அநீதிக்கு எதிராக உலக நாடுகள் கிளர்ந்தெழுமா?

0 310

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனம் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நேற்று முன்தினம் காஸா வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தன்மையை முழு உலகுக்கும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 12 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தும் தாக்குதல் காஸாவை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூமியாக மாற்றியுள்ளது. அந்த மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று உலகில் அதிகம் உயிராபத்தைச் சந்திக்கும் மக்களாக காஸா மக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களுக்கு அப்பால் காஸாவுக்கான சகல அடிப்படை வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது. முன்னதாகவே காஸாவில் உள்ள 80% மக்களுக்கு சர்வதேச உதவி தேவைப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

காஸாவில் உள்ள ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும், எரிபொருள் இல்லாததால், ஒக்டோபர் 11-ஆம் திகதி மின் உற்பத்தி நின்றுவிட்டது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகள் தங்களது ஜெனரேட்டர்கள் மூலம் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். குறைந்த அளவு எரிபொருளையே கொண்டிருந்த சில மருத்துவமனைகள், சில நாட்களில் தங்களிடம் உள்ள எரிபொருள் தீர்ந்துவிடும் எனக்கூறியுள்ளன.
தண்ணீர் விநியோகத்தைத் துண்டிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையால், ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கன்றனர். உள்ளூரில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் செயல்படுவதற்கும் எரிபொருள் தேவைப்படும்.

காஸாற்கு சரக்கு கொண்டு வரப்படும் கெரேம் ஷாலோம் பகுதியும் மூடப்பட்டுள்ளதால், உணவு இருப்பும் குறைந்து வருகிறது. காஸாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறியுள்ளன.

குறைந்தது இரண்டு இலட்சம் மக்கள், தங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாலும், உயிருக்கு பயந்தும் இடம் பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் ஐ.நா. நடத்தும் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஐ.நா.வின் கூற்றுப்படி, தற்போதைய மோதலுக்கு முன்பே, காசாவில் மின்வெட்டு என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 13 மணிநேரம் மட்டுமே வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்ததாக ஐநா கூறுகிறது.
காசா தனக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரத்தை இஸ்ரேலிடம் இருந்து தான் வாங்குகிறது. மீதமுள்ள மின்சாரம் காசாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அது, இதுவரையிலும், மொத்தமாகவே காசாவின் தேவைக்கு பாதிக்கும் குறைவாகவே இருந்துள்ளது.

மோதலில் இருந்து தப்பிக்க காசாவை விட்டு வெளியேற முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு இல்லை. இஸ்ரேல், காசாவிற்கு வடக்கே உள்ள எரிஸ் கடல் எல்லையை காலவரையின்றி மூடியுள்ளது. அதே நேரத்தில் தெற்கில் எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்லைக் கடக்கும் பகுதியில், இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களால் அந்தப் பகுதியும் மூடப்பட்டது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தி உள்ள பகுதிகளில் காஸாவும் ஒன்று. காசாவில், ஒரு சதுர கி.மீ.க்கு சராசரியாக 5,700க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இது லண்டனில் உள்ள மக்கள் தொகை அடர்த்திக்கு ஈடாக உள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை காசா நகர் பகுதியில் 9,000-க்கும் அதிகமாக உள்ளது.

காசாவின் மக்கள்தொகையில் வெறும் 75% – சுமார் 17லட்சம் மக்கள் – பதிவு செய்யப்பட்ட அகதிகள் என்று ஐ.நா. குறிப்பிடுகிறது. அவர்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் காஸா முழுவதும் அமைந்துள்ள எட்டு நெரிசலான முகாம்களில் வாழ்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட 13,000 வீடுகளில், சுமார் 2,200 வீடுகளை புனரமைக்க இன்னும் நிதி வழங்கப்படவில்லை என கடந்த ஜனவரி மாதம் ஐ.நா. கூறியிருந்தது. பாதி சேதமடைந்த மேலும் 72,000 வீடுகளுக்கு எந்த பழுதுபார்ப்பு உதவியும் கிடைக்கவில்லை என்றும் ஐ.நா. கூறியிருந்தது.
இவ்வாறு மிகப் பாரிய மனிதாபிமான நெருக்கடிக்குள் அம்மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நவீன உலகில் மனித உரிமைகள் குறித்து உரத்துப் பேசும் இந்த யுகத்தில் இவ்வாறு ஒரு மக்கள் குழுமம் அநீதிக்குள்ளாக்கப்படுவதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கில் வலுவாகவுள்ள அரபு நாடுகளால் கூட இந்தவிடயத்தில் இஸ்ரேலுக்கு அழுத்தம் வழங்க முடியாமல் உள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி நீதியை விரும்பும் சகல மக்களுக்கு இஸ்ரேலின் அநீதிக்கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரானதும் பலஸ்தீனுக்கு ஆதரவானதுமான கோஷங்களால் உலக நாடுகள் அதிர்ந்து கொண்டுள்ளன. எனினும் இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

பிரார்த்தனைதான் நமது நம்பிக்கை. அந்த வகையில் பலஸ்தீன மக்கள் தற்போது அனுபவிக்கும் கொடுமைகளிலிருந்து விடிவு கிடைக்க நாம் அனைவரும் நோன்பு நோற்று பிரார்த்திப்போமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.