எனது முதற்பணி அடுத்த வருடத்துக்கான ஹஜ்கோட்டாவை அதிகரித்துப்பெற்றுக் கொள்வதாகும். சவூதி ஹஜ் அமைச்சு அடுத்த வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஹஜ் கோட்டா அதிகரிப்பை வலியுறுத்துவேன் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதும் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லிம் சமய விவகாரங்கள் கடந்த இரண்டு மாதங்களாகத் தடைப்பட்டிருந்தன. ஹஜ் ஏற்பாடுகளிலும் தாமதங்கள் நிலவின. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ்வின் ஏற்பாடாகும். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஹஜ் விவகாரங்களுக்கு ஒரு புதிய சட்டமூலம் மற்றும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் என்பன துளளரிதப்படுத்தப்படும்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அமைச்சர் ஹலீம் தனது அமைச்சுக் கடமைகளை இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தபால் தலைமையகத்திலுள்ள அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரின் ஊடகச் செயலாளர் ரஷி ஹாசிம் தெரிவித்தார்.