பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால கணக்கறிக்கை
மங்கள சமர்ப்பிப்பார்; வாக்கெடுப்பும் நடத்தப்படும்
அடுத்தாண்டின் முதல் நான்கு மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தேசிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றங்களையடுத்து தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமையப்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் குறுகிய கால அரசாங்கமும் இடைக்கால வரவு செலவுத் திட்ட கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்கத் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், முறையற்ற அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் நீதிமன்றில் வழக்கொன்றை தொடுத்த நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் நிராகரிக்கப்பட்டது. கடந்த 50 நாட்கள் அரசியல் நெருக்கடியில் தேசிய அரசாங்கமாகவோ அல்லது தனி அரசாங்கமாகவோ எவரும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது போய்விட்டது. இதனால் அடுத்த ஆண்டுக்கான அரச நிதி ஒதுக்கீடு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அரச துறையினருக்கான சம்பள சிக்கல் மற்றும் அரச நிருவாக நிதி ஒதுக்கீடுகள் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயி்ற்றுக்கிழமை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று 29 பேர் உள்ளடங்கிய புதிய அமைச்சரவையொன்றையும் நியமித்தார். அதற்கமைய தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கமொன்று அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றுக் கூடிய அமைச்சரவை நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கையாள இடைக்கால வரவு செலவுத்திட்ட கணக்கறிக்கையொன்றை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது. இன்றைய தினம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்டம் குறித்த முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை சமர்ப்பித்து அடுத்த நான்கு மாத காலத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளார். கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான முழுமையான வரவு செலவுத் திட்டத்தை அடுத்தாண்டு மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
-Vidivelli