்திகரிப்பினை மையமாகவைத்து சில கருத்துக்கனை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது இக்கட்டுரையின் நோக்கம். அதாவது இக்கட்டுரை அங்கு நடைபெறும் நாளாந்தக் கொலைகளையும் அழிவுகளையும் ஒவ்வொன்றாக அலசாமல் அந்தக் கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்த சில உண்மைகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறது.
பலஸ்தீனத்தின் பரிதாபம்
முதலில் ஒரு வரலாற்று உண்மையை வலியுறுத்த வேண்டியுள்ளது. அதாவது நபி மூசாவின் வழித்தோன்றல்களான யூதர்கள் தமது தாயகம் என்று அழைப்பதற்கு நிலப்பிரதேசம் ஒன்றில்லாமல் உலகெலாம் நாடோடிகளாகத் திரிந்தபோது அவர்களை ஒரு தீண்டாச்சாதிகளைப்போல் நடத்தியது ஐரோப்பிய கிறிஸ்தவ உலகு. அந்தக் கொடுமையான வரலாற்றின் இறுதி அத்தியாயமே ஹிட்லரின் ஆட்சி ஜேர்மனியில் மேற்கொண்ட யூத இனச்சுத்திகரிப்பு. ஆனால் அவர்களை எங்கும் வாழ முடியாமல் கிறிஸ்தவ நாடுகள் விரட்டியடித்தபோதெல்லாம் அவர்களுக்குப் புகலிடம் வழங்கி அவர்களை தன்மானத்துடன் வாழவைத்தவர்கள் முஸ்லிம்கள். இஸ்பானியா என்று இன்று அழைக்கப்படும் அன்றைய அந்தலூஸ் நாட்டின் வரலாறு இந்த உண்மைக்குச் சிறந்த ஒரு சான்று. மேலும், சிலுவை யுத்தத்திலே கிறிஸ்தவப்படைகள் பலஸ்தீனத்துக்குள் நுழைந்தபோது அவர்கள் முதலிலே கொன்று குவித்தது அங்கு வாழ்ந்த யூத மக்களையே. அதனாலேதான் பின்னர் சலாஹுதீன் ஐயூபியின் தலைமையில் முஸ்லிம்படை பலஸ்தீனத்தை மீட்கச்சென்றபோது அவர்களை வரவேற்றவர்கள் யூதர்கள். இந்த வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இன்று பலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரவேலுக்கெதிராக நடைபெறும் போராட்டத்தை நோக்கினால் அது அந்நாட்டு அரேபியருக்கும் அல்லது முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே நடைபெறும் போர் எனக்கருதுவது தவறு. எனவே யூதமக்கள் கொலையுண்டதைக் கொண்டாடுவது மிருகத்தனம். நபிபெருமானாரின் ஒரு மனைவி யூதப் பெண் என்பதையும் ஒரு யூதரின் மரண ஊர்வலம் போகும்போது நபிகளார் எழுந்துநின்று மரியாதை செய்ததையும் முஸ்லிம்கள் மறத்தலாகாது.
இன்று நடப்பது உண்மையில் இஸ்ரவேலின் இனவாத அடக்குமுறை ஆட்சிக்கும் அடக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு விடுதலைப்போராட்டம். சுருக்கமாகக் கூறினால் தென்னாபிரிக்காவில் அன்று நிலவிய ‘அப்பார்தைற்’ அல்லது நிறவெறி ஆட்சியே இன்று இஸ்ரவேலில் இனவெறி ஆட்சியாக நடைபெறுகின்றது. அந்த நாட்டில் வாழும் அரபு மக்கள் படும் இன்னல்களை மேற்குலகு கண்டும் காணாததுபோல் இருப்பது இஸ்ரவேல் ஆட்சியினை ஆமோதிப்பது போல் இல்லையா? அந்த ஆட்சியின் இன்னோர் அங்கமே காசாவில் வாழும் மக்களை மூச்சுத் திணறும்படியான அடக்குமுறைக்கு இஸ்ரவேல் ஆளாக்கியுள்ளமை. அந்த நிலையிலிருந்து தமது மக்களை எப்படியாவது விடுதலையாக்கி சுதந்திர வேட்கையுடன் போராடுவதே ஹமாஸ் இயக்கம். கடந்த சில நாட்களின்முன் அந்த இயக்கம் வீசிய ரொக்கட் குண்டுகள் நூற்றுக்கணக்கான யூத மக்களைப் பலிகொண்டமை வருந்தத்தக்க ஒரு சம்பவமாகினும் அதன் அரசியல் பின்னணியை மறந்துவிட்டு வெறுமனே அப்போராளிகளை பயங்கரவாதிகளென்று பட்டம் சூட்டி முழு காசாவையுமே இஸ்ரவேல் முற்றுகையிட்டு அந்த மக்களை காசாவை விட்டும் முற்றாகத் துரத்தியடிக்கத் துணிந்துள்ளதை இனச்சுத்திகரிப்பு என்று கூறாமல் வேறென்ன பெயர்கொண்டு அழைப்பதோ?
1948ல் உருவாக்கப்பட்ட இஸ்ரவேலின் எல்லையைவிடப் பன்மடங்கால் விஸ்தீரணம் அடைந்துள்ளது இன்றைய இஸ்ரவேல். பலஸ்தீனத்தின் நிலப்பரப்பில் 78 சதவீதத்தை இன்றைய இஸ்ரவேல் தன்வசம் கொண்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் போரினாலும் தீவிரவாதத்தாலும் கைப்பற்றப்பட்ட நிலங்களே. அந்த ஆக்கிரமிப்புக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளது அமெரிக்காவும் அதன் மேற்கு நேசநாடுகளும். அந்தக் கபடத்தை விரைவில் விளக்குவோம். முதலில் இஸ்ரவேலின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதைச் சுருக்கமாக விபரிப்பின் என்றோ ஒரு நாள் முழு பலஸ்தீனத்தையும் தன்வசமாக்கி அங்குள்ள அரபுமக்களை எகிப்துக்கோ அல்லது வேறு அரபு நாடுகளுக்கோ துரத்தியடித்தபின்னர் அல்-அக்சா பள்ளிவாசலையும் ஏனைய இஸ்லாமியச் சின்னங்களையும் அழித்தொழித்து, தனது தலைநகராக ஜெருசலத்தைப் பிரகடனம் செய்து, பலஸ்தீனம் என்ற ஒரு நாடே பூகோளப்படத்திலிருந்து நீக்கப்படுவதற்குப் படிப்படியாகத் தனது காய்களை நகர்த்துவதே சியோனிச இஸ்ரவேலின் அந்தரங்கக் கொள்கை. 1948 இலிருந்து அந்த நோக்கம் படிப்படியாக ஈடேறிவருவதை மத்திய கிழக்கு விவகாரங்களை உன்னிப்பாய் அவதானிப்போர் உணரத் தவறமாட்டார்கள்.
பலஸ்தீனம் என்பது வரலாறு மறந்த ஒரு கதையாகவே ஈற்றில் முடிவடையும். அல்-அக்சா பள்ளிவாசலின் அடித்தளம் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தோண்டப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளமையை உலகம் அறியுமா?
அதனால் அந்தப் பள்ளிவாசல் என்றோ ஒருநாள் தானாகவே சரிந்துவிழுவது நிச்சயம். பலஸ்தீனத்தை இஸ்ரவேல் முற்றாக இணைத்த பின்புதான் நபி ஈசா மீண்டும் பூவுலகுக்கு வருவார் என்ற ஒரு நம்பிக்கை அமெரிக்க கிறிஸ்தவர்களிடையே நிலவுகிறது. எனவே இஸ்ரவேலின் இந்த முற்றுகைக்கு அவர்களின் மறைமுகமான ஆதரவுண்டு என்பதையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். மொத்தத்தில் இஸ்ரவேலின் நில விஸ்தரிப்புக்கும் பலஸ்தீனத்தின் முற்றுகைக்கும் தனது முழு ஆதரவையும் வழங்குகிறது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேசநாடுகளும். அவுஸ்திரேலியாவும் அந்தக் கூட்டணிக்குள் அடங்கும். எனவே மேற்கு நாடுகளின் கபடநாடகத்தை இனி விளக்குவோம்.
மேற்கின் கபடநாடகம்
பலஸ்தீனர்கள் இஸ்ரவேலைத் தாக்கினால் அது பயங்கரவாதம். ஆனால் இஸ்ரவேலின் படைகள் பலஸ்தீனர்களைக் கொன்று குவித்தால் அது தற்காப்பு நடவடிக்கை. 1948லிருந்தே இந்தக் கபடத்தை ராஜதந்நிரம் என்ற போர்வையில் நடத்திவருகிறது மேற்குலகு. பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்ற வார்த்தைகளுக்கு மேற்குலகு கண்டுபிடித்துள்ள வியாக்கியானங்கள் வேடிக்கையானவை. உதாரணமாக, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்கள் விடுதலைதப் போர்வீரர்கள். இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் பலஸ்தீனியர்களோ பயங்கரவாதிகள். அதேபோன்று ரொனால்டு ரேகனின் ஆட்சியில் அன்றொருநாள் அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க தலிபான்கள் போரிட்டபோது அவர்கள் விடுதலைப் போராளிகள். அதே தலிபான்கள் அமெரிக்காவையே ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறச் சொன்னவுடன் அவர்கள் பயங்கரவாதிகளானார்கள். ஆகவே பயங்கரவாதிளென்றால் அவர்கள் அமெரிக்காவையும் அதன் நேசநாடுகளையும் எதிர்ப்பவர்கள் என்பது இங்கே புலப்படவில்லையா? அந்தச் சூத்திரத்தின் அடிப்படையிலேதான் இஸ்ரவேலை எதிர்த்துப் போராடும் பலஸ்தீன ஹமாசும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் வளைகுடாவின் அல்-கைதாவும் பயங்கரவாதக் குழுக்களாகின. பூனை ஒரு சாதுவான பிராணி. ஆனால் அதனை விரட்டிவிரட்டி ஒரு மூலைக்குக் கொண்டு சென்றால் அது தப்புவதற்காக எதிர்த்துப் பாய்வதை விட வேறு வழி இல்லை. அப்படிப் பாய்வதால் அதனை ஒரு கொடிய மிருகம் என்று அழைக்கலாமா?
இதற்கிடையில் இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டின் அத்திவாரமே பயங்கரவாதத்தால் கட்டப்பட்டுள்ளது என்பதையும் அதன் தலைவர்கள் பயங்கரவாதக் குழுக்களின் ஸ்தாபகர்கள் என்பதையும் மேற்கின் வரலாற்றாசிரியர்களும் அதன் செய்தி ஊடகங்களும் தொடர்ந்து மூடிமறைக்கின்றன. உதாரணமாக, ஒரு பலஸ்தீனச் சிறுவன் இஸ்ரவேல் படைவீரர் சென்ற ஒரு ஆயுதம் தாங்கிய வாகனத்துக்குக் கல்லெறிந்தான் என்பதற்காக அச்சிறுவனையே சுட்டுக்கொன்றமை தற்காப்பு நடவடிக்கை. ஆனால் அப்படைவீரர்களை நோக்கி ரொக்கட் வீசும் பலஸ்தீனர்களோ பயங்கரவாதிகள். இன்று காசாவில் நடக்கும் இஸ்ரவேலின் இனச்சுத்திகரிப்பை கடந்த வாரம் நடைபெற்ற ரொக்கட் தாக்குதலில் இருந்து ஆரம்பித்ததாகக் கதை அளக்கும் மேற்கின் செய்தி ஊடகங்கள் அதற்கு முன் இஸ்ரவேல் காசாவில் நடத்திய குண்டுவீச்சுகளைப்பற்றியும் கொலைகளைப்பற்றியும் அழிவுகளைப்பற்றியும் மௌனம் சாதிப்பதேனோ? எங்கே சென்றது இவ்வூடகங்களின் நிதர்சனப் பார்வை? அவ்வாறு நிதர்சனமாக விடயங்களை விபரிக்கும் செய்தித் தாபனங்களையும் அதன் நிருபர்களையும் இல்லாமலாக்குவதும் இந்த நாடகக் கதையின் இன்னோர் அத்தியாயம். அமெரிக்கா அன்று ஈராக்கை குண்டுவீசித் தாக்கியபோது சில உண்மைகளை ஒளிபரப்பிய அல்-ஜெஸீரா நிலையத்தை குண்டுவீசித் தகர்க்கவில்லையா? அதேபோன்றுதான் இன்று காசாவிலிருந்து உண்மைகளைத் தெரிவிக்கும் நிருபர்களையும் இஸ்ரவேல் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதேவேளை அப்பட்டமான பொய்யொன்றை இஸ்ரவேல் இப்போது சிருட்டித்து விட்டிருக்கிறது. அதனை மேற்கு ஊடகங்கள் உண்மையனெ நம்பச்செய்யுமாறு ஓயாது பரப்பிக்கொண்டிருக்கின்றன. அதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இனச்சுத்திகரிப்பை காசா- இஸ்ரவேல் யுத்தம் என்று நாமம் சூட்டி காசா பலஸ்தீனத்தின் பகுதி அல்ல என்றவாறு கதைபுனைந்து காசாவை முற்றாகக் கைப்பற்றினால் அது பலஸ்தீனத்தை கைப்பற்றுவதாகக் கருதமுடியாது என்றவாறு ஒரு புதிய நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. அதைப்பற்றி அரபு ஊடகங்கள் உதாசீனமாய் இருப்பது ஆபத்தானது.
எப்படியாவது இஸ்ரவேல் மேற்கின் பாதுகாவலனாக மத்தியகிழக்கில் விளங்க வேண்டும் என்பதே மேற்குலகின் ராஜதந்திரம். இது முஸ்லிம்களின் உதுமானியப் பேரரசு சின்னாபின்னமாக்கப்பட்டு, தேசியம் என்ற போர்வையில் வெவ்வேறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு, ஐரோப்பிய குடியேற்றவாதிகளின் ஆட்சிக்குள்ளாக்கப்பட்டு, அதன் பின்னர் சுதந்திரம் என்ற ஒரு பம்மாத்து மந்திரத்தின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கியும் அந்நாடுகளைச் சுதந்திரமாக வளரவிடாவண்ணம் தடுக்கும் ஒரு கபடநாடகத்தின் கதைச் சுருக்கம். அந்தக் கதையின் ஆசிரியனும் நாடகத்தின் இயக்குனனும் அமெரிக்கா. இப்போது பலஸ்தீனத்தில் அந்த நாடகத்தின் ஒரு காட்சி அரங்கேறுவதைக் காண்கிறோம். ஹமாஸ் கடைந்தெடுக்கப்பட்ட தீமையின் சுயவடிவம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விபரித்திருப்பது அந்த நாடகத்தின் ஒரு விளம்பரமே. இப்படிப்பட்ட விபரிப்புகள் அமெரிக்காவுக்குப் புதிதல்ல. ஏன், ஜோர்ஜ் புஷ் லிபியாவையும் ஈராக்கையும் ஈரானையும் அவ்வாறு அன்று விபரிக்கவில்லையா? இருந்தும், பலஸ்தீனத்தின் பரிதாபத்தையும் மேற்கின் கபடநாடகத்தையும் அவதானிக்கும் அதே வேளையில் அரபு நாடுகளின் கையறுநிலையையும் நாம் விளங்குதல் வேண்டும்.
ஐயோ அரபு நாடுகளே! ஐயோ முஸ்லிம் நாடுகளே!
ஒன்றை மட்டும் இக்கட்டுரை முதலில் வலியுறுத்த விரும்புகிறது. அதாவது, வெறும் பிரார்த்தனைகளாலும் இறைவனிடம் கையேந்தி ஒப்பாரிவைத்து அலறுவதாலும் பலஸ்தீனத்தின் பரிதாபத்தை நீக்க முடியாது. அதற்குத் தேவை ஆயுதப்பலமும் சாணக்கிய ராஜதந்திரமும். இஸ்ரவேல் உதயமாகிய காலம் தொடக்கம் இன்றுவரை இந்த இரண்டையும் அரபு நாடுகளோ முஸ்லிம் நாடுகளோ சம்பாதிக்கவில்லை. ஐம்பத்தேழு முஸ்லிம் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இன்று அங்கம் வகிக்கின்றன. அவைகளுக்கிடையே உலக விவகாரங்களைப்பற்றிய ஓர் ஒருமைப்பாடான நோக்கு கிடையவே கிடையாது. பெரும்பாலும் மேற்குலகின் பகடைக் காய்களாகவே அவை இயங்குகின்றன.
யானைக்குத் தெரியாதாம் அதன் உண்மைப்பலம். அதேபோன்றுதான் உலக சனத்தொகையில் சுமார் கால்வாசியினர் முஸ்லிம்களென்று பறை அடித்துக்கொண்டு அதன் பலத்தை உபயோகிக்கத் தெரியாத கையறுநிலையை நாம் காண்கிறோம். அதற்குரிய காரணங்களை விளக்குவதானால் ஒரு புத்தகத்தையே எழுதிவிடலாம். ஆனால் ஒரேயொரு விடயத்தைமட்டும், அதுவும் அரபு நாடுகள் தொடர்பாக, அதிலும் இன்று செல்வத்தில் மிதக்கின்ற எண்ணெய்வள நாடுகளை மையமாக வைத்து விபரிக்க வேண்டியுள்ளது.
வறுமையால் பீடிக்கப்பட்டுப் பலமிழந்துகிடந்த அரபுலகுக்கு எண்ணெய் வளம் ஒரு வரப்பிரசாதமாக மாறி 1980க்குப் பின்னர் நினைக்க முடியாத அளவுக்கு செல்வத்தில் மிதக்கத்தொடங்கின. அந்தச் செல்வத்தை சவுதி அரேபியாவும் லிபியாவும் ஈராக்கும் மற்றும் வளைகுடா நாடுகளும் என்ன செய்தன? பளிங்கினால் மாளிகைகளைக்கட்டி நவீனத்துவம் என்ற பெயரில் மேற்கு நாடுகளின் தொழில் வல்லுனர்களைக் கொண்டு உல்லாச புரிகளை உருவாக்கி உலகையே வியக்க வைத்தன. ஆனால் தமது முன்னோர்கள் உருவாக்கிய அறிவுலக சாம்ராஜ்யத்துக்கு ஈடாக ஒரு விஞ்ஞான ஆய்வுகூடத்தையாவது நிறுவி தொழில்நுட்ப வல்லுனர்களை உற்பத்தி செய்து அறிவுலகின் எல்லைக் கோட்டினில் நின்று முஸ்லிம் உலகைப் பலப்படுத்தினார்களா?
ஆனால் அதே காலகட்டத்திலேதான் வறுமைக்குள் வாடிக்கிடந்த சீனமும் இந்தியாவும் எண்ணெய் வளம் இல்லாதிருந்தும் ஒரு புதிய பொருளாதாரப் பாதையில் கால்வைத்து முன்னேறத் தொடங்கின. இன்று அவை இரண்டும் பிராந்திய வல்லரசுகளாக ஆயுத பலத்துடன் திகழ ஏன் அரபு நாடுகள் இன்னும் மேற்கின் அடிவருடிகளாக வலம் வருகின்றன. இந்த நாடுகளின் ராஜதந்திரம் எல்லாம் எப்படி அமெரிக்காவையும் அதன் நேசநாடுகளையும், ஏன் இஸ்ரவேலையும்கூட நண்பர்களாக்கி அவற்றின் உதவியுடன் தமது அரசியல் தலைமைத்துவத்தை காப்பாற்றலாம் என்பதையே மையமாகக் கொண்டுள்ளது. அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து பலஸ்தீனத்தையே இஸ்ரவேலுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இவை கையறுநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. என்ன கேவலமோ? இவர்கள் மத்தியிலா நபிகளார் அவதரித்தார்?
காலஞ்சென்ற யாசிர் அரபாத் அவருடைய பலஸ்தீன விடுதலை இயக்கம் மூன்று விமானங்களைக் கடத்தி குண்டுவீசித் தகர்த்தவேளையில் அவரிடம் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் ‘‘நாங்கள் இஸ்வேலுக்குள் நேரடியாக நுழைய மாட்டோம் அரபு ுக்குள் நேரடியாக நுழைய மாட்டோம் அரபு நாடுகளின் ஊடாகத்தான் நுழைவோம்’’ என்று பதிலளித்தார். ஹமாஸ் போன்ற பலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதைத்தான் செய்யவேண்டுமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.- Vidivelli